திக்... திக்.. பங்களா! (9)
சென்றவாரம்: விடுமுறைக்கு கொள்ளு தாத்தாவை பார்க்க குற்றாலம் வந்த இரட்டையர் மதுவும், வினுவும், பங்களா அறைகளை பார்வையிட்டனர். ஒரு அறைக்குள் இருந்த சகதி பூதம் மிரட்டியது. இனி -சகதி பூதத்தின் விரல்கள், விபரீதமாய் நீண்டு வராண்டாவில் சடுகுடு ஆடின. விரல்களில் சிக்காமல் மதுவும், வினுவும் கழைக்கூத்தாடினர். விரல் நுனியில் கூரிய கொக்கி போன்ற நகங்கள்.சற்றே தைரியத்துடன் ஒரு விரலை பற்றி ஓடித்தான் வினு; அது உருகிய குல்பி போல் அறுந்து விழுந்தது. பல்லி வால் போல் துடித்து கரைந்தது.உடனே மற்ற விரல்கள் பின் வாங்கின; தொடர்ந்து அறைக்குள் பிரளயம் நடப்பது போல சத்தம் கேட்டது.ஆயிரம் வெறிநாய்கள் உறுமுவது போல இரைச்சல்; ஒன்றையொன்று ஆக்ரோஷமாய் கடித்துக் கொள்ளும் சத்தம். வலி தாளாமல் ஊளையிடும் ஒலி. அறைக்குள் நடப்பதை அனுமானித்தான் வினு.சாவித்துவாரம் வழியே தெரிந்தது, ஒரு பூதம் தான். ஆனால், ஆயிரக்கணக்கான சகதி பூதங்கள் சண்டையிடுவது கேட்டது. ஒற்றை அறையில் எப்படி இத்தனை சகதி பூதங்கள் கூடின. 'சகதிக்கும், பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன... மலை மாளிகைக்கும், சகதி பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன' என்ற கேள்விகள் வினுவை உலுக்கின.'என்னடா திகைச்சு நிக்கற...' என்றாள் மது.'சகதி பூதங்களை பத்தி பல கோணங்கள்ல யோசிச்சேன்...''இங்கு நிற்பது ஆபத்தானது; கீழே போவோம்; தாத்தா கிட்ட நடந்ததை விவரிப்போம்...''ஏன் அந்த அறைக்குள்ள எட்டிப்பாத்தீங்கன்னு திட்டினா...''திட்டட்டும்; அவருக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துறது நல்லது. அவருக்கே தெரியாம சகதி பூதங்கள் அறையில தங்கி இருக்குதோ என்னவோ...''எனக்கு அப்படித் தோணல...''ஏன்...''அந்த அறைல சகதி பூதங்கள் இருக்கிறது தெரிஞ்சு தான், நம்பள பார்க்கூடாதுன்னு எச்சரிச்சாரோ என்னவோ தாத்தா...'இருவரும் மாடிப்படிகளில் இறங்கினர்.தாத்தாவும், பாட்டியும் பேசிக்கொண்டிருந்தனர்; மது, வினுவைப் பார்த்ததும், 'மலை மாளிகையை சுத்திப் பார்த்தீங்களா...' என்றனர்.'நீங்க பார்க்க கூடாதுன்னு சொன்ன, 99வது அறையை சாவித்துவாரம் வழியா பார்த்துட்டோம்...''அதிகப்பிரசங்கிகளா...' என கடிந்த தாத்தாவை சமாதானப்படுத்திய பாட்டி, 'அந்த அறைக்குள்ள ஒண்ணும் இருக்காதே...' என்றாள்.'ஒரு சகதி பூதம் பாத்தேன்...'சிரித்த தாத்தா, 'அதென்ன சகதி பூதம்! அப்படி ஒண்ணு இருக்கா என்ன... இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லையே...' என்றார்.'ஜாக்கிரதை தாத்தா... அந்த அறையை பயன்படுத்தாமயே பூட்டி வெச்சுருக்கிறது தெரிஞ்சு, சில சகதி பூதங்கள் தங்கியிருக்குதுங்க; அடிச்சு துரத்தணும்...''செண்பாவுடன் போய் பாருங்க. சகதி பூதங்கள் இருந்தா அடிச்சு விரட்டுங்க...' என்றாள் பாட்டி.தாத்தா எழுந்து, துப்பாக்கியை துாக்கியபடி, செண்பாவை அழைத்தார்.அரக்க பரக்க ஓடி வந்து வெறித்தாள். ஒரு குத்தீட்டியை எடுத்தபடி மாடிப்படிகளில் ஏறினாள். அவளுடன் மிடுக்காக பின் தொடர்ந்தார் தாத்தா. அவரது துப்பாக்கி எந்த நொடியும் சுட காத்திருந்தது. அறை எண்: 99 -பெரிய சுத்தியலால் பூட்டை உடைக்க ஆரம்பித்தாள் செண்பா. தொடர்ந்த சம்மட்டி அடியில் பூட்டு பிளந்தது. கதவு திறந்தது. உள்ளே ஓடினான் வினு. மிகப்பெரிய அறை காலியாக கிடந்தது; எதுவும் இருந்ததற்கான தடயம் இல்லை. ஒட்டடையில் சிலந்திப் பூச்சிகள் ஓடி விளையாடின.அங்குமிங்கும் ஓடி, இல்லாத ஒன்றை தேடுகிறான் வினு என்ற பாவனையில் மந்தகாசமாக சிரித்த தாத்தா, 'விழிச்சுக்கிட்டே கனவு காணுறியே...' என்றார்.'என்ன தாத்தா இப்படி கேக்கறீங்க... உங்களை கூட்டிட்டு வரதுக்குள்ள மறைஞ்சு போயிருச்சு...'செண்பாவின் முகம் இறுகியிருந்தது; கண் சிமிட்டவே இல்லை.'செண்பா... வினு சொல்றதை நீ நம்புறியா...' என்றார் தாத்தா.ஆங்காரமாக முறைத்தாள் செண்பா. அவளது கண்களில் கொலை வெறி மிளிர்ந்தது. தாத்தா செல்லமாய், 'வினு... பெரியவங்களை ஏளனமா பேச கூடாது. நிறையப் பேசுறவங்க அறிவாளியும் இல்லை; பேசவே பேசாதவங்க முட்டாளும் இல்லை...' என்றார்.இதை கேட்டதும், செண்பாவின் முகம் இளகியது.கண்களை குறுக்கி யோசித்து, 'தாத்தா... ஒரு சந்தேகம்...' என்றான் வினு.'இன்னுமா... சரி... கேளு...''இந்த அறைல ஒண்ணும் இல்லைன்னா ஏன் பூட்டி துவாரத்துல அரக்கை உருக்கி ஊத்னீங்க... மத்த அறைகளை மாதிரி திறந்து விட்டிருக்கலாமில்ல...'எரிச்சலுற்றார் தாத்தா.வினுவிடம், 'கண்ட கேள்விகள் எல்லாம் ஏன்டா கேக்ற...' என்றாள் மது.'சாதாரணமாத்தான் சொன்னேன்; விசேஷ காரணங்கள் இல்லை...'கேள்விக்கு நேரடி பதில் இல்லாததால், மீண்டும் வாய் திறக்கப் போன வினுவின் இடுப்பில் கிள்ளினாள் மது.ஊமை மொழியில், 'இத்தோடு விடு...' என்று கண்சிமிட்டினாள்.நால்வரும் இறங்கிய போது, 'செண்பா... அந்த அறைக்கு வேற பூட்டு போட்டு பூட்டிரு...' என்றார் தாத்தா.தலையசைத்து சமையலறைக்குள் மறைந்தாள்.பாட்டி நிமிர்ந்து, 'சகதி பூதங்கள் இருந்துச்சா...' என்றாள்.தாத்தா சிரித்தார். மவுனித்தான் வினு.'மதிய உணவு சாப்பிடலாமா...' என்றார் தாத்தா.'இன்னும் அரை மணி நேரம் போகட்டும்...' என்ற வினு, மாளிகையின் கொல்லைப்புறத்துக்கு மதுவுடன் வந்தான்.அங்கு, சேறும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலப்பகுதி ஒன்று இருந்தது. சகதியின் மீது, பச்சைப்பாசி படர்ந்திருந்தது. வினுவின் கண்ணகள் விரிந்தன. சகதி நிலத்திலிருந்து அண்ணாந்து பார்த்தால், 99வது அறையின் பின்சுவர் தெரிந்தது.'என்னடா சிவில் இன்ஜினியர் மாதிரி மாளிகையின் முன்னும், பின்னும் அளக்குற...''நாம அறைக்குள்ள பார்த்த சகதி பூதங்கள் உருவான இடம் இதுதான்; தற்சமயம் அவை பதுங்கியிருக்கும் இடமும் இதுதான்...''ஓவ்... பயமுறுத்தாதே...''இன்னும் சில நாட்கள் பொறு; சகதி பூதங்கள் ரகசியத்தை வெட்டவெளிச்சமாக்குகிறேன்...' என்றான் வினு. மீண்டும் மதுவை இழுத்துக் கொண்டு சமையலறைக்கு ஓடினான். இருவரையும் செண்பா எதிர்பார்க்கவில்லை. ஏறக்குறைய, 200 பேர் சாப்பிடும் அளவுக்கு, அசைவ சமையல் தயாரித்துக் கொண்டிருந்தாள்.கோழித்தலைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. வெள்ளாட்டுத் தலைகள்; ஓலைப் பெட்டியில் அவித்த முட்டைகள்; ரத்த பொரியல்; சட்டி சட்டியாய் எலும்பு சூப்; மூளை மசாலா...'மொத்தமே ஆறு, ஏழு பேருதான்; அப்புறம் ஏன், 200, 300 பேருக்கு விருந்து சமைக்கிற செண்பா... யார் அந்த அழையா விருந்தாளிகள்...' என்றான் வினு.ஆங்காரமாய் கோழி அறுக்கும் கத்தியை துாக்கியபடி, மது, வினுவை நோக்கி பாய்ந்து வந்தாள் செண்பா.- தொடரும்...