உள்ளூர் செய்திகள்

அரைக்கண் அஞ்சலி!

சென்னை, மேற்கு மாம்பலம், ஸ்ரீசீதாராம் வித்யாலயாவில், 1990ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மகாத்மா நினைவு தினத்தன்று காலை, 11:00 மணிக்கு அஞ்சலி செலுத்த சங்கு ஊதினர்.வகுப்பறையில் இருந்த இடத்திலேயே கண் மூடி, அடுத்தமுறை, சங்கு ஒலிக்கும் வரை மவுனமாக நிற்க வேண்டும். நானும், அதுபோல் நின்றேன். மனதுக்குள் குறும்புத்தனம் எட்டிப்பார்க்க, 'மற்றவர்களும் கண்ணை மூடியுள்ளனரா' என, அரைக்கண் திறந்து, பார்வையை அலையவிட்டு, மீண்டும் மூடிக் கொண்டேன்.அன்று மாலை, வகுப்பாசிரியை சுதா அழைத்தார். காந்தியடிகள் படம் போட்ட புத்தகம் ஒன்றை தந்தார். மிக எளிய நடையில் அமைந்திருந்தது. 'அன்னைக்கு, அண்ணல் செய்த சத்தியம்' போன்ற தலைப்புகள் கவர்ந்தன. அதை படித்து, தியாகத்தின் மகத்துவத்தை உணர்ந்து, மனப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினேன்.இப்போது என் வயது, 34; காந்தி எழுதிய சத்தியசோதனை உட்பட நுால்களை வாசித்திருக்கிறேன்; அவரது போராட்டம், நாட்டுப்பற்று குறித்து, பலர் எழுதிய புத்தகங்களையும் படித்திருக்கிறேன். ஆயினும், அறியாத வயதில் செய்த குறும்பை மன்னித்து, அறிவு புகட்டும் வகையில், அந்த ஆசிரியை வழங்கிய புத்தகம் தான், எண்ணத்தில் நிறைந்துள்ளது.- ஜனனி ராம், சென்னை. தொடர்புக்கு: 98412 68750


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !