உள்ளூர் செய்திகள்

ஆமையும் தவளையும்!

தெப்பக்குளம் படிக்கட்டில், தவளை ஒன்று, தத்தி தத்தி வந்து கொண்டிருந்தது.படிக்கட்டின் ஓரமாக நீந்திய ஆமை 'எப்போதும் உற்சாகத்தோடு காணப்படுகிற நீ, இன்று மிகவும் சோர்வோடு இருக்கிறாயே! அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாமா...' என்று கேட்டது.'நீ என்னை தினமும் கவனித்துக் கொண்டிருக்கிறாய் என நினைக்கிறேன்; அதனால் தான், என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே கவலையோடு இருப்பதை தெரிந்து கொண்டாய். சரி... ஆர்வத்துடன் கேட்பதால் சொல்கிறேன்; நீ தான் நல்லதொரு முடிவைச் சொல்ல வேண்டும்...' 'சரி...' 'இதோ... அருகில் இருக்கும் குட்டையில் வசித்து வருகிறேன்; ஒரு நாள், என்னை மறந்து உற்சாகத்தோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த பக்கமாக, தவளை இன தலைவர் வந்து கொண்டிருந்தார். நானோ, விளையாட்டில் கவனமாக இருந்தேன்... 'இதைக் கண்ட தலைவர், மிகவும் ஆத்திரமைடந்து விட்டார். நான், அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று முடிவு செய்து விட்டார். அதனால், கூட்டத்தில் இருக்க கூடாது என, உத்தரவு போட்டு, வெளியேற கூறினார்...''ஓ... அப்படியா விஷயம். நீ என்ன பதில் சொன்னாய்...''நான், மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டேன். அவர், ஏற்றுக் கொள்வதாயில்லை. என்னை மிகவும் தவறாக எடைபோட்டு, மொத்த கோபத்தையும், என்னிடம் காட்டுகிறார். என் இனத்தை பிரிந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும், தலைவர் உத்தரவை மீற முடியாதே. அதனால் தான், சோகம்...' என்றது தவளை.'நான் ஒரு யோசனை கூறுகிறேன்; அதன்படி நடந்தால், மிக எளிதாக உன் தலைவரின் அன்பைப் பெறலாம்...' என்றது ஆமை.'நல்லது... நான் அந்த குட்டையில் வாழ வேண்டும்! அதே நேரம், தலைவரின் நன்மதிப்பையும் பெற்றாக வேண்டும். அதற்கு, நீ கூறும் யோசனையை கடைபிடிக்கிறேன்...' 'சரி... பதட்டப்படாதே. உடனே குட்டையின் அருகே செல். அந்த பக்கம் வந்து செல்வோரின் கண்களில் படும்படி, கண்ணை மூடி தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிரு! நீ பய பக்தியுடன் தியானம் செய்வதாக நினைத்து, அந்த பகுதிக்கு வருவோர் எல்லாம், அதற்கான காரணத்தைக் கேட்பர். அந்நேரத்தில், 'என் தலைவர் நோய் நொடி இன்றி நெடுங்காலம் வாழ வேண்டும்' என்று தியானம் செய்வதாக சொல்... 'அதை கேட்பவர், உன் தலைவரிடம் தெரியப்படுத்தி விடுவர். வெறுத்தவருக்கே, நீ நன்மை செய்கிறாயே என்று, பாராட்டி தலைவர் ஏற்றுக் கொள்வார்...' என்றது ஆமை.இந்த யோசனை பிடித்திருந்தது; அதன்படி செயல்பட குட்டை அருகே தியானம் செய்தது. அதை பார்த்த உயிரினங்களிடம் தியானத்துக்கான காரணத்தை கூறியது. ஆரம்பத்தில், தியானம் செய்வது போல் நடித்த தவளைக்கு, உண்மையிலேயே ஈடுபாடு ஏற்பட்டது. தவளையின் தியானம் தலைவருக்கு தெரிய வந்தது. அது நெகிழ்ந்து பாராட்டியதுடன், தண்டனையையும் ரத்து செய்தது. உயர்ந்த பதவி கொடுத்தது. தவளையின் மதிப்பு பெருகியது.மகிழ்ந்த தவளை, ஆமையை சந்தித்தது. மனம் நெகிழ்ந்து, 'என் வாழ்க்கையில் மாற்றம் நடந்து விட்டது; உனக்கு மிகவும் நன்றி...' என்றது.'என் யோசனை நிச்சயம் வெற்றி தரும் என்று தெரியும்...' என்றது ஆமை. 'அது உண்மை தான்! உன் யோசனைப்படி தான் நடந்தேன். முதலில் தியானம் செய்வது போல் நடித்தாலும், உண்மையான தியானத்தை கற்றுக் கொண்டேன். அதையே கடைப்பிடித்தேன். கடுகளவும் போலித்தனம் காட்டவில்லை. இதுவே வெற்றியை தேடி தந்ததாக நம்புகிறேன்...' என்றது தவளை. 'நன்றாக சொன்னாய்! நல்ல செயல்களை எண்ணும் போதே, அதுவாக மாறி விடுகிறோம்...' என்றது ஆமை.அன்பு உள்ளங்களே... எதையும் உண்மையாகச் செய்தால், நிச்சயமாக பலன் உண்டு; உண்மையுடன் வாழ்ந்து பழகுங்க.பதிப்பகம்: சுந்தர் நிலையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !