வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 75; நான் சிறுமியாக இருந்த போது, பொழுது போக்க, திரை அரங்கு, 'டிவி' தொடர், அலைபேசி எல்லாம் இல்லை. மனதை மகிழ்விக்கும், காமிக்ஸ் புத்தகங்களும், அம்புலிமாமா போன்ற இதழ்களும் தான் இருந்தன!இப்போது, வெள்ளிக்கிழமைகளுக்காக காத்திருக்கிறேன். அன்று தான், 'சிறுவர்மலர்' கைகளில் தவழ்ந்து, இளம் பருவத்துக்கு என்னை அழைத்துச் செல்லும். பக்கத்துக்குப் பக்கம், வண்ணமயமான படக்கதை; சிந்திக்க வைக்கும் தொடர்கதை; மலரும் நினைவாக, 'ஸ்கூல் கேம்பஸ்' மற்றும் சமையல் தகவல்கள் என, 10 வயதுக்கே என்னை அழைத்துச் செல்கிறது.என்ன வேலை இருந்தாலும், வெள்ளிக்கிழமைகளில், 'பின் டிராப் சைலண்டாக' வீடு இருக்க வேண்டும். இது, என் அன்பு மகன்களின் உத்தரவு. அப்போது தான், சிறுவர்மலர் இதழை ரசித்து வாசிக்க முடியும் என்பது அவர்கள் முடிவு.ஆம்... கடும் மூட்டு வலியையும், தீராத உடல் சோர்வையும் மறந்து, ஒரு குழந்தையாக, சிறுவர்மலர் இதழுடன் கனவுலகில் நான் பயணிக்கும் நேரம் அது!- வி.தமிழரசி, திருப்பூர்.