பறவை என்ன சொல்லுச்சு!
நீண்ட காலத்திற்கு முன் மத்திய ஆசியாவில் ஒரு சுல்தான் இருந்தார். அவரது பெயர் கஜினி முகமது. அவர் ஒரு வெற்றி வீரராக விளங்கினார்.அண்டை நாடுகளைப் படையெடுத்து வெற்றி கண்டார். ஆனால், வெற்றி பெற்ற நாடுகளில் அவர் தன்னுடைய ஆட்சியை நிறுவியதில்லை.அவர் ஒருநாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் சமயத்தில் அந்நாட்டில் உள்ள மக்களைக் கொன்று, நகரம் மற்றும் கிராமங்களை அழிக்கும்படி தனது படைவீரர்களுக்கு உத்தர விடுவார். படைவீரர்களும் தங்களது மன்னர் கூறியவாறே செய்து முடித்தனர். அந்நாட்டில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தனர்.அரசர்களையும், சுல்தான்களையும், மக்களையும் நடுநடுங்க வைத்த கஜினி முகமது, ஒருநாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு, தனது பிரதம மந்திரியும், ராணுவத் தளபதியுமான தனது சகாவுடன் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது...!இரண்டு ஆந்தைகள் அம்மரத்தின் கிளையில் உட்கார்ந்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன.அவற்றின் குரலைக் கேட்ட கஜினி முகமது, தன் பிரதம மந்திரியிடம், ''பிரதம மந்திரியாரே! உங்களுக்குத்தான் பறவைகள் பேசும் பாஷை புரியுமே, அந்த ஆந்தைகள் என்ன பேசிக் கொள்கின்றன என்று கேட்டு அறிந்து சொல்லுங்கள்,'' என்று கேட்டுக் கொண்டார்.பிரதம மந்திரி ஆந்தைகளின் பேச்சை உற்றுக் கேட்டார். பின்னர், அவர் தனது மன்னர் கஜினி முகமதுவிடம் கூறியதாவது-''அரசே! அவை இரண்டும் ஆண் ஆந்தைகள். ஒரு ஆந்தைக்கு ஒரு ஆணும், இன்னொரு ஆந்தைக்கு ஒரு பெண்ணும் உள்ளன. அவை தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கின்றன. அதுதான் பிரச்னை,'' என்று பிரதம மந்திரி கூறினார்.''அப்படி என்ன பிரச்னை? அவைகளுக்கிடையே!'' என்று கேட்டார் கஜினி முகமது.''அரசே! மணமகனின் தந்தையான ஆந்தை, வரதட்சணையாக மணமகளின் தந்தையிடம், அழிந்துபோன நூறு கிராமங்களைக் கேட்கிறது. அதற்கு மணப்பெண்ணின் தந்தையான ஆந்தை, ஆயிரம் கிராமங்களைக் கொடுப்பதாகக் கூறுகிறது. ஆனால், மணமகனின் தந்தையான ஆந்தை ஆயிரம் கிராமங்கள் வேண்டாம்; நூறு கிராமங்கள் போதும் என்று கூறுகிறது. இதுதான் அவைகளுக்கிடையே உள்ள பிரச்னை!'' என்று பிரதம மந்திரி, கஜினி முகமதுவிடம் கூறினார்.''இது என்ன பிரச்னை? அதிக கிராமங்களை கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே?'' என்று கேட்டார் சுல்தான் கஜினி முகமது.''அரசே! மணமகனின் தந்தையான ஆந்தை என்ன கூறுகிறது தெரியுமா?'' என்று கூறினார் பிரதம மந்திரி.''என்ன கூறுகிறது? சொல்லுங்கள்!'' என்று கேட்டார் கஜினி முகமது.''மணமகனின் தந்தையான ஆந்தை கூறியதாம்! இந்த கஜினி முகமது இருக்கிறாரே, அவர் எத்தனை கிராமங்களை அழித்துள்ளார் தெரியுமா? அவரால் அழிக்கப்பட்ட அந்தக் கிராமங்களை அவரால் மீண்டும் உருவாக்க முடியுமா? முடியாது. அப்படியிருக் கையில் அவற்றை அழிக்க மட்டும் அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?''இறைவனின் படைப்பை அழிப்பவர் யாராக இருப்பினும், அவரை இறைவன் எப்படி மன்னிப்பார்! நிச்சயம் கடவுள் அவனைத் தண்டிப்பார். இந்தக் கிராமங்கள் எல்லாம் கடவுளின் விருப்பத்துக்கு மாறாக, அழிக்கப்பட்டவை. அதனால், அவற்றை என்னால் ஏற்க முடியாது,'' என்று அந்த ஆந்தை கூறியது.ஆந்தைகளின் பேச்சை பிரதம மந்திரியின் மூலமாகக் கேட்டறிந்த சுல்தான் கஜினி முகமது, தனது தவறை உணர்ந்தான்.தன் படை வீரர்களுக்குப் பின்வரும் கட்டளையைப் பிறப்பித்தான் கஜினி முகமது.''படை வீரர்களே! இனி நாம் எந்ந நாட்டின் மீது படையெடுத்தாலும், மக்களைக் கொல்லாதீர்! கிராமங்களை அழிக்காதீர்! இறைவன் படைப்பைப் பாதுகாப்பீர்!'' என்று கட்டளையிட்டார்.***