மன உறுதி!
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1964ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஜனவரியில், 27 நாட்கள் பள்ளி செல்ல இயலவில்லை. பொதுத் தேர்வை ஓரளவு எழுத முடியும் என நம்பினேன். ஆனால், திகில் தந்தது கணக்குப் பாடம். கணித ஆசிரியர் ராகவேந்திரராவிடம் ஆலோசனை கேட்க சொன்னார் அப்பா. அதன்படி, அவரை சந்தித்த போது, 'பொதுத்தேர்வு முடியும் வரை, காலை, 6:30 மணிக்கு டியூஷனுக்கு வா... குறைந்த பட்ச மதிப்பெண் வாங்க சொல்லி தருகிறேன்...' என்றார். இது மிகுந்த ஆறுதல் அளித்தது.பள்ளி முடிந்ததும், மிதிவண்டியில், 13 கி.மீ., பயணித்து சென்று, என் பாட்டி வீட்டில் தங்குவேன். மறுநாள் காலை, அதே பகுதி ஆசிரியர் வீட்டில் டியூஷன் கற்று, அதுபோல் திரும்பி வந்து பள்ளி செல்வேன். உடல் பலவீனத்தால் சிரமமாக இருந்தது. ஆனால், தேர்ச்சி பெற வேண்டும் என்ற மன உறுதியால், தவறாமல் கடைபிடித்து, வெற்றி இலக்கை தொட்டேன். தற்போது, என் வயது, 76; எம்.ஏ., பட்டம் பெற்று, தமிழக அரசில், 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இலவசமாக டியூஷன் கற்றுத் தந்து, பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்ய உதவிய அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- சத்திய நாராயணன், சென்னை.தொடர்புக்கு: 88257 28865