91 வயது, மிமிக்ரி கலைஞர், சீனிவாசன்!
இயக்குனர், பாலசந்தர் இயக்கத்தில், 1974ல் வெளியான, அவள் ஒரு தொடர்கதை படத்தையும், அதில் இடம் பெற்ற, 'கடவுள் அமைத்து வைத்த மேடை...' பாடலையும் யாரும் மறக்க முடியாது.காரணம், 'மிமிக்ரி' கலந்து பாடப்பெற்ற அந்தப் பாடலில் இடம்பெற்ற, மான், முயல், யானை, கிளி மற்றும் தவளை உள்ளிட்ட பல குரல்களின் சத்தம், சிறியவர்களை மட்டுமல்ல, பெரியவர்களையும் ரசிக்க வைக்கும்.அந்தப் பாடலில் இடம்பெற்ற பல, 'மிமிக்ரி' குரல்களுக்கு சொந்தக்காரர் தான், சீனிவாசன். வயது, 91. ரயில்வேயில், அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றவர்.படம் வெளிவந்து, 46 ஆண்டுகளாகிறது. இருந்தும், அதே மிமிக்ரியை, இப்போதும் செய்து காட்டியது தான் பெரிய விஷயம்.சென்னை, தி.நகர் நகைச்சுவை மன்றத்தின் கூட்டத்திற்கு வந்த இவரை, மன்றத்தின் தலைவரும், சீனிவாசனின் மகனுமான, சேகர் மேடையேற்றி விட்டார். அதன் பின், இவரது விகடக் கச்சேரி களை கட்டியது.அந்தப் பாடல்களுக்கான விகடங்களை செய்து முடித்தவர், மனோரமா பாடிய, 'வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா விட மாட்டேன்...' என்ற பழைய பாடலை கர்நாடகா, இந்துஸ்தானி இசையில், பாகவதர்கள் பாடினால் எப்படி இருக்கும் என்பதை, மாறி மாறி பாடிக் காண்பித்து, கை தட்டலைப் பெற்றார்.இளம் வயதிலேயே விகடம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் என்று விகடக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, ஆதரவு பெருகவே, மேடை ஏற ஆரம்பித்தார்.'போதும்பா, வயசாயிடுச்சு... ஓய்வு எடுங்க...' என்று, பிள்ளைகள் சொன்னாலும், 'நாலு பேரை, சிரிக்க வைப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம். அதை விடுவானேன்...' என்றபடி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களம் கண்டு வருகிறார்.'நகைச்சுவை உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தால், எந்த வயதிலும், 'எனர்ஜி'யுடன் இருக்கலாம்...' என்கிறார். அவரது அலைபேசி எண்: 90031 28091 வயது மூப்பு காரணமாக, காது கேட்பதில் இவருக்கு பிரச்னை; இதைப் புரிந்து, வாசகர்கள் அவருடன் பேசலாம்.எம். எல். ராஜ்