உள்ளூர் செய்திகள்

ஆச்சி மனோரமா! (11)

தில்லானா மோகனாம்பாள் படத்தில், மனோரமா சிறப்பாக நடித்ததற்கு காரணம், ஏ.பி.நாகராஜன்.ஏனென்றால், முதல் நாள் படப் பிடிப்பின்போது, அவரை தனியாக அழைத்த ஏ.பி.நாகராஜன், 'எல்லாரும் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கின்றனரே என்று நினைத்து பயப்படாதே... அவங்க எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள் தான்; அவங்க எல்லாரையும் விட, உன்னை பெரிய ஆளா நினைச்சு நடி...' என்று உற்சாகப்படுத்தினார்.அவரது இந்த உற்சாகம் தான் மனோரமாவை, 'ஜில் ஜில் ரமாமணி' கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வைத்தது.இப்படத்திற்கு பின், ஏ.பி.நாகராஜனின், கண்காட்சி திரைப்படத்தில் நடித்தார், மனோரமா. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற போது, 'யூனிட்டி கிளப்' என்ற நாடக மன்றத்தின் நாடகங்களிலும் நடித்து வந்தார், மனோரமா. அந்நாடகத்தில், முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பிரபல நடிகர்களும் நடித்தனர்.இந்நிலையில், காசே தான் கடவுளடா என்ற நாடகத்தை நடத்தி வந்தார், சித்ராலயா கோபு. இந்நாடகத்திலும் நடித்தார், மனோரமா. அது, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சமயம்... மும்பை சண்முகானந்த சபாவில், அந்நாடகத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாடக குழுவினர் அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன்னரே, மும்பைக்கு ரயிலில் புறப்பட்டு சென்று விட்டனர்; கண்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால், மனோரமாவால் செல்ல முடியவில்லை. அதனால், பொங்கல் அன்று, மும்பை செல்வதற்கு, மனோரமாவிற்கும், அவரது மகன் பூபதிக்கும் இரண்டு விமான டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்திருந்தனர், நாடக குழுவினர். அதற்கு முன் விமானத்தில் மனோரமா பயணித்ததே கிடையாது. அதுவே முதல் முறை. பூபதியோ சிறுவன். எனவே, கொஞ்சம் பயமாக இருந்தது. இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. அது, சென்னையிலிருந்து மும்பைக்கு நேரடியாக விமானம் இல்லை; ஐதராபாத் சென்று, அங்கிருந்து இன்னொரு விமானத்தை பிடித்து, மும்பை செல்ல வேண்டும்.தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதால், 'எப்படித்தான் மும்பைக்கு போகப் போகிறோமோ...' என்று கவலை ஏற்பட்டது.படப்பிடிப்பு முடிந்ததும், அவசர அவசரமாக விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தை பிடித்து விட்டனர். ஒருவித கலக்கத்துடனேயே இருக்கையில் அமர்ந்தபோது, அருகில் இருந்தவரை உற்றுப் பார்த்தார். அவர், பிரபல கர்நாடக இசைக் கலைஞர், எம்.எல்.வசந்தகுமாரி.அவரோடு அறிமுகம் கிடையாது என்றாலும், சக கலைஞர் என்பதே ஆறுதலை தந்தது. தானாகவே சென்று, வசந்தகுமாரியிடம், தன்னை அறிமுகம் செய்து கொண்டார், மனோரமா.'உங்கள அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமே இல்ல; தில்லானா மோகனாம்பாள் படம் பாத்திருக்கேன். உங்க கேரக்டர் ஆழமா பதிஞ்சு போச்சு...' என்று கூறி, சகஜமாக பேசத் துவங்கினார், வசந்தகுமாரி. பயம் நீங்கி, நிம்மதியடைந்தவர், தனக்கு விமான பயணம் புதிது என்பதையும், ஐதராபாத்தில் இறங்கி, வேறு விமானத்தை பிடிப்பதற்கு கவலையாக இருக்கிறது என்பதையும் வெகுளித்தனமாக அவரிடம் கூறினார்.'அதப்பத்தி கவலைப்படாதீங்க... ஐதராபாத்தில், மும்பை விமானத்தை பிடிக்க வேண்டிய ஏற்பாட்டை செஞ்சு தர்றேன்...' என்று தைரியம் கொடுத்தார், வசந்தகுமாரி.அப்படியே ஐதராபாத் வந்ததும், அவருக்கு தெரிந்த ஒருவரை, ஆச்சியுடன் அனுப்பி, டிக்கெட்டை மாற்றி, மும்பை விமானத்தில் ஏற்றி விடுவாறு கூறினார். பின், மனோரமாவிடம் விடைபெற்றார், வசந்தகுமாரி. சிறிது நேரத்தில், அந்த அறிவிப்பு வெளியானது... மும்பை செல்லவிருக்கும் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், மாலை, 4:00 மணிக்கு தான் அடுத்த விமானம் என்றும் அறிவிக்கப்பட்டது.இதைக்கேட்ட வசந்தகுமாரி, மீண்டும் திரும்பி வந்து விபரத்தை தெரிவித்து, 'மாலை, 4:00 மணி வரை, விமான நிலையத்தில் என்ன செய்யப் போறீங்க... பேசாம என் கூட வாங்க...' என்று உரிமையோடு அழைத்தார். அதுவும் நல்லதாக தெரியவே, அவருடன் புறப்பட்டார், மனோரமா.அதே நேரத்தில், நண்பகலுக்குள், மனோரமா மும்பை வந்து சேராததால், நாடக குழுவினர் பதற்றம் அடைந்து, ஐதராபாத் விமான நிலையத்திற்கு தொலைபேசியில் விசாரித்தனர். மாலை, 4:00 மணிக்குதான் அடுத்த விமானம் என்றதும், 'டென்ஷன்' குறைந்து சகஜநிலைக்கு திரும்பினர்.மாலை, 4:00 மணி விமானத்தை பிடிப்பதற்கு புறப்பட்டபோது, மற்றொரு நபரை துணைக்கு அனுப்பி வைத்து, மும்பை விமானத்தில் ஏற்றிவிட்டு வருமாறு பணித்தார், வசந்தகுமாரி.அவரது அன்பிற்கும், உதவிக்கும் நன்றி தெரிவித்து, விமான நிலையத்திற்கு மகனுடன் பயணமானார், மனோரமா. ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தால், அங்கு, அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, மாலை, 4:00 மணிக்கு புறப்படயிருந்த விமானம், சில தவிர்க்க முடியாத காரணத்தால், மாலை, 6:00 மணிக்கு தான் புறப்படும் என்று தெரிவித்தனர்.அவ்வளவுதான்... மனோரமா மயங்கி விழாத குறை தான்; அப்படியானால் எப்படி நாடகத்தில் பங்கேற்க முடியும்!மாலை, 6:00 மணிக்கு நாடகம் துவங்க வேண்டும்; முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் ஐதராபாத்தில் என்றால் நாடகம் எப்படி நடக்கும்... மனோரமாவிற்கு தலை சுற்றியது.நாடகக் குழுவினருக்கும் இருப்பு கொள்ளவில்லை. மறுபடியும் ஐதராபாத் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, மனோரமாவுடன் தொலைபேசியில் பேசினர். நாடகத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் தனியாக ஒரு பையில் வைத்து, அதை மட்டும் கையில் வைத்துக் கொள்ளுமாறும், மற்றவைகளை லக்கேஜில் போடுமாறும் யோசனை தெரிவித்தனர்.மேலும், லக்கேஜுக்கான அட்டையை, மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும் நபரிடம் கொடுத்து விடுமாறு கூறினர்.அதாவது, விமான நிலையத்திலிருந்து அப்படியே நாடக அரங்கிற்கு அழைத்து செல்வதுதான் அவர்களின் திட்டம்...— தொடரும்நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.www.shankar_pathippagam@yahoo.com- குன்றில் குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !