உள்ளூர் செய்திகள்

பிற்பகல் விளையும்?

அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, 'பைக்'கின் முன் சக்கரம், 'பஞ்சர்' ஆகி இருந்தது. பூங்கா எதிரிலிருந்த, மெக்கானிக்கிடம் சரி செய்யக் கொடுத்தான், ராகவன்.ஏற்கனவே, வேறொரு வண்டியை, 'பஞ்சர்' பார்த்துக் கொண்டிருந்தார், மெக்கானிக். அதன்பின் தான், ராகவனின் வண்டியை சரி செய்ய முடியும். ஆக, தன் வண்டியை சரி செய்ய, 20 நிமிடங்களாவது ஆகும் என்ற நிலையில், பொழுதைக் கழிக்க பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு, ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த, முதிய தம்பதி, அவன் கவனத்தை கவர்ந்தனர். அவன் தெருவில் வசிப்பவர்கள் தான். ஏதோ நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து, பல ஆண்டுகளுக்கு முன், பணி ஓய்வு பெற்றிருந்தார், அந்த முதியவர் என்று, மனைவி சங்கீதாவின்​மூலம் தெரிந்து கொண்டிருந்தான். இருவருக்குமே காது​கேட்காது. எனவே, சற்று உரக்க பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசியது, ராகவனின் காதுகளில் விழுந்தது. சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, சரி செய்த, 'பைக்'கில் வீட்டுக்கு சென்றான், ராகவன். வாசலிலேயே நின்றிருந்த, எட்டு வயது மகள் ஆர்த்தி, ''அப்பா... எங்க ஸ்கூலிலே இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா?'' என்று கேட்டாள். ''கண்ணு... அப்பா, 'கிரிக்கெட் மேட்ச்' பார்க்கணும். விளம்பர இடைவேளையில நீ, அதைச் சொல்லு,'' என்றபடி, ​வேகமாக உள்ளே நுழைந்து, 'டிவி'யை, 'ஆன்' செய்தான். நல்லவேளை, வர்ணனையாளர்கள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். இன்னும் பந்தயம் துவங்கவில்லை. ''நாளைக்கு, ஆதித்யாவோட பள்ளியில, பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு. இந்தத் தடவையாவது ​நீங்க போங்க,'' என்றாள், சங்கீதா.''வாய்ப்பே இல்லை. நாளைக்கு, ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிச் சுற்று. 'லைவ் ரிலே' பார்த்தே ஆகணும். நடாலையும், பெடரரையும் அடிச்சுக்க ஆளில்லே,'' என்றவன், எந்த உணர்வையும் வெளிக்காட்டாத மனைவியின் முகத்தைப் பார்த்து, ''அது சரி... உனக்கெங்கே இதெல்லாம் தெரியப் போகுது... நம் நாட்டு பெண்கள், ஏன் தான், விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் இருக்கீங்களோ,'' என்று அங்கலாய்த்தான். அப்போது உள்ளே நுழைந்தான், ராகவனின், 10 வயது மகன், ஆதித்யா. அப்பாவை பார்த்ததும், முகத்தில் ஒரு மலர்ச்சி.''அப்பா... முதுகு வலிக்குது,'' என்றான். ''விளையாடும் போது எங்கேயாவது விழுந்திருப்பே அல்லது யாருடனாவது குஸ்தி போட்டியா?'' என்று, ராகவனின் வாய் கேட்டாலும், அவன் கண்கள், சின்னத் திரையில் நிலைத்திருந்தன.விளையாட்டு துவங்கியது. யார் முதலில், 'பேட்' செய்யப் போகின்றனர்... பூவா - தலையா போட்ட நொடியில், ''கடவுளே... நம் அணி தான், 'டாசில்' ஜெயிக்கணும்,'' என, உரத்து குரல் கொடுத்தான், ராகவன். 'டாசில்' வென்றது, எதிரணி. முதுகுவலியில் முனகிக் கொண்டிருந்தான், ஆதித்யா.அவன் முதுகில், களிம்பை தேய்த்து, ''நாளைக்கும் முதுகு வலி இருந்தால், டாக்டரிடம் போக வேண்டியது தான்,'' என்றாள், சங்கீதா. ''அப்பா... நீங்க, என்னை டாக்டரிடம் அழைச்சுட்டுப் போவீங்களா?'' என்றான், ஆதித்யா.மவுனமானான், ராகவன்.ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயம். எதிரணியினர், அருமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர், கொஞ்சம் தடுமாறினார். ஆர்த்தி, 'டாய்லெட்' நோக்கி நடந்தாள். ஏதோ சிந்தனையில், ''ஆர்த்தி... இப்ப, 'டாய்லெட்' போக வேணாம். 10 நிமிஷம் கழிச்சு விளம்பர இடைவேளை வரும். அப்போ போ,'' என்றான், ராகவன். ''ஏம்ப்பா, ஆர்த்தி, 'டாய்லெட்'டுக்குப் போனா என்ன... உங்களுக்கு அவசரமா... நம் வீட்டுல தான் ரெண்டு, 'டாய்லெட்' இருக்கே,'' என்றான், ஆதித்யா.சின்னத்திரையை பார்த்தபடியே, ''முட்டாள்... உனக்கு நினைவில்லையா... போன, 'மேட்சின்' போது, ஆர்த்தி ரெண்டு முறை, 'டாய்லெட்' போனா... ஒவ்வொரு முறையும், நம் அணியின் விக்கெட் விழுந்தது,'' என்றான், ராகவன்.சிரிப்பதா, எரிச்சல்படுவதா என்று தெரியவில்லை, சங்கீதாவுக்கு.நீ, 'டாய்லெட்'டுக்கு போ... என்று, சைகை காட்டினாள். கூடவே, 'இந்த முறை அவள், 'டாய்லெட்'டில் இருக்கும்போது, இந்திய விக்கெட் விழுந்து தொலைக்காமல் இருக்க வேண்டுமே...' என்ற கவலையும் எட்டிப் பார்த்தது. ''அப்பா... எங்க ஸ்கூலில, 'பிக்னிக்' போக ஏற்பாடு செய்யறாங்க. நானும் பெயர் கொடுக்கவா?''''கொஞ்ச​நேரம் வாயை ​மூடிக்கிட்டிரு, ஆதித்யா. இப்படி தொந்தரவு செஞ்சுகிட்டே இருந்தா, என் நண்பன் ரஞ்சித் வீட்டுக்கு போய் தான் இனி, 'மேட்ச்' பார்ப்பேன்.'' மவுனமானான், ஆதித்யா. ஆனால், அவன் முகத்தில் வேதனை. அது முதுகு வலியால் உண்டானதல்ல என்பது சங்கீதாவுக்கு புரிந்தது.'பேட்ஸ்மேன் அவுட்'டா இல்லையா என்பதை, 'பீல்டு' அம்பயரால் தீர்மானிக்க முடியாமல் போக, ​மூன்றாவது அம்பயரின் முடிவுக்காக காத்திருந்தனர். ராகவனின் முகத்தில் மரண அவஸ்தை. ''டேய்... 'நாட் அவுட்'ன்னு சொல்லித் தொலைடா.'' கடவுள், இந்த முறையும் கவிழ்த்து விட்டார். கழிப்பறையிலிருந்து வெளியே வந்த ஆர்த்தியிடம், ''உன்னால கொஞ்ச நேரம் அடக்கிக்க முடியாதா?'' கர்ஜித்தான், ராகவன்.ஆர்த்தி, அவனை ஒருகணம் உற்றுப் பார்த்தாள். பிறகு, வேகமாக ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். ''பிக்னிக் போக, 300 ரூபாய் கொடுக்கணும் அப்பா,'' என்று நினைவு படுத்தினான், ஆதித்யா. ''இந்த மேட்சில, இந்தியா ஜெயிச்சா, நீ, 'பிக்னிக்' போகலாம்,'' என்றான், ராகவன். ''என்னங்க... எதுக்கு எதை முடிச்சுப் போடறீங்க?'' என்றாள், எரிச்சலுடன், சங்கீதா.அவளும் பலமுறை பொறுத்துக் கொள்வாள் தான். ஆனால், அவ்வப்போது குக்கரிலிருந்து, 'ஸ்டீம் வெயிட்'டையும் மீறி, வெளிப்படாமல் இருக்குமா? விளம்பர இடைவேளை அப்போதும் வரத்தான் செய்தது. 'உர்' என்று முகத்தை வைத்து, ராகவனுடன் பேச மறுத்தான், ஆதித்யா. ''கொஞ்ச நேரம் பொறுத்துக்க முடியாதா இவங்களால... இவங்க மேல, நான் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்றதை கொஞ்சமாவது புரிஞ்சுக்கிறாங்களா பாரு...'' என்று, சங்கீதாவிடம் முறையிட்டான். ''அவனை சொல்லிக் குத்தமில்லீங்க. நீங்களும் கொஞ்சமாவது சுய பரிசோதனை பண்ணிக்கணும்.'' சுயபரிசோதனை என்ற வார்த்தை, ராகவனை உலுக்கியது. ஒரு மணிநேரத்துக்கு முன், பூங்காவுக்கு சென்றிருந்தபோது, அந்த முதியவர்களின் உரையாடலின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது, அந்த வார்த்தை. 'வர வர, மகனின் போக்கே சரியில்லை... என்னை அவன் கொஞ்சமும் மதிப்பதில்லை...' என்று சீற்றமாகக் கூறிக் கொண்டிருந்தார், அந்த முதியவர். 'அப்படியில்லே... அவனுக்கு, ஆபீசிலே ஏதாவது, 'டென்ஷன்' ஆக இருக்கும்...' என்று சமாதானம் கூறினார், அவர் மனைவி. 'உனக்கென்ன... உன் மேல அவன் பாசமாக இருக்கான். அதனால, நீ இப்படித்தான் சொல்வே...' என்று, முதியவர் கூறியவுடன், அவர் மனைவி, சட்டென்று ஏதோ பதிலளிக்கத் துவங்கி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சிறிது நேர மவுனத்திற்கு பின், 'நம் பணமெல்லாம் நமக்கு பிறகு, நம் பிள்ளைக்குதானே... எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்போம். வயதான காலத்தில், அலட்சிய போக்கை காட்டினால்...' இப்படி அவர் கூறும்போது, குரல் உடைந்தது தெரிந்தது. ராகவன், சற்றுத் தொலைவில் தான் இருந்தான் என்றாலும், அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்ப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. 'அவனை மட்டும் சொல்லிக் குத்தமில்லே...' என்றார், முதியவர் மனைவி. 'என்னது... என்ன சொல்ல வர்றே...' என்று தடுமாற்றத்துடன் கேட்டார், முதியவர்.'நியூட்டனின் மூன்றாவது விதி தான் செயல்படுது. கடந்த காலத்தில நீங்க எதுக்கு முக்கியத்துவம் கொடுத்தீங்க... போட்ட விதைதானே முளைக்கும். கொஞ்சம் சுயபரிசோதனை ​செஞ்சுக்கிட்டா நல்லது. மத்தபடி, கடவுளை வேண்டிக்குவோம்...' என்றார், முதியவர் மனைவி.அப்போது புலப்படாத அர்த்தம், இப்போது, மனைவி சங்கீதா, சுயபரிசோதனை என்ற வார்த்தையை பயன்படுத்தியதும் தெரிந்தது.'ஒவ்வொரு செயலுக்கும் அதே போன்ற எதிர்வினை இருக்கும்...'- என்ற, நியூட்டனின் மூன்றாவது விதி.உள்ளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது. ஆதித்யாவின் அருகில் சென்று, அவன் முதுகை இதமாக நீவியபடி, ''ஒருநாள், 'பிக்னிக்'கா, போயிட்டு வாயேன்... இப்ப, நாம எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வரலாமா... சங்கீதா, 'டிவி'யை, 'ஆப்' பண்ணு, ஆர்த்தியையும் கூப்பிடு,'' என்றான். வியப்பும், மகிழ்ச்சியுமாக நால்வரும் வெளியே கிளம்பினர். எதிரணி வீரர் வீசிய பந்தை இந்திய, 'பேட்ஸ்மேன்' வேகமாக அடித்தார். அது, 'சிக்ஸரா' அல்லது 'அவுட்'டா என்பது தெரிய வேண்டிய சூழல். 'டிவி'யின், 'ரிமோட்'டை கையில் எடுத்த சங்கீதா, அவனைப் பார்த்தாள். சிறு தயக்கத்துக்குப் பின், ''அணைச்சுடு... கிளம்பலாம்,'' என்றான், ராகவன்.அருண் சரண்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !