உள்ளூர் செய்திகள்

நாளிதழ் தயாரிக்கும் ஏ.ஐ.,!

இத்தாலியில், முதன்முறையாக முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ., மூலம், தயாரிக்கப்பட்ட, 'இல் போக்லியோ' நாளிதழ், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த, 2025 மார்ச் முதல், 'ஆன்லைனில்' வெளியாகத் துவங்கிய இது, பத்திரிகை உலகில், புரட்சிகர மாற்றமாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மனித பத்திரிகையாளர்கள் செய்யும் செய்தி சேகரிப்பு, எழுத்து, தொகுப்பு ஆகியவற்றை, ஏ.ஐ., திறம்பட செய்து, ஒரு மாத காலத்திற்கு, தினமும் புதிய பதிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சுவாரஸ்யம் என்னவென்றால், ஏ.ஐ., தன்னியக்கமாக உள்ளடக்கத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், வாசகர்களின் ஆர்வத்திற்கேற்ப செய்திகளை தேர்ந்தெடுத்தும் வழங்குகிறது. இத்தாலிய அரசியல், கலாசாரம், பொருளாதாரம் என, அனைத்து துறைகளிலும், இது தன் திறனை வெளிப்படுத்தியுள்ளது. பலரும் இதை, 'எதிர்கால பத்திரிகை உலக முன்னோட்டம்' என, உற்சாகமாக வர்ணிக்கின்றனர். ஆனால் சிலர், மனித உணர்வுகளும், படைப்பாற்றலும் இல்லாத, ஏ.ஐ., பத்திரிகை, நீண்ட காலம் நீடிக்குமா என, கேள்வி எழுப்புகின்றனர். எப்படியிருப்பினும், 'இல் போக்லியோ' நாளிதழ், உலக அளவில் புதிய விவாதத்தை துவங்கி வைத்துள்ளது. - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !