உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

** எஸ்.முருகன், சிவகாசி: "நஷ்டத்தில், ஊழலில் இயங்கும் அரசுத் துறை தொழில்களை தனியாரிடம் கொடுத்து விட வேண்டும்...' என்று கூறுகின்றனர். அரசுத்துறை ஊழியர்கள், பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்கள் தனியாரிடம் வேலை செய்தால் லஞ்சம் - ஊழல் குறையவா போகிறது?"அடிப்பவர் அடித்தால் அம்மியும் நகரும்...' என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது போலத்தான். தனியாரிடம், "ரெட்-டேப்பிசம்' என்ற சிவப்பு நாடா முறை கிடையாது. முடிவெடுக்கப்படுவது படு சுறுசுறு! லஞ்ச பேர்வழிகள் திருந்துவர் - திருத்தப்படுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இந்த பயம் தனியார் துறையில் இருப்பதால்தானே எல்லாரும், "அரசு வேலை... அரசு வேலை...' என ஆளாய் பறக்கின்றனர்!

***

*எஸ்.ராஜகுமாரன், திருவண்ணாமலை: சென்னையிலுள்ள சில நட்சத்திர ஓட்டல்களில், வேட்டி அணிந்து செல்பவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனராமே... இது, தமிழர்களை அவமானப்படுத்துவது போல் இல்லையா?தவறான தகவல். வேட்டிகளிடம் தான் துட்டு அதிகம் என்று தெரியாதவர்களா நட்சத்திர ஓட்டல்காரர்கள்! ஆனால், வேட்டிகள் பல நேரங்களில், "பார்'களில் தம் நிலை மறந்து, சலசலப்பு ஏற்படுத்துவது உண்டு... இதன் காரணமாக சில ஓட்டல்கள், வேட்டிகளை அனுமதிக்க மறுக்கலாம்!

***

*என்.தங்கராசு, புதுச்சேரி: நம் மக்கள்தான் அரசியல் பேசி, வெட்டி பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனரா?இல்லை; அமெரிக்கர்களுக்குத் தான் இதில் முதல் இடம். அங்கே 100க்கு 37 பேரும், சீனாவில் 21 பேரும், இந்தியாவில் 15 பேரும் இப்படி வெட்டி பொழுது போக்குகின்றனர் என்கிறது, "இன்டர்நேஷனல் ரிசர்ச் அசோசியேஷன்!' என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம்!

***

*எஸ்.கலாவதி, சிதம்பரம்: தற்கொலை செய்து கொள்பவர்கள் யார்?கோழைகள்; வாழ்வின் நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்கள். ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, "நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ!'

***

* எஸ்.விஜயகுமார், முத்தியால்பேட்டை: ஆண்கள், பெண் தோழி களையும், பெண்கள், ஆண் தோழர்களையும் வைத்துக் கொள்வதில் யாருக்கு சிக்கல் அதிகம்?பெண்களுக்கே! ஆண்கள் தம் நண்பர் மத்தியில் தன், "கிரேடை' உயர்த்திக் கொள்ள தோழியை காதலியாக சித்தரிப்பர்... ஏதோ ஒரு காரணத் தால் நட்பு முறியுமானால், தோழியின் பெண்மைக்கே களங்கம் கற்பிப்பர்.

***

*எஸ்.ஸ்ரீபதி, காஞ்சிபுரம்: மனிதர்களில் சிலர் பிறக்கும் போதே ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றனரே... அதுபோலவே, மிருகங்கள், ஊனமுள்ளவைகளாக பிறக்கின்றனவா? அந்த மாதிரியான விலங்குகளைப் பார்த்ததாக ஞாபகம் இல்லையே... நீங்கள் பார்த்ததுண்டா?உண்டு! விலங்குகளிலும் உடல் ஊனமுற்று பிறப்பது சகஜம்தான்!

***

** பி.மனோகர், பாடி: ஒரு குடும்பத்தை வழி நடத்திச் செல்ல, கணவன் - மனைவி இருவரில் யார், கல்வி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்?கண்டிப்பாக மனைவி தான். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால், ஒரு குடும்பமே கல்வியறிவு பெற்றதற்கு சமம். ஆண் கற்ற கல்வி, அவன் சம்பாதிக்க மட்டுமே பயன்படுமே அன்றி, அவன் குடும்பத்துக்கு அதனால் பயனில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !