குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!
சென்னை வேளச்சேரியில் உள்ள, 'சென்னை ரைடிங் ஸ்கூல்' என்ற குதிரை ஓட்ட பயிற்சி தரும் பள்ளியின், ஒரே பெண் பயிற்சியாளர். ஆறடிக்கு மேல் கம்பீரமே உருவெடுத்தது போல, வீரத்துடனும், தீரத்துடனும் நிற்கும், குதிரையின் பிடறி பிடித்து, நிமிடத்தில் ஏறி உட்கார்ந்தவர், கால்களால் குதிரைக்கு சமிக்ஞை கொடுத்ததும், குதிரை சிட்டாய் பறக்கிறது. ஓடும் குதிரையில் இருந்தபடி, எழுந்து நிற்கிறார், திரும்பி நிற்கிறார், மாறி உட்காருகிறார், நிமிர்ந்து, மல்லாந்து படுக்கிறார். இப்படி குதிரையின் மீது, பல்வேறு சாகசம் செய்பவர், குதிரை களைத்த நிலையிலும், தான் களைத்து போகாமல் நிற்கிறார்.நடுத்தர வயது, ஆனால், பார்க்க, பள்ளி மாணவி போல இருக்கிறார், அதற்கான ஒரே காரணம், குதிரை ஓட்டும் பயிற்சிதான் என்கிறார், கடந்த 20 ஆண்டு காலமாக, ஆண், பெண்களுக்கு குதிரை ஓட்ட பயிற்சி தரும் ஓஜோ. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில்தான்.சிறுவயதில், பெங்களூரு ரேஸ்கோர்சில், ஒரு முறை குதிரைகளை தூள் பறக்க, ஜாக்கிகள் ஓட்டிச் சென்றதை பார்த்து, தானும் அதுபோல குதிரை ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தார், இதற்காக, குட்டி குதிரைகளில் பயிற்சி எடுக்க துவங்கினார். பின், படிப்படியாக, தன் வளர்ச்சிக்கேற்ப, பெரிய குதிரைகளில் பயிற்சி எடுத்து, பிரமாதமாக ஓட்டி, பல்வேறு பாராட்டுக்களை பெற்றார்.இவர் படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள குதிரை ஓட்டும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் வேலை கிடைக்கவே, உடனே சேர்ந்து விட்டார். ரைடிங் மட்டுமின்றி ஜம்பிங், போலோ போன்ற குதிரை விளையாட்டில், பரிசும், பாராட்டும் பெற்றுள்ள அனிதா ஓஜோ, தான் கற்ற வித்தையை முழுமையாக கற்றுத் தருவதன் காரணமாக, இவரிடம் பயிற்சி பெற்ற அபர்ணா, வெளிநாட்டில் ஜாக்கியாக உள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற ஒரே, பெண் ஜாக்கி இவர்தான்.தற்போது, சென்னை பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்துள்ள அனிதா ஓஜோ கூறுகையில், 'ஆறு வயது முதல் 60 வயது வரை, யாரும், எப்போதும் இந்த குதிரையேற்ற பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள், தங்களது கூச்ச சுபாவத்தைவிட்டு, தைரியம் வரப் பெறுவர், கூன் முதுகு விழப்பெற்றவர்கள் நிமிர்ந்து நடப்பர். குதிரை என்ற உயிருள்ள விலங்கை கட்டுப்படுத்தும் கலையை கற்றுக் கொள்வதால், எதையும் எளிதாக கையாளும் திறன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, எடை குறைந்து, அதே நேரம் வலிமை யான உடலமைப்பு பெறுவர்.'குதிரைகளின் விலை, பல லட்சம் என்பதுடன், அதன் பராமரிப்பு செலவும் அதிகம் என்பதால், நாட்டில் குறைந்த பயிற்சி பள்ளிகளே உள்ளன, கட்டணமும் கொஞ்சம் அதிகம்தான். (மாதம் குறைந்தது 7,000 ரூபா#.) ஆனாலும், இப்போது இந்த விளையாட்டில், நிறைய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...' என்று கூறி முடித்த அனிதா ஓஜோ, குதிரையின் கழுத்துப் பகுதியை தட்டிக் கொடுத்தபடி, மிக லாவகமாக ஏறி உட்கார்ந்ததும், குதிரை வேகமெடுத்ததும் மின்னலாய் நடந்தேறின.***எல். அற்புத ராஜ்