உள்ளூர் செய்திகள்

வேறு அர்த்தம்!

வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த பாஸ்கர், 'இந்த அமெரிக்க குளிருக்கு, ஒரு காபி குடித்தால் தேவலாம்...' என்று, நினைத்தான். ஆனால், யாரிடமோ போனில் கோபமாக பேசிக் கொண்டிருந்தாள், அவன் மனைவி மாலா.வாசலிலிருந்து சமையலறையை பார்த்தவன், அவன் அம்மாவிடம் சைகையில், ''என்ன?'' என்று கேட்க, ''நான் இல்லை,'' என்று, சைகையில் சொன்னாள்.அப்பாடா, மாமியார் - மருமகள் பிரச்னை இல்லை. வேறு என்னவாக இருக்குமென்று யோசித்தபடி, சோபாவில் அமர்ந்தான், பாஸ்கர். அதேசமயம் உள்ளே வந்த மாலா, மொபைல் போனை சோபா மேல் விட்டு எறிந்தாள்.புருவத்தை உயர்த்தி, ''ஏன் வாயைத் திறந்து, என்னன்னு கேட்க மாட்டீங்களா,'' என்று சாடினாள்.''எதாவது முக்கியமா இருந்தா, நீயே சொல்வியே... அதான் காத்திட்டிருக்கேன்,'' என்றான். சமையலறையை அவள் பார்க்க, 'ஓ... அம்மா இருக்கா. அதனால, சொல்ல யோசிக்கிறாள் போல...' என, நினைத்தான்.''அம்மா, நீ போய் படுத்துக்கோ. ஸ்ரீநாத் துாங்கிண்டிருக்கான் பாரு...'' என்றதும், அவனைப் பார்த்து சிரித்தபடியே நகர்ந்தாள். ''சரி, அம்மா போயிட்டா. சொல்லு என்ன பிரச்னை?''''எப்படி சொல்வது, எனக்கு சொல்றதுக்கு வெட்கமா மட்டும் இல்லை; கேவலமாவும் இருக்கு,'' என்றாள்.''அப்படி யாருகிட்ட பேசினே?'' என்றான், பாஸ்கர்.''எங்க அம்மாவிடம்,'' என்றாள், மாலா.''இதோ பார், வாய்க்கு வந்தத பேசாதே. என்ன சொன்னாங்க, கரெக்ட்டா சொல்லு,'' என்றான்.''அடுத்த மாதம், உங்க அம்மா, இந்தியாவுக்கு போறாங்க. அதனால, எங்க அம்மா - அப்பாவை இங்கு வரச்சொல்லி போன் பண்ணினேன்.'' ''சரி, அதுக்கு நீ இந்த அளவுக்கு, 'பீல்' பண்ற மாதிரி என்ன சொன்னாங்க. அதை முதல்ல சொல்லு,'' என்றான்.''எங்க அம்மா - அப்பாவுக்கு எத்தனை வயசுன்னு தெரியுமா உங்களுக்கு?''''அம்மாவுக்கு, 68, அப்பாவுக்கு, 74 வயசு இருக்கும். சரி, விஷயத்துக்கு வா.''''எனக்கு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. அம்மா, அப்பாவுக்கும் இனிமே கொஞ்சம், 'பிரைவசியும்' நெருக்கமும் வேணுமாம். பேரன், பேத்தியுடன் சந்தோஷமா இருக்கணும்ன்னு, யோசிக்கிற வயசான காலத்துல, தனிமை வேணும்ன்னு அவங்க சொல்றதை, உங்ககிட்ட சொல்றதுக்கே எனக்கு வெட்கமாவும், அசிங்கமாவும் இருக்கு,'' என்றாள்.''சரி விடு. அடுத்த வாரம், நான் உங்க அம்மாகிட்ட பேசுறேன். அதுவரை அமைதியாக இரு,'' என்றவன், தன் மாமியார் குடும்பத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.ஞாயிறன்று, மாலாவை அழைத்து, ''இதோ பார், உங்க அம்மா - அப்பாவுடன் பேசப் போறேன். போனை, 'ஸ்பீக்கர்ல' போடறேன். ஆனால், ஒரு நிபந்தனை. போன் பேசி முடிக்கும் வரை, நீ எதுவும் பேசக் கூடாது,'' என, மாலாவின் அம்மாவுக்கு செய்தான், பாஸ்கர்.''ஹலோ!''''ஹலோ... மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க; குழந்தை எப்படி இருக்கான்; மாலா எப்படி இருக்கா... மாலா, என் மேல் கோபமா இருக்காளா மாப்பிள்ளை?''''இல்லம்மா... என்ன விஷயம், ஏன் அவளுக்கு கோபம்?''''இல்லை மாப்பிள்ளை. என்னையும், அப்பாவையும் அமெரிக்கா கிளம்பி வரச் சொன்னா. நான் இப்போ வரலேன்னு காரணத்தை சொன்னேன். கோபத்துல போனை, 'கட்' பண்ணிட்டா.''நீங்க மாப்பிள்ளைங்கறதுக்கு மேல, என் பிள்ளை மாதிரி. அதனால, என் மனசுல உள்ளதை உங்ககிட்டே சொல்றேன், தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க,'' என்றார், மாமியார்.''ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. சொல்லுங்கம்மா,'' என்றான், பாஸ்கர்.''நான் கல்யாணம் ஆகி வரும்போது, எனக்கு வயசு, 21. உங்க மாமாவுக்கு, இரண்டு தங்கைகள், மூளை வளர்ச்சி இல்லாத, அவரை விட இரண்டு வயசு குறைவான தம்பி, மாமியார் - மாமனார்.''நான் வங்கியில் வேலை பார்த்துண்டிருந்தேன். இரண்டு நாத்தனாருக்கு கல்யாணம், அவர்கள் இருவருக்கும் இரண்டிரண்டு குழந்தைகள், பிரசவம். அதைவிட மூளை வளர்ச்சி இல்லாத மச்சினனுக்கு தேவையான அனைத்தும், நான் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பான்.''மாமியார் - மாமனாருக்கு வயசு ஆக ஆக, எல்லாமே அவர்கள் கையில் கொண்டு கொடுக்க வேண்டும். இதற்கிடையில், எனக்கு இரண்டு பிரசவம், குழந்தைகள் வளர்ப்பு, பெரியவள் மாலாவின் கல்யாணம்...''சின்னவளின் படிப்பு மற்றும் கல்யாணம், மாலாவுக்கு பிரசவம், சின்னவளுக்கு பிரசவம், மாமியார், மாமனார், மச்சினன் இறப்புன்னு விஷயங்கள் எல்லாம் செய்து முடித்ததில் ஏற்பட்ட பணப் பிரச்னை வேற...''என், 47 ஆண்டு கல்யாண வாழ்க்கை, போன ஆறு மாதம் முன்பு வரை, இப்படி தான் நடந்து முடிந்தது. எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவரோ, அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நானோ யோசிக்காமல், குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்ததை எங்களுக்கு பிடித்ததாக ஏற்று, இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறோம்.''இந்த ஆறு மாதங்களாகத்தான் நாங்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்தோம். இப்போது, பணம் எங்களுக்கு பிரச்னை இல்லை; இருவரின், 'பென்ஷன்' தேவைக்கு அதிகமாகவே இருக்கு. இந்த ஆறு மாதத்தில் தான், நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தறோம். ''காலையில் எழுந்திருக்கும் அப்பா, பால் வாங்கி வந்தால், அவருக்கு பிடித்த மாதிரி காபி போட்டு குடுப்பேன். நான் வீடு பெருக்கினால், அப்பா துடைப்பார். நான் சமைக்க, அவர் காய் நறுக்கி குடுப்பார்.''மதியம் சுட சுட சாப்பிட்டு, இருவரும் உட்கார்ந்து பழைய கதையெல்லாம் பேசுவோம். மாலையில், கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, பிரசாதம் வாங்கி, சிறிது நேரம் பேசி, வீட்டுக்கு வரும்போது, இரவு, 8:00 மணி ஆகிவிடும். ''இரவில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு துாங்கறோம். ஏன்னா பயம், நாளை விடியலில் யார் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை. இன்னும் எத்தனை வருஷம் இருவரும் சேர்ந்து வாழ விடப்போறார், அந்த கடவுள் என்று தெரியவில்லை. ''அதில் ஒருநாள் கூட இந்த சந்தோஷங்களை, 'மிஸ்' பண்ணக் கூடாது என்று நினைக்கிறோம். இருபதுகளில் நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆத்மார்த்த வாழ்க்கையைத் தான், நான் அவளிடம் சொன்னேன். அதை வேறு விதமாக, அவள் வயசுக்கேற்ப கற்பனை செய்து கொண்டாள்.''சத்தியமா மாப்பிள்ளை, இப்ப தான் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து, சந்தோஷ வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கிறோம். இது தப்பா மாப்பிள்ளை...'' என்றார், மாமியார்.''அய்யோ நிச்சயமா தப்பு இல்லம்மா.''''மாப்பிள்ளை போனை வச்சுடாதீங்க. உங்களுக்கு, இப்போ நாங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றால் சொல்லுங்கள், நிச்சயமா கிளம்பி வரோம். மாலாவிடம் சொல்லுங்கள்,'' என்றார்.''அம்மா, எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. உங்க பொண்ணுகிட்ட பேசி, நான் புரிய வைக்கிறேன். பைம்மா...'' என்று சொல்லி, போனை, 'கட்' செய்தான், பாஸ்கர்.மாலாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.''நான் தப்பு பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணி, ஆறு வருஷம் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம். நீங்க, அந்த ஆறு வருஷத்தில், எத்தனை நாடுகளுக்கு என்னை கூப்பிட்டு போனீர்கள்; எத்தனை சந்தோஷமாக இருந்தோம்.''பாவம் அம்மா, அப்பா. அவர்கள் என் திருமணத்துக்கு முன், எங்குமே போனதில்லை. இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி பார்த்தது கிடையாது. அம்மா அவளுக்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை. எங்களிடமும் எதுவும் எதிர்பார்த்ததும் இல்லை.''அவளிடம் தாய்மையை மட்டுமே எதிர்பார்த்த நான், அவளுக்குள் ஒரு பெண்மை இத்தனை ஆண்டுகளாக ஏக்கத்தில் இருந்ததை புரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றையும் மூன்றாம் தரமாக கற்பனை செய்த என்னை, என்னாலேயே மன்னிக்க முடியல. அம்மாவுக்கு போன் பண்ணுங்க,'' என்றாள்.போனை அம்மா எடுக்கவும், ''அம்மா, என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்கள் மனதை ரொம்பவே காயப்படுத்திட்டேன்; சாரிம்மா. நீயும், அப்பாவும் சந்தோஷமா இருக்கணும். ''உங்களுக்கு எப்பவாவது, வாழ்க்கையில் அலுப்பு ஏற்பட்டால் ஒரு போன் பண்ணுங்க, டிக்கெட் அனுப்பறேன். இங்க வந்து, உங்க பேரனோடு சந்தோஷமா இருங்க. உங்களுக்கு, எங்களால எந்த தொந்தரவும் இருக்காது. 'என்ஜாய்' செய்யுங்கள்,'' எனக் கூறி, போன் இணைப்பை துண்டித்தாள்.''இப்ப சந்தோஷம் தானே,'' என்றான்.''ஏங்க, உங்க அம்மாவுக்கு டிக்கெட் எடுங்க, மாமாவை விட்டு ஐந்து மாசமா அவங்களை பிரிச்சு இங்க வச்சுருக்கோம்,'' என்றாள், மாலா.ஓடி வந்து, மாலாவின் கை பிடித்து, ''தாங்க்ஸ்...'' என்றாள், என் அம்மா.மாமியார் கண்களிலும் அந்த ஏக்கத்தை பார்த்தாள், மாலா. தங்கள் சுயநலத்துக்காக, இனி பெரியவர்கள் யாரையும் பிரிப்பதும் இல்லை. அவர்கள் தனிமைக்கு இடைஞ்சல் குடுக்கப் போவதுமில்லை என முடிவு செய்தாள், மாலா.ஆம். இனி, 'பிரைவசி' மற்றும் நெருக்கம் எனும் வார்த்தைகள், அவர்களுக்கு வேறு அர்த்தம்; இவர்களுக்கு வேறு அர்த்தம்.ஜெயா தங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !