உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

**ஆர்.யுவராஜ், சர்வேயர் காலனி: புகழ், யாரைத் தேடி வரும்?புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள், தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு இருக்காது!*****வி.திவ்யா, கோயம்புத்தூர்: குறையே இல்லாத மனிதன் உலகில் உள்ளனரா?இருக்கவே முடியாது! துளையே இல்லாமல் நாதஸ்வரம் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள்! மனிதனாக பிறந்தவன், குறையுள்ளவனாகத்தான் இருப்பான்; அவற்றை போக்கிக் கொள்ள முயற்சி செய்பவன், பிறந்ததன் நோக்கத்தை அடைய முயல்கிறான்! மற்றவன், சாதாரண மானுடனாகவே இருந்து மறைகிறான்!****கே.ராஜலட்சுமி, கவரைப்பேட்டை: இன்றைய சமூகத்தில், துணிச்சல் யாருக்கு அதிகம்? ஆணுக்கா, பெண்ணுக்கா?இயற்கையிலேயே பெண்ணுக்கு துணிவு அதிகம்! அதனாலேயே அவர்களால் பல வேதனைகளையும், வலியையும் தாங்கி, சமாளிக்க முடிகிறது. ஆண், வெளிக்காட்டும் துணிவை, பெண்ணாலும் வெளிக்காட்ட முடியும்! ஆனால், இந்த சமூகம் அவளைத் தட்டி வைத்துள்ளது.****ம.மதியழகன், சின்னமனூர்: உலகில், அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் தானே...இல்லை... ஆங்கிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது... ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது... உலகில், அதிக மக்களால் பேசப்படுவது மாண்டரின் என்ற சீன மொழி தான். நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே ஸ்பானிஷ் மற்றும் பெங்காலி மொழிகள் வருகின்றன.****என்.பெரியசாமி, கோவை: கனவில், 'கலரை' சந்தித்தது உண்டா?கனவே வரமாட்டேங்குதே!****வி.கணபதி, கூடலூர்: தினம், தினம் சூரியன் காலையில் உதிக்கிறதே... இது, திடீரென்று நின்று போய் விட்டால்...கவலையே படாதீர்கள்... இன்னும் 50 ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஒளி வீசும் என்று விஞ்ஞானிகளே கூறுகின்றனர். அவ்வளவு காலமா நாம் உயிருடன் இருக்கப் போகிறோம். இன்னொரு உபரித் தகவல் சூரியனின் ஒளி, பூமியை அடைய, 8.3 நிமிடங்கள் ஆகிறதாம்!****எஸ்.சேகர், மயிலாப்பூர்: பணத்தை வெறுப்பதாக சிலர் அடிக்கடி சொல்கின்றனரே...உண்மைதான்! அவர்கள் பணத்தை விரும்புவதில்லை தான்! ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம்; அவர்கள் வெறுப்பது அடுத்தவரிடம் உள்ள பணத்தை; தங்கள் பர்சில் உள்ள பணத்தை அல்ல!*****எம்.பிரபாகரன், பரமக்குடி: பட்டப்படிப்பெல்லாம் இனி வேலை வாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா சார்?உண்மைதான்! புரபஷனல் கோர்ஸ் படித்தவர்கள் கூட, வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பிளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால் தான் இனி பிழைக்க முடியும்!****எஸ்.சுதர்சன், மைக்கேல்பாளையம்: எதற்கெடுத்தாலும் கவலை கொள்கிறேன் நான்...இப்போது மன அமைதி இல்லாமல் இருப்பீர்கள்; இன்னும் கொஞ்சக் காலத்தில், உங்கள் உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். அதன்பின், குணசீலம் கோவில் தூண்களுடன் எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இந்நிலை வர வேண்டுமா? யோசித்து வகைப்படுத்துங்கள்; கவலை இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !