அந்துமணி பதில்கள்
பி.வெண்மதி, கூடலூர்: மிக இக்கட்டான நிலை - நான் வெறுப்பவர் கை கொடுத்தால், மீளலாம். அந்நிலையில், பணிந்து போய் காரியம் சாதிக்கலாமா இல்லை வேறு வழி கண்டுபிடித்து வெற்றி பெறலாமா?வேறு வழி இருக்குமானால், முதல் கேள்விக்கே இடமில்லாமல் போகிறதே... வேறு வழி இல்லாத போது, காரியத்தை வெற்றிகரமாக முடிக்க, மற்ற வழியைப் பின்பற்றலாம். அது, நேர்மைக்கு புறம்பாக இல்லாத பட்சத்தில்!ஆர்.ராமகிருஷ்ணன், பெருங்களத்தூர்: ஓரளவு நகைச்சுவை உணர்வுடன், குடும்ப பிரச்னைகளை அணுகக் கற்றுக் கொண்டால், கணவன், மனைவியரிடையே பிணக்கு குறையுமல்லவா?முழுமையாகவே பிரச்னைகள் தீர்ந்து விடும். மண வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை சிம்பிளாக கூறி விட்டீர்கள்!டி.எஸ்.வேணுகோபாலன், கடலூர்: வேலைக்குப் போகும் பெண்கள், தன் காலில் நிற்கும் பொருளாதார பலம் பெறுகின்றனர். ஆனால், வேலைக்குப் போகாத பெண்களைப் போல் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுகின்றனரா?நிம்மதியும், மகிழ்ச்சியும் வேலைக்குப் போவதாலோ போகாததாலோ கிடைக்கிறது, கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அவரவர், 'மென்டல் - மேக்கப்'- மனநிலையைப் பொறுத்தது தான் இவ்விரண்டும்!டி.பாண்டி, துரைச்சாமிபுரம்: ஒரு நாளைக்கு, 48 மணி நேரம் இருந்தால், எப்படி இருக்கும்?எட்டு முறை காபி, ஆறு முறை சாப்பாடு சாப்பிட வேண்டி இருக்கும்.சி.சந்திரன்,அருப்புக்கோட்டை: எதற்கெடுத்தாலும், 'ஓடிப் போய் விடுவேன்' என, பெற்றோரை பயமுறுத்தும் இக்கால இளைஞர்களை என்ன செய்வது?'குலைக்கிற நாயி கடிக்காது' என்பர்... கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 'லொள் லொள்' என குலைத்து, பயந்த ஆசாமிகளை கொஞ்சம் மிரட்டிப் பார்க்கும்; ஆனால், கடிக்க தைரியம் இருக்காது. இந்த ரகம்தான், 'ஓடிப் போய் விடுவேன்' என, மிரட்டும் இளைஞர்கள். 'சரிப்பா உன் விருப்பம் போல செய்...' என, ஒரே ஒரு முறை பெற்றோர் சொல்லட்டும். அப்புறம் பாருங்கள், ஓடிப் போற பேச்சே எடுக்க மாட்டார்கள்!ஆர்.சீதாலட்சுமி, தி.நகர்: தப்புன்னு தெரிஞ்சிருந்தும், ஏதேனும் காரணத்திற்காக அல்லது மனதிருப்திக்காக அதையே திரும்பத் திரும்ப செய்பவர்கள் பற்றி...உங்கள் கேள்வியிலேயே பதிலுமிருக்கிறது. ஆனால், அந்த தப்பு இன்னொருவர் வாழ்வை அடியோடு பாதிக்கும் எனத் தெரிந்தும், தொடர்ந்து செய்பவர்கள் சுயநலவாதிகள்!எஸ்.பி.ரஞ்சிதம், கம்பம்: எங்க அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி பெண்களுடன் கை குலுக்குகிறார். அவரை என்ன செய்யலாம்?குலுக்குவதற்கு கை கொடுக்கும் பெண்களே கவலைப்படாத போது, நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்!த.சுந்தரி, காரைக்கால்: போலீஸ் பணியில் சேர்ந்த சில வருடங்களிலேயே உடலைக் கவனிக்காமல் தொந்தியும் தொப்பையும் ஆக மாறிவிடும் காவல் துறையினரை, மறுபடியும் மருத்துவ சோதனை செய்து, முடிவு எடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன?கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்; ஆனா, ஏற்கனவே அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. கீழே விழுந்த பென்சிலைக் கூட எடுக்க முடியாத உடலை வைத்துக் கொண்டு இருப்பவர்களால், திருடனையும், பிக் - பாக்கெட் காரனையும் எப்படி பிடிக்க முடியுமோ தெரியலே!