அந்துமணி பதில்கள்
எஸ்.ராமசாமி, கம்பம்: தனக்கென நிலையான கொள்கையும், தன்மானமும் கொண்ட அரசியல்வாதி எவரேனும் தற்போது உண்டா?என்ன இப்படி கேட்டுட்டீங்க... ஆட்சியைப் பிடிக் கணும், கஜானாவை சுரண்டணும், மக்களை மாக்களாக்கணும்... இதுதானே அனைத்து அரசியல்வாதிகளிடமும் உள்ள நிலையான கொள்கை. இதற்குத் தானே தன்மானத்தோடு உழைக்கின்றனர்!சி.ஜெயசீலா, திருப்பூர்: பொய் சொல்ல பிறந்தது ஆண்கள்; அதை நம்ப பிறந்தது பெண்கள் என்ற சொலவடை உண்மை தானே!பெரும்பாலான பெண்கள், ஆண்கள் கூறும் பொய்யை நம்புவது போல் நடிக்கின்றனரே தவிர, அதை உண்மை என்று நம்பி ஏமாறுவதில்லை. குடும்ப அமைதி, இணக்க வாழ்க்கை இவற்றை கெடுத்துக் கொள்ள வேண்டாமே என்ற எண்ணத்தில் செயல்படுவதாலேயே இவ்வாறு செய்கின்றனர்.ஜி.பெரியநாயகி, போடிநாயக்கனூர்: சிலர், படித்தும் முட்டாளாக இருப்பது ஏன்?அவர்களுக்கு புத்தகம் மட்டுமே தெரியும்; நடைமுறை வாழ்க்கையோ, அதில் உள்ள சிக்கல்களோ தெரியாது. அப்படியே தெரிய வந்தாலும் சிக்கலை நாசூக்காக விடுவிக்க தெரியாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என வேலையில் ஈடுபட்டு முட்டாள்தனம் செய்து விடுவர். அவர்களைக் கண்டு அனுதாபப்படத்தான் முடியும்!கே.ஆரோக்கியசாமி, குரோம்பேட்டை: பெருகி வரும் பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன வழி?பிச்சை போடுவதை தவிர்த்து விடுவதே இந்த சோம்பேறி கூட்டத்தை ஒழிக்க ஒரே வழி... 'முதியவர், முடமானவரை தவிர, ஒருவருக்கும் பிச்சை இட மாட்டேன்...' என்ற சபதத்தை இன்றே மேற்கொள்ளுங்கள்!ஜே.பி.எழிலன், மாட்டுத்தாவணி: 'அறிவு இருக்கா உனக்கு?' என்று யாராவது உங்களைத் திட்டியது உண்டா?ஒருவரா, இருவரா? ஏதாவது ஒரு கட்சியை விமர்சித்து பதில் எழுதி விட்டால் போதும்... 'அறிவு இருக்கா, லஞ்சம் வாங்கிட்டியா, பேமானி, பொறுக்கி, பேடி...' என்றெல்லாம் அர்ச்சித்து, முகவரி இல்லாமலும், முகவரி எழுதினால், போலியாகவும் எழுதி, அஞ்சலில் சேர்த்து விடுகின்றனரே... இதெல்லாம் சகஜம் என எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் எப்போதோ வந்து விட்டது!கே.வசந்தா, திண்டிவனம்: தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் தொடர்கள், விளம்பரங்களுக்கு தணிக்கை உண்டா?தூர்தர்ஷன் தவிர, வேறு எந்த தனியார் தொலைக்காட்சிகளிலும் தணிக்கை கிடையாது. தூர்தர்ஷனிலும், 'இன் - ஹவுஸ்' தணிக்கைதான். தர்மத்துக்கு கட்டுப்பட்டு அவர்களாகவே தணிக்கை செய்கின்றனர். பணம் பண்ணுவதே பிரதான நோக்கமாகி விட்டதால், தனியார் சேனல்கள் நியாய, தர்மங்களை குழிதோண்டி புதைத்து விட்டனர்!எஸ்.சாகர், மடிப்பாக்கம்: எந்த காரியத்தையும் ஒத்திப் போடும் மனநிலை உள்ள எனக்கு, நல்ல தீர்வை சொல்லுங்களேன்...வெற்றி - தோல்வி குறித்த தயக்கமே இதற்கு காரணம். இது மனக் கோளாறு... இதை மாற்ற, மருந்து இல்லை; உறுதியான உள்ளத்தால் தான் தயக்கத்தை விரட்டி அடிக்க முடியும். தயங்கி தயங்கி செய்யும் செயல் உருப்படுவதில்லை!எஸ்.விநாயகமூர்த்தி, மதுரை: உலகில் மிகவும் பொல்லாதது எது?புகழ்! பணம் பத்தும் செய்யும்; புகழ் கோடி செய்யும்!டி.ஜெஸிந்தா மேரி, பொள்ளாச்சி:ஆண்கள் எப்போது அசடு வழிகின்றனர்?'ஜொள்' விட்டுக் கொண்டிருக்கும் பெண், அவளே துணிந்து பேச வந்தாலோ, இவரே சந்தர்ப்பம் அமைத்து, பேச முயலும் போதோ வழியோ வழி என வழிந்து தேவையில்லாமல் சிரித்து, உள்ளுக்குள் நடுங்கவும் செய்வர்!