அந்துமணி பதில்கள் !
*ஜி.உஷா, ஊரப்பாக்கம்: சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது குறைந்து வருகிறதா?இல்லை! இந்தியாவைப் பொறுத்தவரை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக, 'யுனெஸ்கோ'வின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 18 வயதுக்குட்பட்ட விலைமாதர்கள் இந்தியாவில் 4.5 லட்சம் பேர் இருக்கின்றனராம். இதே வயதில், அமெரிக்காவில் மூன்று லட்சம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறுகிறது அந்த அறிக்கை.***** ஆர்.அகல்யா, கோவை: நிரந்தரமான வேலையில் அமர்ந்து காலூன்றிய பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் பெண்கள் இருப்பதில் தவறில்லையே...தவறா? அதுதான் தாரக மந்திரமாக, உயிர் மூச்சாக இருக்க வேண்டும். வெளிநாடுகள் போல், 'பினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ்' நம்மூர் பெண்களுக்கும் கிடைத்தால் மட்டுமே, ஆண்களுக்கு சமமான நிலையை அடைய முடியும். ****என்.சரவணன், நெசப்பாக்கம்: வேலைக்குப் போகும் பெண்ணை மண முடிப்பது விவாகரத்துக்கு வழி வகுக்கிறதா?ஈக்வெல் ஸ்டேட்டஸ்... சம அந்தஸ்து தர மாட்டேன்... ஆனாலும், நீ சம்பாதித்துக் கொட்ட வேண்டும், அடிமையாகவே இருக்க வேண்டும்...' என்ற மேல் ஷாவனிசம், சுயமாக சம்பாதிக்கும் பெண்ணின், 'ஈகோ'வை, 'பஞ்சர்' செய்கிறது. பொறுத்துப் பார்க்கிறாள். பொறுமை எல்லை கடக்கும் போது, தூக்கி தூர எறிந்துவிட முடிவு செய்கிறாள். **** பி.கோமதி, திருப்பூர்: சில ஆண் நண்பர்களிடம் சிறிது நெருங்கிப் பழகியவுடன் காதல் கடிதம் நீட்டி விடுகின்றனர். இந்த, 'மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்'கை எப்படி தவிர்ப்பது? 'இது, காதல் அல்ல; வெறும் நட்புதான்...' என்று, அவர்கள் மனம் புண்படாதபடி எப்படி புரிய வைப்பது? நம்முடையது, 'ப்ரீ சொசைட்டி' இல்லை. பூட்டிப் பூட்டி வைப்பதாலேயே ஒரு பொருளின் மீது, 'அட்ராக்ஷன்' அதிகரிக்கிறது. எனவே, ஒரு பெண்ணிடம் ஏற்படும் நட்பு, காதல் என்றே நம் சமூக ஆண்களை எண்ண வைக்கிறது. நம் ஆண்களில் பெரும்பான்மையருக்கு பெண்களுடன் பழகும் பக்குவம் இன்னும் வரவில்லை. எனவே, பழக ஆரம்பிக்கும் போதே, பக்குவ மாக உங்களின் செயல் மூலம், இது வெறும் நட்புதான் என்பதை புரிய வைத்து விடுவது நலம். ****அ.அண்ணாமலை, கோவை: வீட்டுச் செலவுக்கு பணம் போதவில்லை என்று நச்சரித்து வாங்கி, அதில், கணிசமான தொகையை பெண்கள் சேமித்து வைப்பது கணவனுக்கு செய்யும் துரோகமில்லையா?எப்படி சார் வாய் கூசாமல், 'துரோகி'ன்னு சொல்றீங்க? 'எக்ஸ்ட்ரா' துட்டு கணவன் கையில் இருந்தால், அது உற்சாக பான கடைக்கும், வெண் குழல் வத்திக்கும் தான் வார்க்கப்படும் என்பதை அறிந்து, ராஜ தந்திரமாக பணத்தைப் பெற்று சேமிக்கின்றனரே... அதுவா துரோகம்? ****என்.கார்த்திகேயன், புங்கமுத்தூர்: பெண்கள், 'ஜொள்' விடுவது மட்டும் ஏன் வெளியில் தெரிவதில்லை?அது, 'ஜொள்' அல்ல என்பதால்; அவர்கள் அடிப்பது, 'சைட்' மட்டும்தான். அதுவும் கனகச்சித நாசூக்குடன்! 'அலைஞ்சான்'கள் தான் நாட்டில் உண்டே தவிர, அதற்கு பெண்பால் வைத்து அழைக்கும் அளவில் இல்லை நம்மூர் பெண்கள். ***** வி.சண்முகம், விருத்தாசலம்: இரக்கப்பட்டு கடன் கொடுத்தால், கேட்கும் போது பகைவனாக வேண்டியுள்ளதே?உண்மைதான்! கடன் நட்பை முறிக்கும், பகையை வளர்க்கும். எனவே, பணம் கொடுக்கும் போது, அதை கடனாக நினைத்துக் கொடுக்காதீர்; தர்மமாக நினைத்துக் கொடுங்கள். திரும்பி வந்தால் லாபம், பகையும் வராது! ***