அந்துமணி பதில்கள்!
க.வேல்முருகன், பொள்ளாச்சி: அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையும் விரைவில் பைசல் செய்யப்படாமல் இருக்கிறதே... காரணம் என்ன?அரசு ஊழியரின் அரட்டை, பொறுப்பின்மை, திறமைக் குறைவு, சோம்பேறித்தனம், தேவைக்கு அதிகமான ஊழியர், ஊழல், லஞ்சம் இவற்றுக்கெல்லாம் தலைமை வகிப்பது போல் உள்ள, 'ரெட்டேப்பிசம்' - சிவப்பு நாடா நடைமுறை!* எம்.ராமமூர்த்தி, திருப்பூர்: அரசின், வி.ஆர்.எஸ்., திட்டத்தில் வெளியேறியவர்களின் வாழ்வு, வளமாக உள்ளதா? அதை, இனி வரும் காலங்களில் பெற்றுக் கொள்வது உசிதமா?வளத்தில் குறைச்சல் இல்லை; ஆனால், தமக்கென ஒரு பொழுதுபோக்கு இல்லாதவர்கள், அதை வளர்த்துக் கொள்ள தெரியாதவர்கள், பரபரப்பு உலகில் இருந்து விட்டு, இப்போது நேரத்தைப் போக்க தெரியாமல் அவதிப்படுகின்றனர்!எஸ்.விஜயராகவன், உத்தங்குடி: சினிமா டைரக்டராக விரும்புகிறேன்... எனக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?இளிச்சவாயனான, ஒரு பணக்காரனைத் தெரிந்திருந்தால் போதும்!* சி.எழிலன், காஞ்சிபுரம்: தம் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற மாநில அரசு, 'பந்த்'நடத்துவது நியாயமா?எதிர்கட்சிகள், 'பந்த்' நடத்தினாலும், ஆளும் கட்சி,'பந்த்' நடத்தினாலும், அவதிப்படுவது பொது மக்கள் தான். நோய்வாய்ப்பட்டோர் முதல், பிரசவ வலியால் துடிப்போர் வரை, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவதிதான். 'பந்த்'தால் ஏற்படும் ஒருநாள் பொருளாதார நஷ்டம், அளவிட முடியாதது. சுமூக அணுகுமுறைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றை விடுத்து, 'பந்த்' நடத்த முடிவெடுப்பது விரும்பத் தகாதது!ஆர்.முத்துக்கிருஷ்ணன், பாலமேடு: சிந்தும் வியர்வைக்கு சரியான கூலி கிடைக்கவில்லையே...வியர்வை சிந்தும் இடத்தை மாற்றுங்கள்; உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும் இடமாக தேடுங்கள்... எதுவுமே நிரந்தரமல்ல என்பதை மறவாதீர்கள்!எஸ்.மரியஅருள், அம்மாபாளையம்: தனி மனித சுதந்திரம் என்றால் என்ன?இந்த செயல்கள் எல்லாம் மற்றவர்கள் நமக்கு செய்து விடக் கூடாது என்று, எச்செயல்கள் பற்றி எல்லாம் எண்ணுகிறீர்களோ, அவற்றை நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்யாதிருப்பது தான், தனி மனித சுதந்திரம்! எம்.சுதர்சன், சென்னை: என் மனைவி நோய்வாய்ப்பட்டு விட்டாள்; இல்லறத்தில் சுகம் இல்லை. இன்னொரு திருணம் செய்து கொள்ளவா?ஓ... தாராளமாக! ஆனால், 'மாமியார்' வீடு செல்லவும், மணியடித்த பின் சாப்பிடவும், கம்பி எண்ணி பொழுது போக்கவும், தயாராக இருந்து கொள்ளுங்கள்!