அந்துமணி பதில்கள்!
கே.கமலக்கண்ணன், கோவை: கஷ்டப்பட்ட காலத்தில் கண்டு கொள்ளாமல், ஓரளவு கால் ஊன்றிய பிறகு, காலைப் பிடிப்பவர்களைப் பற்றி...காலைப் பிடித்தால் பரவாயில்லை; காலை வாரி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், முடிந்தால், மனிதாபிமான அடிப்படையில், ரொட்டி துண்டுகள் ஏதும் போட முடிந்தால், அதையும் போடுங்கள்! ப.ராமதாஸ், நெய்வேலி: 'ஸ்டிரைக்' செய்பவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல், 'ஸ்டிரைக்' என்ற வார்த்தையை கேட்டாலே, ஏதோ ஈயத்தை காய்ச்சி, காதில் ஊற்றுவதை போல ரொம்பவும் அலுத்து கொள்கின்றனரே நம் மக்கள்...அவர்களின் அலுப்பில் நியாயம் இல்லை என்றா சொல்கிறீர்கள்... அன்றாட வாழ்க்கையை பறிக்கும் ஊர்வலம், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், சாலை மறியல் எல்லாவற்றையும் சகித்து, இப்போது வெறுப்படைந்து விட்டனர். போராட்ட முறை இன்னும் பல ஆண்டுகள் இதே போல் தொடர்ந்தால், 'ஸ்டிரைக்' செய்பவர்களை, பொதுமக்கள், 'கவனிக்கும்' நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்!பொ.வெங்கடேசன், மதுரை: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, 'பொது அறிவு' கொஞ்சம் கூட இல்லையே...அதனால், அவர்களுக்கு என்ன இழப்பு... அவர்களிடம், காசு பண்ணும், 'அறிவு' இருக்கிறதே! இவர்களிடம் சிக்கி இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!* சி.மோகன்ராஜன், கம்பம்: வாழ்க்கையில் உயர என்ன வழி?புத்திசாலித்தனத்துடன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று உள்ள பொருளாதார நெருக்கடியில், உழைப்பவர்களைத் தவிர, மற்றவரால் உயர முடியாது. செய்ய வேண்டிய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள், படுபாதாளத்தில் விழுபவர்கள்! கே.சி.பாலசுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி: 'நீங்கள் என்ன ஜாதி' எனக் கேட்பவர்களுக்கு, 'நச்' என பதில் சொல்ல ஒரு, 'ஐடியா' கொடுங்களேன்...இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கின்றனரா என்ன... போகட்டும்... நாகரிகம் இல்லாமல், ஜாதி பற்றி கேட்பவர்களுக்கு, மையமாக ஒரு புன்சிரிப்பை பதிலாக அளியுங்கள். மனம் நோகும்படி, 'நச்' கொடுக்க வேண்டாம்!* ஆர்.சுஜாதா, சிவகாசி: சம்பாதிக்கும் ஆண்கள் திறமைசாலிகளா, சேமிக்கும் பெண்கள் திறமைசாலிகளா?ஆணோ, - பெண்ணோ சேமிக்கும் திறன் உள்ளவரே கெட்டிக்காரர்; - திறமைசாலி. சம்பாதிப்பது எவராலும் முடியும்; அதைக் கட்டிக் காப்பாற்ற, அனைவருக்கும் கை வருவதில்லை!என்.பிரேம் குமார், வத்தலக்குண்டு: நான், பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல இருக்கிறேன்; நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்?படிக்கும் மாணவரான நீங்கள், ஆசிரியருக்கு நல்லவனாக இருக்க வேண்டுமல்லவா... அப்படியானால், அலட்சியமாக இருக்காதீர்கள். பெற்றோருக்கு நல்லவனாக இருக்க, அரசியல் கட்சியின் வாசனையே உங்கள் மீது படாதிருக்க முயலுங்கள். நண்பர்களுக்கு, நல்லவனாக இருக்க, அவர்களிடம் காசு கடன் கேட்காதீர்கள்; நீங்களும், அவர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள்!