உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

க.ராமசாமி, சிவகங்கை: தினமும் சூரியன் காலையில் உதிக்கிறதே... இது, திடீரென்று நின்று போய் விடாதா?கவலையேபடாதீர்கள்... இன்னும், 50 ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஒளி வீசும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வளவு காலமா நாம் உயிருடன் இருக்கப் போகிறோம்... இன்னொரு உபரி தகவல்; சூரியனின் ஒளி பூமியை அடைய, 8.3 நிமிடங்கள் ஆகிறதாம்! * ஜெ.குமார், சென்னை: இன்றைய சமுதாய சூழலில், துணிச்சல் யாருக்கு அதிகம்... ஆணுக்கா - பெண்ணுக்கா?இயற்கையிலேயே பெண்ணுக்கு துணிவு அதிகம்; அதனாலேயே அவர்களால் பல வேதனைகளையும், வலியையும் தாங்கி, சமாளிக்க முடிகிறது. ஆண், வெளிக்காட்டும் துணிவை பெண்ணாலும் வெளிக்காட்ட முடியும்; ஆனால், இந்த சமூகம் அவளை, 'தட்டி' வைத்துள்ளது!எல்.ராஜகோபால், திருவள்ளூர்: உண்மை என்றால் என்ன?பேஷ்... பேஷ்... பிழைக்கத் தெரிந்து விட்டது உங்களுக்கு... தேர்ந்த அரசியல்வாதி ஆகி விடுவீர்கள்!* எம்.கண்ணன், சிதம்பரம்: பணம், அறிவு, படிப்பு, நாகரிகம் எல்லாம் இருக்கும் சிலர், அமைதியாக இருக்கும்போது, பணத்தை மட்டுமே வைத்திருக்கும் சிலர், ரொம்பவும் அலட்டிக் கொள்கின்றனரே... இவர்களை திருத்துவது எப்படி?நீங்கள் கூறியுள்ள இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சமாசாரங்களை இவர்கள் பெறும்போது திருந்துவர்!டி.அசோகன், கடலுார்: பணத்தை வெறுப்பதாக சிலர் அடிக்கடி கூறுகின்றனரே...உண்மை; அவர்கள் பணத்தை விரும்புவதில்லை தான். ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம்... அவர்கள் வெறுப்பது, அடுத்தவரிடம் உள்ள பணத்தை; தங்கள் பர்சில் உள்ள பணத்தை அல்ல! ஆர்.ராகவன், திண்டுக்கல்: திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்வோருக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்...பெண் பார்க்க செல்லும் முன், புகைப்படம் வாங்கிப் பாருங்கள். சில பெண்கள், 'போட்டோவில் என் முகம் சரியாக இருக்காது...' என்ற குறை கொண்டவர்கள். அப்படிப்பட்டோரை, அவர்கள் அறியாமலேயே ஏதாவது பொது இடத்தில் பாருங்கள்; பிடித்திருந்தால் மட்டுமே நேரில் செல்லுங்கள். எடுத்த எடுப்பிலேயே நேரில் சென்று, 'பிடிக்கலை...' என்றோ, 'போய் கடுதாசி போடுகிறோம்...' என்றோ மனதை உடைக்கும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செயலை செய்யாதீர்கள்! வி.காயத்ரி, நீலகிரி: இல்லாமையைப் போக்க முதல் தேவை உழைப்பா, அறிவா?அறிவுடன் கூடிய உழைப்பு. உழைக்கிறேன் பேர்வழி என மண்வெட்டிக் கொண்டிருந்தாலோ, கருங்கல் உடைத்துக் கொண்டிருந்தாலோ இல்லாமையை போக்க முடியாது. அதே நேரம், மண் வெட்டி,- கல் உடைத்து வியாபாரம் செய்வதில் அறிவையும் பயன்படுத்தினால், இல்லாமையே இல்லை என்றாக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !