உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே.அனுசூயா, தேனி: கல்வித் திட்டம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?மனப்பாடம் செய்து, அதை வாந்தி எடுப்பது என்ற முறை கூடாது. நல்லவனாக, உண்மையே பேசுபவனாக, அகிம்சையை கடைப் பிடிப்பவனாக இருக்க வேண்டும்; பெற்றோர், ஆசிரியர், போலீஸ் மீதுள்ள பயம் காரணமாக இவற்றை கடைப்பிடிக்காமல், 'இந்த நற்பண்புகள் என் இயல்பு' என்று ஒவ்வொரு மாணவனும் எண்ணும் அடிப்படையில் அமைய வேண்டும் கல்வித் திட்டம்!கே.ஆனந்தப்ரியா, பழனி: மூங்கில் ஒரே நாளில், மூன்று அடி உயரம் வளரும் என்கிறாளே என் தோழி... நம்ப முடியவில்லையே...நம்பலாம்; ஆனால், எல்லா வகை மூங்கிலும் அல்ல. ஆயிரத்திற்கும் அதிகமான மூங்கில் வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை, ஒரே நாளில், மூன்று அடி உயரம் வளரும் தன்மை கொண்டவை; புல் வகையைச் சேர்ந்தவை மூங்கில்கள். இவற்றில் மருத்துவ குணம் உண்டு; உணவாகவும் பயன்படுகிறது.பி.வெங்கடரமணன், அவினாசி: உமது சொத்துக் கணக்கு எவ்வளவு... உமது ஓட்டை சைக்கிளை அசையும் சொத்தாக எடுத்துக் கொள்ளவும்...ஓ.கே., அசையும் சொத்து அது ஒன்றே! அசையா சொத்து ஒன்றுமில்லை. இது போக, ஒரு பேனா, கொஞ்சம் மூளை உண்டு!த.கிருஷ்ணன், சென்னை: எனக்கு மனசாட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி கண்டு கொள்வது?தெரிந்தே ஒரு தப்பை நீங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... அப்போது, உடனடியாக உங்களை உங்கள் மனம் கண்டிக்குமானால், உங்களிடம் மனசாட்சி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்!அ.காயத்ரி தேவி, புதுச்சேரி: இதுவரை இன்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விட்டதா?ஓ! ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய் கிடைத்தால் கூட போதும் என்ற மனம் கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் பணியில் உள்ளனர்; அதற்கு மனம் இல்லாதவர்கள் பல ஆண்டுகளாக, வி.ஓ., (வெட்டி ஆபிசர்) பதவி வகித்து வருகின்றனர்!* வ.முருகன், திருவள்ளூர்: என் நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...பொதுவாக பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள்; உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை!* எஸ்.பாஸ்கர், சிதம்பரம்: என்னைச் சுற்றியுள்ளவர்களில் பலரும் கெட்டவர்களாக உள்ளனர். நான் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்?நல்லவர்களாக இருந்தால் தடையற்ற திருப்தியும், கலையாத அமைதியும் கிட்டும்; துன்பங்களையும், துயரங்களையும் கடந்து செல்ல முடியும். நல்லவர்களாக இருப்பவர்களுக்கு, அவர்களின் எல்லை எதுவென்று தெரியும். அதனால், உண்மையுடனே நடந்து இன்புற முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !