அந்துமணி பா.கே.ப.,
ஈரானில் நீண்ட காலமாக மக்கள் ஆவலோடு படித்து வரும் ஒரு மகா காவியக் கதை இது:மிகப் பழங்காலத்தில், உலகம் மிகவும் சிறியதாக இருந்தது. பாரதம், சீனம், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளே அப்பொழுது இருந்தன.ஈரானிய அரசர் உல்லாசக்காரர். வெளிநாட்டுப் புலவர்களையும், கலைஞர்களையும் வரவேற்று, அவர் விருந்து அளிப்பார். பின், பழங்கள் வழங்குவார். குளிர்ந்த பானங்களை அருந்தக் கொடுப்பார். அழகிய நாட்டிய மங்கைகள், நடனம் ஆடி விருந்தினரை மகிழ்விப்பர்.விருந்து முடிந்ததும், மிச்சமிருக்கும் பழங்களை, ஒரு கிழவன் எடுத்துப் போவான். ஆனால், விருந்துகள் அதிகமாகவே மீறும் பழங்களை, அவனுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. கூடத்தில் ஒரு புறத்தில் மறைவாக இருந்த பெரிய சீன ஜாடிகளில், மிச்சமான பழங்களைப் போட்டு வந்தான்! ஒருநாள் இறந்து விட்டான் அந்த வயதான கிழவன்.பல நாட்களுக்குப் பின், இரவில் அரசருக்கு தூக்கமே வரவில்லை... சாளரங்களின் வழியாக வீசிய மலர் மணத்துடன், ஏதோ நெடியும் வந்தது. அது அவர் மூளையைக் கிறங்கச் செய்தது. அது என்ன என்று பணியாளர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னார்.அவர்கள் இங்குமங்கும் ஓடி, சீன ஜாடிகளிலிருந்து நாற்றம் வீசுவதைத் தெரிவித்தனர். அது ஏதோ விஷமாக இருக்க வேண்டும் என்று கருதிய அரசர், சிவப்பு எழுத்தில், அந்த ஜாடிகளின் மேல், 'விஷம்' என்று எழுதி வைத்தார். தமக்கு வேண்டாதவர் களுக்கு அதை கொடுக்கலாம் என்றும் எண்ணினார்.ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டு, நாளுக்கு நாள் இளைத்து வந்தாள் ஒரு நாட்டிய மங்கை. அவளைச் சீந்தவில்லை அரசர். வாழ்வில் வெறுப்புற்று, ஒரு நாள் அந்த ஜாடியிலிருந்து ஒரு கோப்பை திரவத்தைக் குடித்த அவள், மறுநாள் காலையில் தெம்புடன் விழித்தெழுந்தாள்.ஒருவருக்கும் தெரியாமல் அவள் அதைத் தொடர்ந்து குடித்து, உடல்நலம் பெற்று, மீண்டும் நாட்டியமாடினாள்.அவளுடைய ஆரோக்கிய ரகசியத்தைப் பற்றி அரசர் கேட்ட போது, அவள் அந்த விஷ ஜாடியைச் சுட்டிக் காட்டினாள்.அதில் ஒரு துளியை அரசர் அருந்தினார். மேலும், குடிக்க வேண்டும்போல் இருந்தது; குடித்தார். வெறி உண்டாயிற்று; அன்றே மது பிறந்தது!***அவர் ஒரு டாக்டர் - மனோதத்துவ நிபுணர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றியவர். ஆஸ்திரேலிய நாட்டில் வேலை கிடைத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சென்றவர், தான் காதலித்த பெண்ணை கை பிடிக்க, புதுச்சேரி வந்திருந்தார். அன்று தற்செயலாக, நானும் அங்கிருக்கவே என்னை சந்திக்க வந்தார்.வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின், 'பொண்ணு வீட்லயும் யாரும் வரலியாம்... உங்க வீட்லயும் யாரும் வரலியாம்... நாளை ரிஜிஸ்டிரார் ஆபீசில் கல்யாணமுன்னு தோழர்கள் சொல்றாங்களே...' எனக் கேட்டேன்.'ஹி...ஹி...' என சிரித்து வைத்தார்; உன் கேள்விக்கு பதில் சொல்லத் தயாரில்லை என்ற சிரிப்பு.மணப்பெண்ணும் டாக்டர் தான் என்பதால், காதல் திருமணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.'சொல்லுங்க, டாக்டர்... ஆஸ்திரேலியாவில் டாக்டர் தொழில் எப்படி இருக்கு? நிற பாகுபாடு பாக்கறாங்களா? சம்பளம் எப்படி?' என கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனேன்.டாக்டர் ஆரம்பித்தார்:ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் மனோதத்துவம் படிப்பதில்லை. அதனால், அங்கு இந்திய மனோதத்துவ டாக்டர்களே அதிகம். நான் அங்கு சென்ற புதிதில், அங்குள்ள பிரபல நாளிதழில், 'இந்திய டாக்டர்கள் வசம், ஆஸ்திரேலிய மருத்துவத்துறை தஞ்சமடைகிறதா?' என தலைப்பிட்டு பெரிய கட்டுரை எழுதியிருந்தனர்.அதைப் படித்த எனக்கு வயிற்றை கலக்கி விட்டது... எங்கே நம் வேலைக்கு உலை வைத்து விடுவரோ என்று! மற்றபடி, உடன் பணியாற்றும் ஆஸ்திரேலிய டாக்டர்கள் எவரும் நிற வேற்றுமை எல்லாம் பார்ப்பதில்லை; நட்புடனேயே பழகுகின்றனர்.மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம்... இதில் கொடுமை என்னவென்றால், 48 சதவீதம் வருமான வரி... அதாவது, 90 ஆயிரம், ரூபா# வரியாகப் போய் விடுகிறது. ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு, 45 சதவீத வரி விதிக்கின்றனர். இன்னும் ஆறு மாதம் வேலை பார்த்து விட்டேன் என்றால், சம்பளம் 50 சதவீதம் கூடும்!இங்கு சமூக நல அமைப்பு அருமையாக உள்ளது. எதற்கெடுத்தாலும் உதவித் தொகை தருகின்றனர். உதாரணத்திற்கு சொல்லப் போனால், ஆஸ்திரேலியாவின் வெள்ளைத் தோல் ஜனத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 50-60 ஆண்டுகளுக்கு முன், இத்தாலி, கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், சீனாவிலிருந்தும் வந்த மக்களுக்கு, பல சலுகைகள் அளித்து குடியமர்த்தியுள்ளனர்.அவர்களின் சந்ததியர் ஆங்கிலம் பேசுகின்றனரே தவிர, ஒரிஜினலாக வந்து குடியேறியவர்களுக்கு, இன்னும் கூட ஆங்கிலம் பேசத் தெரியாது; புரியாது.இவர்கள் உடல் நலமின்றி ஆஸ்பத்திரிகளுக்கு வரும் போது, மொழி பெயர்ப்பாளரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். இதற்கென மொழி பெயர்ப்பாளர் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மணி நேர கட்டணம், 2,000 ரூபா#. இந்தக் கட்டணத்தை அரசே கொடுத்து விடும். இந்த மொழி பெயர்ப்பாளர்கள், ஒரு நாளில், இது போல குறைந்தபட்சம், ஐந்து மணி நேரம் வேலை செய்கின்றனர்.அடுத்து கல்வி... ஆஸ்திரேலிய இளைஞர்கள், பள்ளிக் கல்வியைத் தாண்டுவதில்லை... உயர் படிப்பு படித்தவர்களுக்கு ஈடாக, ஏன் அவர்களை விட அதிகமாகவே சில வேலைகளில் சம்பாதிக்கின்றனர். உதாரணமாக, 'பிரிக்லேயர்' எனப்படும் கொத்தனார்கள்.இவர்கள் பணிக்கு எக்கச்சக்க வருமானம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவிலேயே மிக அதிக விலை உடைய கார்கள் இவர்களிடம் தான் உள்ளன. எனவே, பல இளைஞர்கள் பள்ளிப் படிப்பு முடிந்ததும், இதுபோன்ற கொத்தனார்களிடம் பயிற்சியாளர்களாக சேர்ந்து விடுகின்றனர்.குறிப்பிட்ட காலம் பயிற்சி எடுத்தபின், பயிற்சி தந்த கொத்தனார் ஒரு சான்றிதழ் கொடுப்பார். அதன்பின் தனியாக பணியாற்றலாம் அவ்விளைஞர்கள். சான்றிதழ் இல்லாமல், அந்நாட்டில் இது போன்றோர் பணியாற்ற முடியாது! நம் நாட்டில் எலக்ட்ரிஷியன்கள், பிளம்பிங் வேலையும் செய்வர், சில, பல மெக்கானிக்கல் வேலையும் செய்வர் அல்லவா? அங்கே அது முடியாது! அந்தந்த வேலையை அது, அதற்கு தகுதி பெற்றவர் தான் செய்ய முடியும்!போதை மருந்து எடுத்துக் கொள்ளும் மோசமான செயல், அந்நாட்டு இளைஞர்களிடையே வேகமாக பரவி வருகிறது... ஹெராயின், கஞ்சா , இன்னும் பல வகையான போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.இவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை... வைத்திருந்தாலே கடுமையான சிறை தண்டனை உண்டு என்றாலும், போலீசாரால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை!நம் நாட்டில் அரசாள்வோர் சரியில்லை; மக்கள் நல்லவர்கள்! அங்கே அருமையான அரசாங்கம், ஏகப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், வஞ்சமில்லாத ஆட்சி; ஆனால், அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளத்தான் மக்களுக்குத் தெரியவில்லை...' என ஆதங்கத்தோடு சொல்லி முடித்தார்!அவர் சொல்லும் வசதி வாய்ப்புகளை பார்க்கும்போது, 'தகுதி பெற்றவர்கள் அங்கே போய் நிறைய சம்பாதிக்கலாம் போலிருக்கிறதே...' என நினைத்துக் கொண்டேன்!***