அந்துமணி பா.கே.ப.,
வாசலில் வாழைப் பழ தள்ளுவண்டிக்காரனிடம் லென்ஸ் மாமாவின் மனைவி, 'அரை டஜன் 20 ரூபாய்; இஷ்டம்ன்னா கொடு!' என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார்.'மாமி, வாழைப்பழம் வாங்குறாங்களே... எனக்கென்னவோ மாமியிடம் வியாபாரம் பண்ண வருகிற ஒவ்வொருவனும் நஷ்டப்பட்டுத்தான் திரும்புவான் என்று தோன்றுகிறது. அது மாமியின் சாமர்த்தியமா அல்லது வருகிறவனின் ஏமாளித்தனமா...' என்றேன் லென்ஸ் மாமாவிடம்.'ஒருவனுக்கு ஏற்படுகிற நஷ்டம் தான், எதிராளிக்கு லாபம் என்பது உலக நடைமுறை. ஆனால், எல்லாருக்கும் லாபம் ஏற்படும்படி ஒரு சமூகம் இயங்க முடியும் என்று ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார்...' என்றார் மாமா.'உதாரணத்திற்கு ஒன்று சொல்லுங்களேன்...' என்றேன்.கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னார் லென்ஸ் மாமா...'நாகரிக வசதி எதுவும் தெரியாத, ஆதிகாலத்துச் சமூகம் ஒன்று ஒரு மலைப் பிரதேசத்தில் இருப்பதாக வைத்துக் கொள். வாழ்க்கைத் தேவைக்கு உழைத்து தான் பிழைக்க வேண்டும். அந்த சமூகத்தில் நூறு பேர் இருக்கின்றனர். மலையின் மேலே ஒரு சுனை இருக்கிறது. எல்லாரும் தினம் அங்கே ஏறிச் சென்று, தண்ணீர் எடுத்து வர வேண்டும். போய், திரும்ப ஒவ்வொருவருக்கும் தினசரி ஒரு மணி நேரம் பிடிக்கும்.'இந்த நூறு பேரில் கொஞ்சம் துறுதுறுப்பான ஆள் ஒருவன். அவன், அந்தச் சுனைக்கு தண்ணீர் வருகிற ஓடை எது என்பதை தற்செயலாக ஒரு நாள் பார்க்கிறான்.'ஒரு கால்வாய் வெட்டி, கீழே கொண்டு வந்து, ஒரு குளமாக அமைக்க முடியுமென்று திட்டம் போட்டு, அப்படியே செய்து முடிக்கிறான்...''அவ்வளவுதான்... ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய் என்று போர்டு போட்டு விடுவான்...' என்றேன்.'அப்படியெல்லாம் அவனுக்குப் பேராசை கிடையாது. மற்ற தொண்ணூற்றொன்பது பேரையும் கூப்பிடுகிறான்... 'நீங்கள் இனிமேல் இங்கே தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் தினந்தோறும் எனக்காக ஒரு பத்து நிமிஷம் உழைத்து, உற்பத்தியைத் தர வேண்டும்... என்கிறான்.'எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர். ஒரு நாளில் 990 நிமிஷம் - பதினாறரை மணி நேரம் - அந்த நூறாவது ஆள் உழைக்கத் தேவையில்லை; அக்கடாவென்று இருக்கலாம்!''உழைப்புத் திருட்டு...' என்றேன்.'எப்படி? ஒவ்வொருவருக்கும் மலை மீது ஏறித் திரும்ப, முன்பு ஒரு மணி நேரம் ஆயிற்று. அதில் பத்தில் ஒரு பங்கை இவனுக்கு இப்போது கொடுக்கின்றனர். மிச்சம் ஐம்பது நிமிடம் அவர்களுக்கு லாபம் தானே... அந்த மிச்சத்தில் அவர்களும் முன்னை விட வசதியாக இருக்கலாமே!'அதோடு மட்டுமல்ல... இந்த நூறாவது ஆள்தான் துறுதுறுப்புப் பிடித்தவனாயிற்றே... தான் வெட்டி உள்ள இடத்தில், ஓடைத் தண்ணீர் வேகமாக விழுவதைப் பார்க்கிறான். அதில் விசை சேர்த்து, காற்றாடி எந்திரத்தின் மூலம், மாவு அரைத்துக் கொள்ள வசதி செய்கிறான்.'இன்னொரு பத்திலொரு பங்கு உழைப்பையோ, உழைப்பின் உற்பத்தியையோ கொடுத்தால், அந்த எந்திரத்தை மற்றவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என்கிறான்.'அவனுக்கு இன்னும் செல்வம் சேருகிறது. மற்றவர்களுக்கு இன்னும் நேரம் மிச்சமாகி, இன்னும் சவுக்கியமாக இருக்க முடிகிறது.'அப்புறம் ஒருநாள், அந்த தொண்ணூற்றொன்பது பேரில் ஒருவன் நன்றாய் செருப்பு தைப்பதை அதே நூறாவது ஆள் பார்க்கிறான்.'உடனே அவனை வேறெந்த வேலைக்கும் போக வேண்டாமென்றும், தினந்தோறும் செருப்பு மட்டுமே தைக்கும்படியும் சொல்கிறான்.'செருப்பு தைக்கும் விதம் மற்றவர்களுக்குத் தெரியாது. ஆகவே, அவனுக்கு தங்கள் நேரத்தில் பத்திலொரு பங்கைக் கொடுத்து செருப்பு வாங்கிக் கொள்கின்றனர்.'இப்படி, இப்படி ஒரு சமூகத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அதெல்லாம் கிடைத்து விடுகிறது, யாருக்கும் நஷ்டமில்லாமல் எல்லாருக்கும் லாபமாக...' என்றார் மாமா.'அருமையான கதை தான்!''அந்த நூறாவது ஆள் புத்திசாலித்தனமாக சொன்ன யோசனைக்கு மற்றவர்கள் ஒப்புக் கொண்டதால் சமூகம் முன்னேறியது. 'நாங்கள் தொண்ணுற்றொன்பது பேர்... நீ ஒருத்தன், உனக்காக நாங்கள் உழைப்பதாவது...' என்று எல்லாரும் சேர்ந்து அவனை அடித்து வீழ்த்தியிருந்தால், என்ன ஆகும்?'அவன் வெட்டிய ஒரே ஒரு குளத்தோடு சமூகத்தின் முன்னேற்றம் நின்றிருக்கும். அந்தத் துறுதுறுப்புக்காரனின் ஆர்வமோ, மூளையோ சமூகத்துக்கும் பயனில்லாமல் அழிந்திருக்கும்...''ஒரு சங்கடம்...' என்றேன். 'நீங்க சொன்ன கதையில், அந்த ஆள் தானே உழைத்து, சுனை தண்ணீரைக் கீழே கொண்டு வந்து, மாவு அரைக்கும் எந்திரத்தை தயார் செய்து, சமூகத்துக்கு உதவினான். ஆகவே, சமூகம் நன்றி பாராட்டும்.'அவனுக்கப்புறம் அவன் மகன் வருகிறான். ஒரு வேலையும் செய்யாமல், தகப்பன் பண்ணின நன்மைக்கெல்லாம் சமூகத்திடம் வட்டி வசூலிக்கிறான்... அப்போது தான் குழப்பம் வருகிறது!''அது தவிர்க்க முடியாதது...' என்று வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார் லென்ஸ் மாமா...'எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எந்த சொத்தாக இருந்தாலும்... பிள்ளைக்கு மட்டும் தான் போக வேண்டும்; பேரனுக்குப் போகக் கூடாது என்று சட்டம் செய்தாலென்ன?' என்றேன்.'அதென்ன, பிள்ளை மட்டும் உசத்தி?''மனிதர்கள் எல்லாரும் சன்னியாசிகளா? 'எவனுக்காக ஐயா நான் பாடுபடணும்...' என்று கையைக் கட்டிக் கொண்டு இருந்து விடுவர். அதனால், 'என் பிள்ளைக்காக நான் பாடுபடுகிறேன்...' என்ற ஆர்வத்துடன் வேலை செய்ய இடம் கொடுப்போம்!'ஆனால், சொத்து அவனுடைய பேரனுக்கும் போனால், சோம்பேறித் தலைமுறை ஏற்பட்டு விடும். அதை தடுத்து விட வேண்டும். எப்படி என் யோசனை?' என்று கேட்டேன்.'உன் யோசனையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது... உன் தாத்தா உனக்கு சொத்து என்று பணம், பைசா எதுவும் வைத்து விட்டுப் போகவில்லை. அப்படித் தானே?' என்றார்.விட்டால் இன்கம்டாக்ஸ்காரர்கள் போல் தோண்டுவார் எனத் தோன்றியதால், 'எஸ்கேப்' ஆனேன்!***