உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'மக்களும் மரபுகளும்' என்ற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் குருவிக்காரர்கள் பற்றிய குறிப்புகள் படு சுவாரசியமாக இருந்தன. இதோ:நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களை சேர்ந்த நாடோடி இனத்தவர். தென் மாநிலங்களில், சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலப்பதில்லை.நரிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள்; சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுள்களை தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுள்களின் உருவங்கள், ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அத்துணி மூட்டை, சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சாமி மூட்டை உண்டு; குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை கவனிக்கப்படுகிறது. சாமி மூட்டையிலுள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் இருக்கும். இவற்றை அவர்கள் பல பரம்பரையாக வைத்திருப்பதாக கூறிக் கொள்வர்.ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடையை, 'சாமி பாவாடை' என்று கூறுகின்றனர். நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதியில்லை. அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை, அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடக் கூடாது. அடுத்தவர்களுக்கு, அவர்கள் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்ட விரும்புவதில்லை.வழிபாடு செய்யும் போது தலையை விரித்துப் போட்டு, சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின், ரத்தம் தோய்ந்த பாவாடையை அணிந்து வழிபாடு செய்வான்.பூவும், குங்குமமும், மஞ்சள் தூளும் பலி கொடுத்த மிருகத்தின் ரத்தமும், தேவதைகளின் முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த ரத்தத்தில் புரள்வான் குடும்பத்தின் தலைவன்.ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்து கொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி, அவனுக்குக் கொடுக்கப்படும்.குடும்பத்தில் மூத்த மகன், தந்தை யினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனது சாமி மூட்டையில் உள்ள ரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டுத் தலைமுறைகள் கடந்த, மிகப் பழைய துணியாக இருக்கும்.எப்போ தெல்லாம் பூஜை நடத்து கின்றனரோ, அப்போ தெல்லாம் உறவினர் களையும், கோத்திரக்காரர் களையும் (தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்கு தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பர்.— இப்படியாகச் சொல்கிறது புத்தகம்!'அமுத சுரபி' பத்திரிகை ஆசிரியர் விக்ரமன் எழுதிய கட்டுரை ஒன்றை படித்தேன்.அந்தக் காலத்துக்கு நம்மை இழுத்துச் செல்லும் கட்டுரை இதோ:நாற்பதாண்டுகளுக்கு முன் வரை மின்சார வசதியில்லாத வீட்டில் தான் வசித்தேன். எழுத்து, படிப்பு என எல்லாமே, மின்சாரம் இல்லாத கால கட்டத்தில் தான் கழிந்தது.மின்சார வசதி இல்லாத வீட்டில் எப்படி இருந்தோம் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்; இப்போதெல்லாம், சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டால், குடியே மூழ்கி விட்டது போன்ற கவலை, சாபம், கோபம் எல்லாம் பொங்கி வருகிறது.என் மனைவியின் வீட்டில், அவள் பிறந்த போதிலிருந்தே மின்சார வசதி இருந்தது. அதனால், கல்யாணமாகி வந்த சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டாள்; பிறகு பழகி விட்டாள். எங்கள் வீட்டில் ரேடியோ வசதியில்லை என்பதால், மின் வசதியுடைய வீட்டில் குடி புகுந்தவுடன், ஒரு ரேடியோ வாங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்; குறைவான வால்வு கருவியுள்ள ரேடியோ, 300, 400 ரூபாய்க்கு கிடைத்தது.என் அலுவலக சம்பளத்தில் வாங்க முடியாது; பேராசிரியர் சாண்டில்யனை, 1949லிருந்தே எனக்குப் பழக்கம். சுதேசமித்திரன் ஞாயிறு இதழ் பொறுப்பை அவர் ஏற்றபோது, பல எழுத்தாளர்களுக்கு ஆதரவு தந்தார்.எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு, 'தொடர்கதை' ஒன்று எழுதுமாறு என்னைத் தூண்டினார். அதன் விளைவாக, 'இதயபீடம்' சமூக நாவல் ஞாயிறு இதழில் வெளிவரத் துவங்கியது; அது, என் முதல் நாவல். பதினைந்து வாரங்களோ, அதற்கு மேலாகவோ வெளிவந்தது. 'சன்மானத்தை வாரா வாரம் தந்தால் செலவு செய்து விடுவீர்கள்... கதை முடிந்தவுடன் மொத்தமாகத் தருகிறேன்...' என்றார் சாண்டில்யன்.கதை முடிந்ததும் நானூறோ, அதற்கு மேலாகவோ கேஷ் ஆர்டர் வந்தது.அப்போதெல்லாம் சுதேசமித்திரன் அலுவலகத்தில், 'கேஷ் வவுச்சர்' அனுப்புவர். அதில் ஸ்டாம்பு ஒட்டி, சுதேசமித்திரன் அலுவலகம் சென்று, அதை கேஷியரிடம் கொடுத்து, சிறிது நேரம் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தால், பெயர் சொல்லி அழைப்பர்; வவுச்சர் தொகை ரூபாயாகக் கொடுக்கப்படும்.இதய பீட நாவலுக்கு வந்த தொகை, அக்காலத்தில் கணிசமான தொகை. என் முதல் தொடரின் அன்பளிப்பை எடுத்துச் சென்று, மனைவியிடம் கொடுத்தேன்.'இந்தத் தொகையை குடும்பத்திற்கு செலவு செய்யக் கூடாது; எதாவது நினைவில் நிற்கும்படியான பொருள் வாங்கலாம்...' என்றாள் என் மனைவி. நீண்ட நாள் தேவையான, ரேடியோ வாங்க இருவரும் புறப்பட்டோம்.விற்பனையாளரிடம், ' முதலில் ரேடியோவை எடுத்துச் செல்கிறோம்; ஒலி நன்றாகக் கேட்டால் தான் வைத்துக் கொள்வோம்...' என்று நிபந்தனை விதித்து, ரேடியோவை எடுத்து வந்தோம்.நாங்கள் குடியிருந்த வீட்டில், நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு மற்றவர் நன்றாக இருந்தால் பிடிக்காது. ரேடியோவுடன் ரிக் ஷாவில் இருந்து இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று எழுந்து உள்ளே போய் விட்டார். ரேடியோவைப் பாட வைக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தோம். சில சமயம் அது திடீரென பெரும் சத்தத்துடன் ஒலிக்கும். பிறகு கர்புர்... இரவு 9:00 மணி; வீட்டுக் கதவு தட்டப்பட்டது. வீட்டுக்கார அம்மாள் நின்று கொண்டிருந்தார்.'இதோ பார்... ரேடியோவெல்லாம் வைச்சுக்கக் கூடாது; கரன்ட் சார்ஜ் அதிகமாகும். மற்ற குடித்தனக்காரர்களுக்கு தொந்தரவாக இருந்தாலும், ரேடியோ வைச்சுக்கணும்னா வாடகை, 30 ரூபாய் கூடுதலாகத் தரணும்; கரன்ட் சார்ஜுக்கு, 20 ரூபாய் அதிகம் தரணும்...' என்று கூறி, கதவைப் பட்டென்று சாத்திக் கொண்டு போய் விட்டார். நாங்கள் ரேடியோ வாங்கவில்லை; அந்தப் பணம் வீட்டுச் செலவுக்கு உதவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !