உள்ளூர் செய்திகள்

ஜாம்பியா!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தென் பிராந்திய பொது மேலாளர், ஜாம்பியா பற்றி கூறும் சிறப்பு பேட்டி.கடந்த ஆண்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் விற்பனை ஐந்து லட்சம் கோடி ரூபாய்! விற்பனை அளவுகோலில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தான். இதன் தென் பிராந்திய பொது மேலாளரான, ஏ.பாண்டியன், இந்நிறுவனத்தில், இந்தியாவின் பல பகுதிகளிலும், ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிலும், பல முக்கிய பதவிகள் ஏற்று, திறம்பட பணி புரிந்தவர். ஜாம்பியா நாட்டில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பாண்டியன், அந்நாட்டின் வாழ்க்கையை பற்றிய பல சுவையான தகவல்களை, 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு அளித்துள்ளார். அவை இதோ:அக்., 24, 1964ல் இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது ஜாம்பியா. இதன் முந்தைய பெயர், வடக்கு ரொடேஷியா. தென் ரொடேஷியா சுதந்திரம் பெற்று ஜிம்பாப்வே ஆனது. ஜாம்பியாவின் தலைநகரம் லுசாகா.ஜாம்பியா என்ற பெயர், அந்நாட்டில் பாயும் மிகப் பெரிய நதியான, 'ஜாம்பசி' என்ற பெயரிலிருந்து வந்தது. ஜாம்பசி என்றால், 'கடவுளின் நதி' என்று அர்த்தம். இந்நாட்டில் கடற்கரை கிடையாது; நான்கு பக்கமும் நாடுகள் தான்.உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும், விக்டோரியா நீர்வீழ்ச்சி இங்கு தான் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாக கருதப்படும் இந்நீர்வீழ்ச்சி, ஜாம்பசி நதியில், 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. இதன் அகலம், 1.6 கி.மீ.,உலகப்புகழ் பெற்ற கனடா மற்றும் அமெரிக்க நயாகரா நீர்வீழ்ச்சியை விட, விக்டோரியா நீர்வீழ்ச்சி இரு மடங்கு அகலம், ஒன்றரை பங்கு உயரம் கொண்டது. 10 கி.மீ., தூரத்திற்கு இந்நீர்வீழ்ச்சி பனி போல தெரியும்.பொதுவாக இந்நாட்டு மக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக, சாப்பாட்டுடன் கோக், பான்டா மற்றும் பீர் போன்ற பானங்களையே அருந்துகின்றனர். குழந்தைகள் கூட தண்ணீர் குடிப்பதில்லை; ஓட்டலுக்கு சென்றாலும், முதலில் தண்ணீர் தருவதில்லை.இவர்களின் முக்கிய உணவு வெள்ளை சோளம். வெள்ளை சோளத்தை மாவாக்கி, வெந்நீர், மிளகு, உப்பு கலந்து, களி போல தயாரிக்கின்றனர். மேலும், இயேசு கிறிஸ்து ஆடு மேய்ப்பவராக இருந்தவர் என்பதால், இவர்கள் ஆட்டு மாமிசம் சாப்பிடுவதில்லை. சிக்கன் மற்றும் மீன் என்றால் ஒரு பிடி பிடிப்பர்.துணிகளை துவைத்து உலரப் போடும் போது, ஒரு வகை பூச்சி, துணிகளின் மீது முட்டைகளை இடுகிறது. அந்த ஆடையை அப்படியே அணிந்தால், அந்த பூச்சியின் முட்டைகள் தோலுக்குள் சென்று படாதபாடு படுத்தி, சொரி போன்ற நோயை ஏற்படுத்தும் என்பதால், துவைத்து காய வைக்கப்படும் எல்லா ஆடைகளையும், உள்ளாடைகள் உட்பட அனைத்தையும் இஸ்திரி செய்த பின்னரே உபயோகிக்கின்றனர்.ஜாம்பியா நாட்டின் கரன்சியின் பெயர் ஜாம்பியா க்வாச்சா. இந்திய ஒரு ரூபாய்க்கு, 118 ஜாம்பியன் க்வாச்சா சமம். 10,000 க்வாச்சா கரன்சி நோட்டுகளும் உண்டு.ஜாம்பியா மக்கள், அன்றைய தினத்துக்காக வாழ்பவர்கள்; பிற்காலத்திற்கு என்று சேமித்து வைப்பதில்லை. ஆங்கில இசை, நடனம் என்று எதைப் பற்றியும் கவலையில்லாமல் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர்.ஜாம்பியா நாட்டு சட்டப்படி, ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை இரு தவணையாக கொடுக்க வேண்டும். மாதக் கடைசியில், செலவு செய்ய அவர்களுக்கு பணம் வேண்டும் என்பதற்காக இந்த வழக்கத்தை, கடைபிடிக்கின்றனர்.இங்குள்ள பழங்குடியினரிடம் விநோத வழக்கங்கள் இருக்கின்றன. சொந்த ஊரிலிருந்து முன் அறிவிப்பு ஏதுமின்றி வெளியூரிலிருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு வருவர். அப்போது, வீட்டில் இருக்கும் உணவை அனைவரும் பகிர்ந்து உண்கின்றனர். திரும்பி, அவர்கள் ஊருக்குப் போக, வீட்டிலிருப்போர் தான் பணம் தர வேண்டும். 'வில்லேஜ் கசின்' என்று இவர்களை குறிப்பிடுகின்றனர்.கணவர் இறந்தால், அவரது சொத்து, பணம் எல்லாம் அவருடைய மனைவி, குழந்தைகளுக்கு சேராது. கணவரின் குடும்பத்தினரையே சேரும். மனைவி, 40 வயதுக்கு மேற்பட்டவராகவும், குழந்தைகள் பெரியவர்களாகவும் இருந்தால் தான், சொத்தில் பங்கு. இளம் விதவையை, கணவரின் சகோதரர் மணப்பது உண்டு.தான் சம்பாதிப்பது தன் குடும்பத்திற்கு கிடைக்காது என்பதே அவர்களை, 'அன்றைய நாளுக்காக' வாழ்பவர்களாக மாற்றியுள்ளது.உலகில் மிக அதிகமாக செம்பு தாது கிடைக்கும் இரண்டாவது நாடு ஜாம்பியா! நிறைய செம்பு சுரங்கங்கள் அரசுக்கு சொந்தமானவை. செம்புத் தாது எடுப்பது மற்றும் பிராசசிங் செய்வது என, எல்லாவற்றையும் அரசே செய்கிறது. இங்கிருந்து, செம்பு, 100 சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. இந்நாட்டிற்கு பெரிய அளவு வருமானத்தை செம்பு ஈட்டிக் கொடுப்பதால், இத்தொழிலில் நிறையப் பேர் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, பெரும்பாலும் குஜராத்திகளே வியாபாரிகளாக உள்ளனர். இரண்டு, மூன்று தலைமுறையாக இங்கு வியாபாரம் செய்யும் குஜராத்தி குடும்பங்கள் அதிகம். இவர்கள் தவிர இலங்கை மற்றும் தமிழகத்திலிருந்தும் தமிழர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். செம்பு வியாபாரத்தை, இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.கால்பந்து ஆடுவது என்றால் ஜாம்பியா மக்களுக்கு மிகவும் விருப்பம் அதுதான், அவர்களது தேசிய விளையாட்டு.இங்கு, குஜராத்திகள் ராதா - கிருஷ்ணர் கோவிலையும், சீக்கியர்கள், குருத்வாராவையும் கட்டியுள்ளனர். அத்துடன், சத்ய சாய்பாபா கோவிலும் உண்டு. பிரம்ம குமாரிகள் அமைப்பும் செயல்படுகிறது. உள்ளூர்வாசிகள் சர்ச்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.நவராத்திரி பண்டிகை, இங்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் பெரிய உற்சவம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் மற்றும் தான்டியா நடனமும் பிரமாதமாக நடக்கும். நவராத்திரி, 10 நாட்களும் இரவில், சாலைகளில் சுதந்திரமாக நடக்கலாம். கோவிலில் பிரசாதம் கொடுப்பர்.ஜாம்பியா சிறுமிகள் நல்ல உயரமாக உள்ளனர். 12 வயது சிறுமிகள், 18 வயது பெண்ணைப் போல் தோற்றமளிக்கின்றனர். பொதுவாக, எல்லா பெண்களுமே ஆஜானுபாகுவாக இருக்கின்றனர். பள்ளிச் சிறுமிகள் கர்ப்பமாவது இங்கு சாதாரணம். அதனால், எய்ட்ஸ் நோயின் தாக்கமும் அதிகம். இந்த இரு பிரச்னைகளும் சமுதாயத்திற்கும், அரசுக்கும் பெரிய சவாலாக உள்ளது.இங்கிலாந்து மற்றும் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் நடத்தும் நிறுவனம் ஒன்று, தமிழ் திரைப்படங்களின் உரிமையை பெற்று, 'சிடி'க்களாக தயாரித்து உலகமெங்கும் வினியோகிக்கிறது. ஜாம்பியாவில் உள்ள தமிழ்ச் சங்கம் பணம் கட்டி அவைகளை வரவழைத்து கொடுக்கிறது. சென்னையில் தமிழ்ப் படங்கள் வெளியான ஒரு மாதத்திற்குள், இங்குள்ள தமிழர்கள் அப்படத்தை வீட்டில் பார்த்து விடுவர். இந்தி படங்களும் இதே போன்று தான்!டாடா குரூப்பின் ஐந்து நட்சத்திர ஓட்டல் தாஜ் பமோட்சி, தலைநகர் லுசாகாவில் உள்ளது. இந்நாட்டிற்கு வருகை தரும் பல வெளிநாட்டு அதிபர்கள், இந்த ஓட்டலில் தான் தங்குவர்.ஆப்பிரிக்காவின் பல நாடுகளில், டாடா அன்ட் சன்ஸ் நிறுவனம் இயங்குகிறது. முன்பு, மாருதி கார்களின் பாகங்களை வரவழைத்து, ஜாம்பியாவிலேயே, 'அசெம்பிள்' செய்தனர். இப்போது, முழுவதுமாக தயாரிக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்கின்றனர். நிறைய வெளிநாட்டு செகண்ட் ஹேண்ட் கார்கள் இங்கு கிடைக்கின்றன.இங்கு, மே - ஆகஸ்ட் மாதங்களில் நல்ல குளிர். இரவு நேரங்களில் ஜீரோவை விட குறைந்த வெப்பநிலை இருக்கும். ஜாம்பியா, கடல் மட்டத்திலிருந்து, 1,000 முதல், 1,300 அடி உயரத்தில் இருக்கிறது.ஜாம்பியாவில் துறைமுகம் இல்லாததால், தான்சானியாவில் உள்ள தாருசலாம் துறை முகத்தில் இருந்து தான், தேவையான கச்சா மற்றும் பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் இந்தோலாவில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஜாம்பியா மற்றும் இத்தாலி என, இரு நாடுகளும் சேர்ந்து அமைத்த சுத்திகரிப்பு ஆலையில், சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அங்கு தயாராகும் பெட்ரோல், டீசல் போன்றவை ஸ்டோரேஜ் பாயின்ட்டுக்கு அனுப்பப்படுகின்றன. சர்வதேச அளவில் நடைபெற்ற டெண்டரின் மூலம், அந்த ஸ்டோரேஜ் பாயின்ட்டை நடத்தும் பணி குறிப்பிட்ட காலத்திற்கு, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.* இங்கு வாழும் தமிழர்களுக்காக ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தி வந்தேன். அதில் பெரியபுராணத்தை பற்றி, அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் தொடர் கட்டுரை எழுதினேன்.* என் செகரட்டரியாக பணிபுரிந்த பெண்ணின் பெயர் ஜூலு; அவர் என்னை, 'மிஸ்டர் பாண்டியன்' என்றே அழைப்பார். பாஸ்களை, செகரட்டரிகள், பெயரோடு, மிஸ்டரையும் சேர்த்து அழைப்பது இங்கு வழக்கம். ஜூலு, மகிழ்ச்சியாக இருந்தால் என்னை, 'பானா' என்று அழைப்பார். பானா என்றால், 'தலைவர்' என்று பொருள்.* கடந்த, அக்.,28, 1997 அன்று, திடீரென்று ராணுவ புரட்சி ஏற்பட்டது. காலை, 6:30 மணிக்கு, 'யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது...' என்று ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. 'உங்க வேலையை தொடர்ந்து செய்யுங்க...' என்று உள்ளூரில் உள்ள அமைச்சர் டெலிபோனில் என்னிடம் சொன்னார். 'என் பணியாளர்களுக்கு அபாயம் ஏற்படும்படி செய்ய மாட்டேன்...' என்று சொல்லி விட்டேன். 6 மணி நேரத்தில் ராணுவ புரட்சி முடிந்து விட்டது. இந்திய ஹைகமிஷன் அதிகாரிகளும், 'எங்கள் பணியை துவங்கலாம்...' என்று அனுமதி கொடுத்த பின் தான், நாங்கள் இயங்க ஆரம்பித்தோம்.- எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !