உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

திருமணமான ஆண்களில் பலர், தம் மனைவியரை கவனிப்பதில்லை. அவர்களும் மனிதப் பிறவி தான்; ஆசாபாசங்களும், விருப்பு வெறுப்புகளும் உண்டு என்பதை, எண்ணுவதில்லை. தங்களது சுக போகங்களுக்கும், ஆடம்பர அனாவசியங்களுக்கும் தம் நேரத்தையும், பொருளையும் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபரீதங்களும் எத்தனை எத்தனை!பெண் வாசகியர் இருவர் எழுதிய கடிதங்களை படித்தபோது, கணவன்மார்களின் பாராமுகம், அவர்களை எவ்வளவு தூரம் பாதித்து, விபரீத எண்ணங்களை, மனதில் விதைத்துள்ளது என்பதை, தெரிந்து கொள்ள முடிந்தது:என் வயது, 35ஐ தாண்டி விட்டது. கல்யாணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் வீட்டருகே, ஒரு குடும்பம் குடி வந்தது. அவர்களுக்கு ஒரே பையன்; என்னை விட இளையவன். அவன், என்னை விரும்புகிறான். இது இருவீட்டாருக்கும் தெரிந்து, பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். அதையும் மீறி, பேசும்போது, எனக்கு அடியும், உதையும் தான் கிடைக்கிறது. இப்போது, பேசக்கூட முடிவதில்லை.தண்ணீர் பிடிக்க அவர்கள் வீட்டருகே செல்ல வேண்டும். நான் தண்ணீர் பிடிக்கும்போது, அவன் வந்தால், மற்றவர்கள் முகம் ஒரு மாதிரியாகி விடுகிறது. நானும், அவனிடம் எத்தனையோ தடவை, 'வேண்டாம், என்னை விட்டு விடு; நான் அழகாக இல்லை. இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டேன். நீ நன்கு படித்த, அழகான, வேலைக்கு போகும் பெண்ணாக பார்த்து கல்யாணம் முடித்துக் கொள்...' என்று சொன்னால், அவன் கேட்பதில்லை. இருமுறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டான்; நான் தான் காப்பாற்றினேன்.இங்கே, என் கணவரை பற்றி கூறியாக வேண்டும். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அவர், தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார். இரு பெண்களுக்கும் திருமணம் செய்யத் தேவையான நகை, நட்டுகளை இப்போதே வாங்கி விட்டார். ஆனால், மனைவி என்ற ஒரு ஜீவன், வீட்டில் இருப்பதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் நடந்து கொள்கிறார்.ஆசையாக சினிமாவிற்கோ, ஓட்டலுக்கோ அழைத்துச் செல்வது இல்லை. சரி, இவையெல்லாம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு சராசரிப் பெண்ணின் உடல் தேவைகளையாவது புரிந்து வைத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டு, இரவில், நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்.இந்த நேரத்தில்தான், என் வாழ்வில் நுழைந்தான் அந்தப் புதியவன். என்னை புரிந்து கொண்டான். என்னாலும் அவனை மறக்க முடியாத நிலை உருவாகி விட்டது. அக்கம், பக்கத்தினர் மூலம், என் கணவர் காதுக்கு செய்தி எட்டி, இப்பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. தினமும் எனக்கு அடி உதை தான்; உடம்பெல்லாம் காயம்.'என்னோடு வா...' என்று கூப்பிடுகிறான் அவன். உள்ளுரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 'நல்ல வேலை கிடைத்தால், கூட்டிக் கொண்டு போய் விடுவேன்...' என்கிறான். 'என் புருஷனிடம் ரொம்ப கஷ்டப்படுகிறேன்...' என்று சொன்னதற்கு, 'உன் அப்பா வீட்டில் கஷ்டமே படாதவள். இங்கு உனக்கு செலவு செய்ய பணம் கிடைக்கிறது. என்னோடு வந்தால், இரண்டு நாள் இனிக்கும்; அதன்பின், பணம் கையில் இல்லையெனில், நீ மிகவும் கஷ்டப்படுவாய். அதனால், சில நாட்கள் பொறுத்திரு...' என்று சொல்கிறான்.நான் மனதளவில், அவனிடம் எப்போதோ நெருங்கி விட்டேன். செக்சில் எனக்கு உடன்பாடு இல்லை. அவனிடம், 'செக்சுக்காகத்தான் என்னை விரும்புகிறாயா?' என்று கேட்டால், உடனே அவனுக்கு கோபம் வந்து, 'உன் குணத்திற்காகத் தான் உன்னை விரும்புகிறேன். வேறு பெண்ணை மணக்க வேண்டுமென்றால், எதற்கு உன்னோடு பழகுகிறேன்...' என்கிறான்.'பிள்ளைகள் என்னுடன் இருக்கட்டும்; நீ அவனுடன் ஓடி விடு...' என்கிறார் என் கணவர். மிகவும் குழம்பிய நிலையில் உள்ளேன். ஒன்று, வீட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும்; இரண்டு, பிள்ளைகள் உள்ளனர். அதை பார்த்து, ஊமையாய் உள்ளேன். அடிக்கும்போது கூட மற்றவர்களுக்கு கேட்கக் கூடாது என்று, கத்தாமல் வாய் மூடி மவுனமாக உள்ளேன். தலை மயிரை கொத்தாக பிடித்து, தலையை சுவற்றில் முட்டுகிறார். தலையில் கொட்டும் போது, உயிரே போய் விடும் போல் உள்ளது. உயிரை விடலாம் என்று நினைத்தால், பிள்ளைகள் நினைவு தடுக்கிறது...- இதே ரீதியில் கடிதம் செல்கிறது...இன்னொரு வாசகியின் கடிதம்:என் வயது, 21; திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. எனக்கு கொஞ்சமும் பொருந்தாத குணம் கொண்டவர் என் கணவர். அவருக்கும், எனக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால், என்னை புரிந்து கொள்வதோ, மதிப்பதோ இல்லை. என் மனக் கஷ்டங்களை சொல்லி அழுதால் கூட புரிந்து கொள்ளாமல், நான் சிறுபிள்ளை என்று, அசட்டையாக நினைக்கிறார். இந்த சூழ்நிலையில், என்னை உயிருக்கு உயிராக நேசித்து, அன்பு செலுத்துகிறார் ஒருவர். மிகவும் பரந்த மனப்பான்மையும், ஆண்களில் இப்படியும் இருப்பரா என்று வியக்கும் அளவிற்கு உயர்ந்த குணமும் உடையவர் அவர்.என் செயல்களுக்கு, பேச்சிற்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறார். அவர் எதிர்பார்க்கும் எல்லா குணமும் என்னிடம் இருப்பதாக சொல்கிறார். துன்பத்திற்கு ஆறுதல் அளிக்கிறார். என்னை நேசிப்பவரின் திருமணத்திற்கு, நான் தடை விதிக்கவில்லை.'நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டும்தான், நம் அன்பை பகிர்ந்து கொள்ள முடியுமா... நீ என்றும் என் மனதின் உரிமையானவள்; நான் திருமணம் செய்தாலும், என் அன்பு என்றும் மாறாது...' என்கிறார்.எங்கள் உறவுமுறை, தவறாக இருப்பதால், நாங்கள் சேர நினைத்தாலும், குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தை நினைத்து, தவிக்கிறோம். இதற்கு நீங்கள்தான் நல்ல பதில் தர வேண்டும். உங்கள் பதில் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. என் உணர்ச்சிகளை உங்களிடம் கொட்டிவிட்டேன்...- என்று எழுதியுள்ளார்.பிரச்னைக்கான தீர்வை, தனிப்பட்ட முறையில் எழுதி விட்டாலும், தங்களைப் போன்ற மனித உயிர்கள் தாம் மனைவியர்; ஜடப் பொருட்கள் அல்ல என்பதை, இதுவரை உணராத கணவன்மார்கள், இனி மேலாவது உணர்ந்து திருந்த வேண்டும், அதன் மூலம் விபரீதங்கள் ஏற்படாமல் காக்க வேண்டும் என்பதற்காகவே, இவ்விரு கடிதங்களும், இங்கே அச்சாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !