அந்துமணி பா.கே.ப.,
'ஓய் லென்ஸ்... உமக்கு ரொம்ப பிடிச்ச, 'சரக்கு' சமாசாரம் பத்தி, படிச்சேன் சொல்லட்டுமா?' என்ற குப்பண்ணா, மாமாவின் முகத்தையே பார்த்தார்.வேண்டுதல் காரணமாக பழனிக்குச் சென்று சமீபத்தில் மொட்டை அடித்து திரும்பியிருந்த லென்ஸ் மாமா, மொட்டைத் தலையை தடவியபடியே, 'சொல்லுங்க...' என்று, குப்பண்ணாவைப் பார்த்தார்.'சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... சங்க காலத்திலேயே,'அடுகள்'ங்கற பெயருல சாராயம் புழக்கத்தில் இருந்ததாம். பல வகைப் பழங்களை ஊறலாக்கி, அதை வடிச்சு, சாராயம் குடிக்கும் பழக்கம், தமிழகத்தில், 17ம் நூற்றாண்டில் இருந்ததாம்... 'விறலி விடு தூது'ங்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... 'சாரம்'ங்கறது தான், சாராயம் ஆச்சாம்...'பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்...'நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை மற்றும் தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல்லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...'பட்டைச் சாராயம்ங்கறது என்ன தெரியுமா... பழவகை, இனிப்புகளை போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம் பட்டை, வேப்பம் பட்டை போன்ற மரப் பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...'அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்காய் சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்.'இத்தோட, ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக்கங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என, நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!உங்கள் கைகளைப் பற்றிய சில விவரங்கள்.* பெண்களைக் காட்டிலும், ஆண்களே அதிகப்படியான இடது கைக்காரர்களாக இருக்கின்றனர்.* தாயின் வயிற்றில், நான்காவது மாதத்திலேயே, குழந்தையின் விரல் நுனி முழு வளர்ச்சி பெற்று விடுகிறது.* வலது கை நடு விரலில் தான், நகம் வேகமாக வளர்கிறது.* வலது கைக்காரர்களுக்கு, இடது பக்க மூளை, அதிகமாக வேலை செய்யும்.* கைரேகைகள் எந்தக் காலத்திலும் எதனாலும் மாறாது.* கால்சியம் குறைவாக உள்ளவர்களுக்கு நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்; எப்போதும் கவலையில் ஆழ்ந்துள்ளவர்களின் நகங்களிலும் வெள்ளைப் புள்ளிகள் விழும்.— மருத்துவ இதழ் ஒன்றில் படித்தது!அன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். நிறைய படிப்பவர்; படித்ததை எல்லாரிடமும் கொட்டித் தீர்ப்பார். வந்து அமர்ந்ததும், 'ஒரு டீ சொல்லுப்பா...' என, உரிமையாக ஆர்டர் செய்துவிட்டு, 'டூ பிளாண்ட்ஸ் ஹேவ் பீலிங்க்...' தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டான்னு ஒரு கட்டுரை படிச்சேன்பா. அதுல என்ன சொல்லி இருக்கு தெரியுமா?' என்று கேட்டு, அவரே தொடர்ந்தார்...'மனிதன் பொய் சொன்னாலும் கூட, மரம், செடிகள் கண்டுபிடித்து விடுமாம்; தாவரங்களுக்கு அவ்வளவு நுண்ணறிவு உண்டுன்னு நிரூபிச்சுருக்கார், பாக்ஸ்டர் என்பவர்.'தன் மீது பிரியமுள்ளவர்களிடம் செடிகளும், மரங்களும் அளவுக்கு மீறிய பாசத்துடன் இருக்கின்றன. தன்னை வளர்க்கும் எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வரும் போலிருந்தால், அவை படபடக்கின்றனவாம்.'பாக்ஸ்டர் செய்த இன்னொரு சோதனை, சிந்தனையைத் தூண்டக் கூடியது. ஒரு அறையில் இரண்டு செடிகளை வைத்தார். பின், அறைக்குள் ஒருவரை அனுப்பி, ஒரு செடியை வேரோடு, பிய்த்துப் போடும்படி சொன்னார். அந்த நபர் அவ்வாறே செடியை பிய்த்துப் போட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.'யார் செடியைக் கொலை செய்தது என்பது, அறையில் இருந்த இன்னொரு செடியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.'பாக்ஸ்டர் மிஞ்சியிருந்த செடியுடன், 'போலிகிராப்' என்ற கருவியை இணைத்தார். பின், ஐந்து பேரை ஒவ்வொருத்தராக அந்த அறைக்குள் வரச் செய்தார். கிள்ளி எறிந்த ஆள் வந்தபோது, செடியின் உணர்வுகள் துடிதுடிப்பதை, 'போலிகிராப்' பதிவு செய்தது. கொலைகாரனை செடி அடையாளம் கண்டு கொண்டது...' என்றார்.மனிதனிடம் அகன்று வரும் நேயம், மரங்களிடம் எஞ்சி உள்ளதே என நினைத்துக் கொண்டேன்.தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த முன்னாள் தலைவர்கள், சரித்திரம் படைத்த அரசர்கள், காவிய நாயகர், நாயகிகளுக்கு சிலை வடிப்பதில் ஆர்வம் அதிகம். 70களில் அவர் முதல்வர் பதவி வகித்த போது, சென்னை மெரினாவில் பலருக்கும் சிலை எடுத்தார்.சோழ மன்னன் ராஜராஜனுக்கு, தஞ்சை பெரிய கோவிலினுள் சிலை அமைக்க, 71ம் ஆண்டு முயன்றாராம், கருணாநிதி. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கோவிலுக்குள் சிலையை வைக்க அனுமதிக்கவில்லையாம். அதனால், கோவிலுக்கு வெளியே சாலை ஓரத்தில் சிலையை வைத்தார் கருணாநிதி என்று, முன் எப்போதோ நடுத்தெரு நாராயணன் என்னிடம் கூறி இருந்தார்.'திண்ணை' பகுதியின், நடுத்தெரு நாராயணனை சந்தித்தபோது, 'ராஜராஜன் சிலை திறப்பு விழாவின் போது, கருணாநிதி ஆற்றிய உரை உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்...' எனக் கேட்டிருந்தேன். தேடித் தருவதாகச் சொல்லி இருந்தார்.சமீபத்தில், வேறு எதையோ தேடும்போது, 71ம் ஆண்டு நாளிதழ் பிரதிகளை பார்க்க நேர்ந்தது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சு கிடைத்தது. அது: தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோவில்களை நம்மிடம் ஒப்படைத்தால், இன்னும் சிறப்பாக நம்மால் வைத்திருக்க முடியும். அவைகளை மாநில அரசிடம் ஒப்படைத்தால், இந்திய ஒருமைப்பாடு ஒன்றும் கெட்டு விடாது.மதுரையில் திருமலை நாயக்கரின் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. அதுவும் அம்பிகை இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அருகிலேயே இருக்கிறது. மதுரை கோவிலை முழுவதும் அவர் கட்டியதற்கான சரித்திரபூர்வ ஆதாரம் இல்லை.திருப்பணி செய்தவருக்கே சிலை வைக்கப்பட்டு இருக்கும் போது, பெரிய கோவில் முழுவதையும் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஏன் உள்ளே சிலை வைக்கக் கூடாது?சேதுபதிக்கு ராமேஸ்வரத்தில் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ராஜராஜ சோழனுக்குத் தடை! ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்கப் போவது உறுதி; அதுவும், நாம் நினைக்கிற இடத்தில் வைப்போம்!— இப்படிப் பேசி இருக்கிறார்; அதை ஒரு பிரதி எடுத்துக் கொண்டேன்.அடுத்த முறை, நாராயணன் சார் ஆபிஸ் வந்த போது, இந்த பிரதியைக் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் படித்து முடித்ததும், 'இந்திரா காந்தி தான் மறுத்து விட்டார்; அதன்பின், வி.பி.சிங், தேவகவுடா, வாஜ்பாய் அரசுகளில், தி.மு.க., அங்கம் வகித்தது. ஆனால், ராஜராஜன் இன்னும் முச்சந்தியில் தானே நிற்கிறான்... ஏன் சார்...' என, அப்பாவியாகக் கேட்டேன்.'போய் கேட்க வேண்டிய இடத்தில் கேளு... என்னை வம்பில் மாட்டி விடாதே!' என்றபடியே நான் கொடுத்த டீயை குடித்துவிட்டு, நடையைக் கட்டினார்.