உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பட்ட மேற்படிப்பு படிக்கும் காலத்தில் இருந்தே, அந்துமணி வாசகி அவர்; 15 நாட்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார். கடிதத்தில், நூறு வரி இருந்தது என்றால், அதில், 90 வரி, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி இருக்கும்! பட்ட மேற்படிப்பை முடித்த பின், ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தார். பின், மத்திய அரசின், 'சமூக நல வாரியத்தில்' வேலை கிடைத்து, போலீஸ் துறையின் உதவியுடன் நடக்கும், குடும்ப ஆலோசனை மையத்தில் ஆலோசகராக பணியாற்றுகிறார்.* கணவரால் கைவிடப்பட்ட, விவாகரத்தான பெண்கள்.* கணவரை இழந்த, நிராதரவான பெண்கள். * வீட்டில், கணவன், மாமியார் மற்றும் கணவனின் குடும்பத்தாரால், கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள்.* கற்பழிப்பு மற்றும் கட்டாயத்தினால் விபசாரத்திற்கு உள்ளானவர்கள்.* தனிமையை விரும்பும் பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு பெற ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான், இந்த குடும்ப ஆலோசனை மையங்கள்!இன்னும் பல சேவைகளை, இது போன்ற சங்கங்கள் செய்து வருகின்றன.இம்மையங்களில் பணியாற்றும் ஆலோசகர் களுக்கு, பயிற்சி முகாம் ஒன்று, சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த வாசகியை சந்தித்து பேசும், சந்தர்ப்பம் அமைந்தது.சிறிய உருவம்; தலை நிறைய மூளை... மையத்திற்கு வரும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். பிரச்னைகள் சிலவற்றுக்கு தான் வழங்கிய ஆலோசனைகள் சரியானது தானா என, என்னிடம் கேட்டு தெளிவு பெற்றார்.அவர் கூறிய பிரச்னைகளில் ஒன்று... 30 வயதாகியும் திருமணமாகாத பெண் ஒருவர்; திருமணமாகவில்லையே தவிர, அங்கே, இங்கே, 'தொடர்பு'கள் உண்டு. இப்படியான, 'தொடர்பு'கள் இருப்பது தெரிந்தும், அப்பெண்ணை மணம் செய்து கொள்ள முன் வந்தார், ஒரு ஆட்டோ ஓட்டுனர்.திருமணமும் நடந்தது. இரண்டு, மூன்று மாத மண வாழ்விற்குப் பின், கணவனின் மனம் மாற, குணம் தெரியத் துவங்கியது.குடித்து விட்டு வந்து, சிகரெட்டால் மனைவியை சுட ஆரம்பித்தான். பொறுத்துப் பார்த்தாள், கெஞ்சிப் பார்த்தாள்; பின்னர் பொங்கி எழுந்தாள்... 'ஐயா, இனி உன்னுடன் வாழ முடியாது...' எனக் கூறி, தாய் வீடு சென்றாள். விவாகரத்து பெற்றுத் தர குடும்ப ஆலோசனை மையத்தை அணுகினாள்.குடும்பங்களின் சண்டை - சச்சரவுகளை தீர்த்து, இணைத்து வைப்பது தானே குடும்ப நல மையங்களின் முக்கிய கடமை! அப்பெண்ணை பொறுமை காக்கச் செய்துள்ளார் வாசகி. அவளின் கணவனை மையத்திற்கு அழைத்துப் பேசி, இனி, இதுபோல் நடவாது என்பதற்கு கணவனிடமிருந்து உறுதி வாங்கி, சேர்ந்து வாழ இருவருக்கும் ஆலோசனை வழங்கி உள்ளார். அடுத்த வாரத்திலேயே மீண்டும் பிரச்னை... 'இவனுடன் வாழவே மாட்டேன்; விவாகரத்து வாங்கிக் கொடுங்கள்...' என, அப்பெண் வந்து கதற, கணவன் தலைமறைவானான்.உயர் போலீஸ் அதிகாரிகளின் உதவி மற்றும் ஆலோசனையுடன் விவாகரத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து, இரண்டு மாதங்களுக்குப் பின், அப்பெண்ணைத் தேடி, ஆள் அனுப்பி உள்ளனர். அப்பெண்ணின் தாயார், 'அவ புருஷன் ஓடிப் போனதுல இருந்து, பைத்தியம் பிடிச்சது போல ஆயிட்டா... 'என் ராஜா எங்கே போயிட்டே'ன்னு புலம்பி, தினமும் அவங்க குடும்பம் நடத்திய குடிசைக்கு சென்று, மார்பில் அடித்து அழுவா. அவளுக்கு பைத்தியம் பிடிச்சுருச்சுன்னு மந்திரிக்க நாகூர் கூட்டிப் போனோம்... இந்தத் தகவலை அறிந்த அவள் புருஷனும் நாகூர் வந்துட்டான். அவங்க ரெண்டு பேரும் எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு எங்கோ போய்ட்டாங்க. எம்பொண்ணை கண்டுபிடிச்சுக் குடுங்க...' எனக் கூறி இருக்கிறார்.இந்த வழக்கை கூறிய வாசகி, 'எங்க மையத்தோட நோக்கம், குடும்பச் சிக்கல்களை தீர்த்து வைப்பது தான். அதன்படி பார்க்கும்போது, இந்த வழக்கு சுமூகமாக முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும், அக்கணவனின் கொடுமைகள் தொடரத் தான் போகின்றன; இப்பெண்ணும் அவஸ்தை படத்தான் போகிறாள். இருந்தாலும், இப்பெண்கள், கொடுமைகளைத் தாங்கி, மீண்டும் மீண்டும், கணவனை தேடிப் போகக் காரணம் உண்டு...அது, ஊர் வாய்!'நாளை, ஊரார் இவர்களை, 'வாழா வெட்டி' என்று சொல்வராம்... ஊர் ஏதும் பேசவில்லை எனில், இவர்கள் விவாகரத்திற்கும், மறுமணத்திற்கும் ரெடி!'உன் சமாசாரங்கள் உன்னுடையவை; ஊரைப் பற்றி கவலைப்படாதே. நாக்கைப் புரட்டி புரட்டிப் பேசும் ஊர், உன் சுக, துக்கங்களில் பங்கெடுக்க உடன் வராது என்பதை, இவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளேன்...' என்றவர், 'என்ன... ரொம்ப பிளேடு போட்டுட்டேனோ...' என்றார்.இந்தச் சின்ன உருவத்தின் மூளை இவ்வளவு தெளிவு பெற்றதா... இவ்வளவு சிந்திக்கத் தெரிந்ததா என்ற மலைப்பில் இருந்து விடுபட்டு, லேசாகச் சிரித்து, 'இல்லை... இல்லை...' என்றேன்.'கடைசியாக இன்னும் ஒரு விஷயம்...' என்றவர் தொடர்ந்தார்...'திருமணமான ஆண்களில் பலருக்கு, தம் மனைவியை விட, நண்பர்கள் இன்னும் நெருக்கமாக, உயர்வாகத் தெரிகின்றனர். 'என் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன்...' என, மார் தட்டுகின்றனர்; அவ்வாறே நடக்கவும் செய்கின்றனர். அதே போல, தம் உடன் பிறந்தோரிடம், பாசமும் - நேசமும் கொள்கின்றனர். ஆனால், மனைவி என்று வரும்போது, அவளுக்காக, உயிரைக் கொடுப்பேன் என்றோ, எவரெஸ்டில் ஏறுவேன் என்றோ, தீ மிதிப்பேன் என்றோ சொல்ல வேண்டாம்... அவளை ஒரு மனுஷியாகக் கூட மதிக்கத் தெரியாமல், இந்த ஆண்கள் நடந்து கொள்வது ஏன்...' எனக் கேட்டார்.'அவகாசம் கொடுங்க; ஆராயக் காலம் தேவை. அப்புறம் பதில் சொல்கிறேன்...' எனக் கூறி, இப்போது ஆராய்ச்சியில் இறங்கி உள்ளேன்.வாசகி கூறுவது போல நடந்து கொள்ளும் திருமணமான வாசகர்கள், என் ஆராய்ச்சிக்கு உதவலாம்!'பச்சினி, ஆரத்தி, கன்னல், செந்தனுபி, முகட்டு விசிறி, விலையேற்றஞ்சல், குதியுந்து, நன்னர் தொகை...' - இவை எல்லாம் என்ன என்று முழிக்கிறீர்களா... சட்டினி, ஆப்பிள், பாயசம், ஏர் கண்டிஷன், சீலிங்பேன், வி.பி.பி., ஸ்கூட்டர், போனஸ் இவற்றின் தமிழாக்கமாம்...ஓட்டலுக்குப் போய், 'பச்சினி வையுங்க...' என்றும், பழக்கடையில், 'ஆரத்தி ஒரு டஜன் கொடுங்க...' என்றும் கேட்டுப் பாருங்கள்... 'எங்கிருந்து வந்த லூசுடா...' என்பது போல, பார்ப்பர்.சென்னையில் உள்ள அறக்கட்டளை ஒன்று, வடமொழி, ஆங்கிலம் கலந்த சொற்களுக்கு, தமிழ் சொல் கண்டுபிடிக்கும் போட்டி ஒன்றை, நடத்தி உள்ளது. அதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் கண்டுபிடித்த தமிழ் சொற்களாம் இவை!* காபி என்பதை,'குழம்பி' என்று சொன்னால், குழப்பம் தான் மிஞ்சும்!*'மாலிக்கியூல்' என்பதை, 'மூலக்கூறு' என்று, மொழி மாற்றம் செய்யும் போது, பொருள் புரியாது.* 'வைஸ்சான்சலர்' என்பது, துணைவேந்தர் ஆகாது; 'பட்ஜெட்' என்பது, நிதிநிலை அறிக்கையும் ஆகாது.'மொழியாக்கத்தை, நூறு ஆண்டுகளுக்கு முன்னே துவங்கி இருக்க வேண்டும்...' என்றெல்லாம் சொல்லி இருக்கின்றனர். ஆனாலும், 'ஜீப்' என்பதை, 'ஈப்பு' என்று சொல்ல முயல்வதும், 'பிரா'வை, 'வட்டுடை' என்று எழுதுவதும், நிற்கவா போகிறது!வழக்கில் இருக்கும் பிற மொழிச் சொற்களை தமிழ்ப்படுத்து கிறோம் என்று, சிலர் புறப்பட்டு உள்ளனர். இவர்கள் நம்மை பைத்தியமாக்காமல் விட மாட்டார்கள் போலுள்ளது.இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான காலஞ் சென்ற வா.செ.குழந்தைசாமி என்ன சொல்கிறார் தெரியுமா...* எந்த மொழியானாலும், 20ம் நூற்றாண்டில் பயன்படும் வகையில், பிறமொழி சொற்களை ஏற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும்.* பிறமொழி சொற்களை கடன் வாங்காத மொழியே இல்லை.* இயன்றவரை தமிழாக்கம் செய்யலாம். அதற்காக, 'சோடியம்' என்பதை மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என, புறப்படக் கூடாது, என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !