அந்துமணி பா.கே.ப.,
அன்று கடற்கரையில் கூடியது, நம்ம கூட்டம்...மசாலா பொரியை சுவாரஸ்யமாக அரைத்துக் கொண்டிருந்த பெரியசாமி அண்ணாச்சி, 'பூனைக்கி எத்தனை கால்...' என, திடீரென, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கேட்டார்.'நாலு கால்...' என்றார், அன்வர் பாய்.'நோ நோ... எட்டு கால்...' என்றார்.'என்னடா இது... லென்ஸ் மாமா பக்கத்தில நிற்கிறதாலேயே, அண்ணாச்சி, 'மப்பாகி'ட்டாரா...' என நினைத்து, அவரையே பார்த்தேன்.'புரியலே... பூவில் இருக்கும் தேனை நக்கி குடிக்கிற, 'பூ நக்கி'யாகிய வண்டுக்கு எட்டு கால்... எம் பேரன் சொன்னாமுல்லா இத...' என விளக்கம் சொல்லி, அவரே சிரித்துக் கொண்டார்.கடுப்பாகிப் போன அன்வர் பாய், 'பொறாவுக்கு எத்தினி கால்?' என, திருப்பி அண்ணாச்சியிடம் கேட்டார்.'வே... பாயி... எங்கிட்டயா புதிரு போடுதீரு புதிரு... புறாவுக்கு ரெண்டு காலு வே... ரெண்டு காலு...' எனக் கூறி, சரியான விடையைச் சொல்லி விட்ட நினைப்பில், தொப்பையைத் தள்ளி, நெஞ்சை நிமிர்த்தி, கம்பீரமாக நின்றார்.'மாட்டுனீங்க அண்ணாச்சி... பொறாவுக்கு ஒன்பது கால்... எப்படி தெரியுமா... ஒன்பது கால் (1/4) இரண்டே கால் (2 1/4)...' என, தன் பங்குக்கு, 'கடி'த்தார், அன்வர் பாய்.'ரெண்டு பெரிசுகளும் மாத்தி மாத்தி ரம்பமா போடுறீங்க... அப்பாலே, நா இங்கே வரமாட்டேன்; எடத்த மாத்திப் புடுவேன்...' என்றேன்.'கோவப்படாதேப்பா... நாங்க ரம்பம் போடல... பிளேடு தான போடுதோம்...' என்ற அண்ணாச்சி, 'வாலிபப் பசங்க அறுத்தா, அது ரம்பம்; வயசானவன் அறுத்தா, அது பிளேடு... காரணம், ரம்பத்துக்கு பல் இருக்கு; பிளேடுக்கு கெடயாதுல்லா...' என்று, வியாக்கியானம் வேறு அளித்தார்.தலையைப் பிடித்து, குந்த வைத்து சாலையில் உட்கார்ந்துக் கொண்டேன்.'அண்ணாச்சி...' என்று சலித்துக் கொண்ட லென்ஸ் மாமா, பின் ஏதோ நினைத்துக் கொண்டவராக, 'அது சரி... திரும்பவும் பூன கதைக்கே வர்றேன்... பூனைக்கு, 'நைட்'ல கூட சரியா கண் தெரியுதே... ஓசைப்படுத்தாம, வீட்டுக்குள்ளே புகுந்து, உருட்டல், பிரட்டல் பண்ணிட்டு போயிடறது... தினமும் ராத்திரி ரெண்டு மணிக்கி, எங்கிருந்தோ ஒரு பூனை எங்காத்துக்குள்ளே புகுந்து, ரகள பண்ணிட்டுப் போயிடறது... இது எப்பிடின்னு தெரியல...' என்று முடித்தார்.அடுத்த நாள், ஆபீசில், பூனைகளைப் பற்றிய புத்தகத்தை எடுத்துப் படித்தேன். அதில்:இருட்டில் பூனைக்கு கண் தெரிவதன் காரணம், அதன் கண்ணின் அமைப்பு. அதிக வெளிச்சத்தில் குறுக்கிக் கொள்ளவும், குறைந்த வெளிச்சத்தில் விரிவுப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதன் விழி லென்ஸ் அமைந்திருக்கிறது. பாதம், 'மெத்' என்று இருப்பதால், சத்தமில்லாமல் நடக்கிறது. தேவைப்படும் போது நீட்டவும், மற்ற நேரங்களில் உள் இழுத்துக் கொள்ளவும் கூடிய, 18 கூரிய நகங்களும் இருக்கின்றன...— இப்படிக் கூறப்பட்டு இருந்தது.மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி, ஜன்னல் கதவுகளை மூடி வைக்கச் சொன்னேன்!அமெரிக்காவில் இருந்து அந்துமணியின் வாசகி ஒருவர், கடிதம் எழுதி இருந்தார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர். எம்.சி.ஏ., என்னும் கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பை முடித்தவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துச் சென்று விட்டார்.கடிதத்தில் நல விசாரிப்புக்கு பின், அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் நம்மூர் இளைஞர்களைப் பற்றி எழுதியுள்ளதை படியுங்கள்:முன் போல், அமெரிக்கா சென்று வேலை பார்ப்பது கஷ்டமான விஷயம் இல்லை. கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பு படித்த குப்பன், சுப்பன் கூட இப்போது சுலபமாக அமெரிக்கா செல்ல முடியும். இங்கு எங்கே பார்த்தாலும், இந்திய முகங்கள் தான். அவர்களில், 95 சதவீதம் பேர், 25 முதல், 35 வயது உடையவர்கள். பலர் மணமானவர்கள்; மற்றவர்கள் திருமணத்திற்கு காத்திருப்போர்!இங்குள்ள நம்மூர் இளைஞர்கள், 99 சதவீதத்தினருக்கு பொது அறிவு, டேபிள் மேனர்ஸ், ரோடு சென்ஸ் இல்லை; காமன் சென்ஸ், மானரிசம் மற்றும் டிசிப்பிளின் இல்லை... ஆனா, வெட்டி பந்தா மட்டும் எக்கச்சக்கமா இருக்கு. இதில், மிகுந்த மனவேதனை அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா?நம்ம நாட்டைப் பற்றி, நம் இளைஞர்கள், அமெரிக்கர்களிடம் இழிவாகப் பேசுவது தான்...அந்த நேரங்களில் செருப்பாலேயே அவர்களை நாலு சாத்து சாத்த வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது... தேசப்பற்று என்பது இவர்களிடம் துளி கூட இல்லை. அண்ணா... இதுபற்றி கண்டிப்பாக நீங்கள், பா.கே.ப.,வில் எழுத வேண்டும்!- என்று எழுதி, மேலும் தொடர்கிறார்...'அப்பா மெயில் அனுப்பியிருந்தார்... 'நியூயார்க்கில், நம்ம ஊர் பையன் ஒருவன் இருக்கிறான்; அவனின் பெற்றோர், உன்னை பெண் கேட்டு வந்தனர்... அவனது முகவரியும், மொபைல் எண்ணும் எழுதி உள்ளேன். உனக்கு பிடிக்கிறதா பார்...' என, எழுதி இருந்தார்.'அவனுடன் பேசினேன்... பேச்சைப் பார்த்தால், சாதுவாகத் தெரிகிறான். இப்போதெல்லாம் தினமும் போன் பேசுகிறான்... அடுத்து வரும் நாட்களில், நியூயார்க் சென்று, 'பையன்' பார்க்கச் செல்கிறேன்...'— என்று எழுதி இருந்தார்!'பாருய்யா அதிசயத்த... பெண் பார்க்கும் படலம் விலகி, 'பையன்' பார்க்கும் சம்பிரதாயம் தொடங்கி விட்டதே...' என நினைத்துக் கொண்டேன்!கடிதம் வந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பின், அதே வாசகி அமெரிக்காவில் இருந்து போன் செய்தார்...'அண்ணா... எனக்கு அமெரிக்காவே பிடிக்கலை; பணம் சம்பாதிக்க மட்டும் தான் இந்த நாடு லாயக்கு... வேறு ஒரு புண்ணாக்கும் இல்ல. இரண்டு, மூன்று ஆண்டுகள் சம்பாதித்து விட்டு இந்தியா திரும்பி விடலாமென்று இருக்கிறேன்...' என்று புலம்பிக் கொண்டிருந்தவரிடம்...'நியூயார்க் போய், 'பையன்' பார்த்து வந்தீர்களா?' எனக் கேட்டேன்.'அதையேன் கேட்கறீங்க... பையன் சூப்பரா, 'கடலை' போட்டான்... தினமும், மூணு வாட்டி போன் போட்டுப் பேசினான். சரின்னு நானும், சில நண்பர்களும், 'சர்ப்ரைசா' நியூயார்க்கில் உள்ள அவனுடைய வீட்டுக்கு போனோம்... அங்கே, அமெரிக்கப் பெண்ணை கல்யாணம் பண்ணி, குடியும், குடித்தனமாக வாழ்றான்... 'இப்போதெல்லாம், அப்பா போன்ல, அமெரிக்கா பையன் என்று சொன்னாலே, கல்யாணமானவனா, ஆகாதவனான்னு முதல்ல விசாரிங்கப்பான்னு சொல்லிடறேன்...' என்று கூறினாரே பார்க்கணும்...— அமெரிக்காவில் பையன் தேடும் பெற்றோரே...உஷார்!