உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

நண்பர் ஒருவரின் படு அட்டகாசமான அலுவலகம் அது! நேர்த்தியாக உடை அணிந்து, சீராக கத்தரிக்கப்பட்ட குட்டை சிகையுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளப் பெண்ணிடம் விவரம் கூறிய இரண்டாவது நிமிடம், தம் கேபினிலிருந்து வெளியே வந்து வரவேற்றார், நண்பர்.அவரது அறைக்குச் சென்ற உடனேயே நான் வந்த வேலை குறித்து சொன்னேன்; உடனே முடித்துக் கொடுத்தார். நண்பரின் நேரத்தை வீணாக்க விரும்பாமல் கிளம்ப எத்தனித்த போது, 'இருங்க தோழா... காபி சாப்பிட்டு, கொஞ்ச நேரம் பேசிட்டுச் செல்லலாம்...' என, தடுத்து நிறுத்தினார்.நண்பர் ஒரு பேச்சிமுத்து... பேச ஆரம்பித்தால், நிறுத்தவே தெரியாது. ஆனால், உருப்படி இல்லாத விஷயங்கள் எதையும் பேச மாட்டார். உலக நடப்பு, பொதுவான விஷயங்கள், தத்துவம் என பேச அவரிடம் ஏராளமான விஷயங்கள் உண்டு.'நம்ம ஜனங்களுக்கு இடம், பொருள், ஏவல் என்ற இங்கிதம் கொஞ்சம் கூட கிடையாது...' என்று அவர் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது, அவரது மொபைல்போன் சோக கீதம் ஒன்றை இசைத்தது. போனை எடுத்து, கூப்பிடுவது யார் என்று பார்த்தவர், உடனே, 'சைலன்ட் மோடில்' போட்டு மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்...'சோகத்தில், வருத்தத்தில், ஏமாற்றத்தில் இருக்கும் ஒருவருக்கு, மேலும் அவரது துக்கத்தை அதிகரிக்க செய்வதில் சமர்த்தர்கள் நம்மவர்கள்... உதாரணத்திற்கு, ஒரு இளம் பெண்ணிற்கு கர்ப்பப் பை பிரச்னையோ, கேன்சரோ அல்லது வேறு ஏதாவது ஒரு கட்டியோ ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம்... அவர்களை பாக்கும் போது, 'பாவம்... இந்த சின்ன வயசுலேயே உனக்கு இப்படி வரணுமா... உனக்கு தான் எவ்வளவு தெய்வ பக்தி... உதவின்னு கேட்டு வருபவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வாயே... உன் அஞ்சு வயசுக் குழந்தை என்ன பாவம் செஞ்சது... ஆனா, அது கெட்டிக்கார குழந்தை... எங்கனாச்சும் போயி பிழைச்சுக்கும்...' என்றெல்லாம் பேசி, மனதை தளர செய்து விடுவர்...' என்ற போது, மீண்டும் அவரது மொபைல்போன், சோக கீதம் பாடியது; முதலில் செய்தது போலவே இப்போதும் செய்து, போனை ஓரமாக வைத்தவர், 'இளைஞன் ஒருவனுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை விழ ஆரம்பிக்கிறதுன்னு வைத்துக் கொள்வோம். அவனே நொந்து, வெந்துப் போய், பெண்கள் தன்னை கேலி, கிண்டல் செய்வார்களே என மனம் புழுங்கியிருக்கும் வேளையில், 'அடடே... இந்த சின்ன வயசுலேயே வழுக்கை விழ ஆரம்பிச்சுடுச்சே... உன்னைப் பாத்தா, 25 வயசு மாதிரியா தெரியுது... 40 வயசுக்காரன் மாதிரியில்ல ஆயிட்ட...' எனக் கூறி, வழுக்கை மறைய, தமக்குத் தெரிந்த சிகிச்சை முறைகளையெல்லாம் இலவசமாக எடுத்து விடுவர்...'மீண்டும் அவரது மொபைல்போன் ஒலித்தது; ஆனால், இப்போது காதல் கீதம் பாடியது. உடனே போனை எடுத்து சந்தோஷமாக பேசி முடித்தவர், மீண்டும் பேச்சை தொடர்ந்தார்...'திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகியிருக்கும்; ஏழாவது மாதமே, 'என்ன... ஏதும் விசேஷம் உண்டா...' என ஆரம்பிப்பவர், ஒரு ஆண்டு கடந்து விட்டால் போதும்... 'உன் வயசுப் பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி மூணே மாசத்துல வயித்த தள்ளிடறாங்க... உனக்கு ஏண்டியம்மா வயித்துல இன்னும் ஒரு புழு, பூச்சி வைக்கல...' எனக் கூறி, ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் அவ்விளம் பெண்ணின் சோகத்துக்கு இன்னும் துாபம் போடுவர்...' என்றார். அப்போது, திரும்பவும் மொபைல்போன் சோகப் பாடலை ஒலித்தது; போனை எடுக்கவில்லை, நண்பர். இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாவிடில் தலை வெடித்து விடும் போல் இருந்தது. அவரிடம் கேட்டே விட்டேன்...'தோழா... என்ன இது... சோக கீதம் ஒலித்தால், போனை எடுக்க மாட்டேங்கிற... காதல் கீதம் இசைத்தால் மட்டும் உடனே தாவி எடுத்து பேசுறயே... இதன் உள்ளர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...' என்றேன். 'வெரி சிம்பிள்... சோக கீதம் இசைத்தால், போன் மூலம் நம்மை சோகம் தாக்கப் போகுதுன்னு அர்த்தம். அதாவது, 'பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று தொல்லைபடுத்தும் எப்போதோ அறிமுகமான இன்சூரன்ஸ் ஏஜென்டுகள்; தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும், அறுவை நண்பர்கள்; தவிர்க்கவும், தவிர்க்க வேண்டாம் என்ற இரண்டாங்கெட்ட நிலையில் இருக்கும் தோழியர் போன்றவர்களின் தொலைபேசி எண்களை எல்லாம் சோக கீதம் இசைப்பது போன்ற செட்டப்பில் போனை வைத்திருக்கிறேன்...'அதேநேரம், நமக்கு வேண்டியவர்கள், தற்போது மிகவும் தோழமையுடன் இருக்கும் பெண் தோழியர், பணம் தருபவர்கள் போன்றோர் கூப்பிட்டால், காதல் கீதம் இசைக்கும்படி போனை, 'செட்' செய்து வைத்துள்ளேன். இதனால், தேவையில்லாத அறுவை பார்ட்டிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முடிகிறது...' எனக் கூறி, 'கடகட'வென சிரித்தார். உத்தரவு வாங்கி வெளியே வரும்போது, இந்த தொல்லையே வேண்டாம் என்று மொபைல்போனை எப்போதோ கடாசி விட்ட என்னை நானே பாராட்டிக் கொண்டேன்!தரமான இலக்கியப் படைப்புகளைத் தருவதில் வல்லவர் எழுத்தாளர், திருப்பூர் கிருஷ்ணன். பிரபல எழுத்தாளரான அவரை எனக்குத் தெரியும்... ஆபீஸ் பாய் அந்துமணியை அவருக்குத் தெரியாது. என்னை நானே அறிமுகம் செய்து கொள்வதிலும் ஒரு தயக்கம்... அதனால், இதுவரை அறிமுகம் இல்லை.அவர் எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன்; இதோ அது:மாத நாவல் ஒன்றின் வெளியீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது... மர்ம கதாசிரியர் ஒருவரின் நாவல், அச்சில், 96 பக்கம் வர வேண்டும். ஆனால், 86 பக்கத்திலேயே நாவல் முடிந்து விட்டது.நீளம் அதிகமாக இருந்தால், 'எடிட்' செய்யலாம்; குறைவாக இருக்கும்போது என்ன செய்வது... 'ஒரு பத்துப் பக்கம் வேண்டுமே...' என்று போன் செய்து கதாசிரியருக்கு சொன்னார்கள். ஆனால், அவருக்கோ, அன்றிரவே, வெளிநாடு போக வேண்டி இருந்தது. அதனால், கதையை இடையே கொஞ்சம் வளர்த்தி எழுதிக் கொடுக்க அவருக்கு நேரமில்லை. ஓரிரு நாள் காத்திருக்க பத்திரிகைக்கு அவகாசமில்லை.உடனே, அவர் ஒரு யுக்தி செய்தார்... ஏற்கனவே, வெளியான பத்து பக்க சிறுகதை ஒன்றை அனுப்பினார். நாவலின் கதாநாயகி, ஒரு வார இதழை வாங்கி, அதில் வெளியான கதையை வாசிப்பதாக சில வரிகளைச் சேர்க்கச் சொன்னார். சிறுகதையை அப்படியே அந்த இடத்தில் முழுமையாகப் வெளியிட்டு, பின், நாவலின் இறுதிப் பகுதியை வெளியிட்டு நாவலை முடிக்கச் சொன்னார்.அவ்விதமே செய்யப்பட்டது; அந்த மர்ம நாவலில் எல்லா மர்மங்களும் துப்புத் துலக்கப்பட்டிருந்தன. ஆனால், தொடர்பில்லாமல் ஒரு சிறுகதை ஏன் இடையே திடீரென இடம் பெற்றது என்ற மர்மம் மட்டும் வாசகர்களுக்கு இறுதி வரை விளங்கவே இல்லை. - இதே போல், நாவல் ஏதேனும் நீங்கள் படிக்க நேர்ந்து, சம்பந்தமில்லாத இடைச் செருகல் இருந்தால், அதன் மர்மத்தை, இனி கண்டுபிடித்து விடுவீர்கள் தானே!அந்த நண்பர் டில்லியிலேயே பிறந்து, வளர்ந்த தமிழர்; கும்பகோணத்தை சேர்ந்தவர். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் டில்லி அலுவலகத்தில் பணியாற்றுபவர்.கடந்த வாரம் சென்னை வந்தவர், 'தமிழ், செம்மொழி ஆகிட்டதுன்னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன? இதனால், தமிழருக்கும், தமிழகத்துக்கும் என்ன பயன் ஏற்படும்?' எனக் கேட்டார்.நான் கொஞ்ச நேரம், 'திரு திரு'வென விழித்து, கருணாநிதியின் பேட்டியில் இதற்கு விளக்கமிருக்கும் என எண்ணி, பழைய பத்திரிகைகளைப் புரட்டினேன். விளக்கம் இருந்தது; அதைப் படித்துக் காட்டினேன். அதன் சுருக்கம் இது தான்:* இந்தியாவின் எல்லா பல்கலைக் கழகங்களிலும், தமிழுக்கென தனி துறைகள் துவங்கப்படும்* உலகப் பல்கலைக் கழகங்களிலெல்லாம் தமிழுக்கென ஒரு இருக்கை ஏற்படுத்த படும்* தமிழ் வளர்ச்சிக்கு, மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்* தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளுக்கு மாற்றப்பட்டு, உலகமெங்கும் படிக்கப்படும்இதைக் கேட்ட நண்பர், 'அதெல்லாம் சரி... ஒருவேளை கஞ்சிக்கு அல்லாடும் கைத்தறி நெசவாள தமிழர்களுக்கும், மூன்று போகம் விளைந்து, இன்று தார் பாலைவனமாய் காட்சியளிக்கும் தஞ்சை தமிழ் விவசாயிகளுக்கும் என்ன பலன்?' எனக் கேட்டார்.பதில் சொல்லாமல், மையமாக சிரித்து வைத்தேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !