உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும், 'ஸ்டிரீட்-கிட்ஸ்' — தெருவில் அலையும் அனாதை பிச்சைக்காரக் குழந்தைகளின் தொல்லை இருந்து தான் வருகிறது. நம்ம ஊரைப் பொறுத்தவரை இவ்வகை குழந்தைகள், கையில் உண்டியல் ஏந்தி, காவி உடை அணிந்து, 'நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி, 'மாரியம்மன் கோவிலுக்கு காணிக்கை போடுங்கள்...' என்றோ, 'சபரிமலை போகிறேன்; காசு கொடுங்கள்...' என்றோ பிச்சை எடுக்கின்றனர்.சில குழந்தைகள், வெளியூர் பஸ் நிலையங்களில், புறப்படக் காத்திருக்கும் பஸ்களில் அமர்ந்திருக்கும் பயணிகளின் மடியில் அச்சிடப்பட்ட சீட்டு ஒன்றை வைத்துக் கொண்டே சென்று, பின்திரும்பி வந்து, வாயைத் திறந்து உள்நாக்கைக் காட்டி, தமக்கு அது இல்லை என்றும், தாங்கள் அனாதை என்றும் கூறி பிச்சை கேட்பர்.இது போன்று பிச்சை கேட்டு வரும் சிறுவர்களில், 90 சதவீதம் பேர், பிற்காலத்தில் ஏதோ ஒரு நியாயமான வேலையைத் தேடி, வாழ்க்கையைத் தொடர்கின்றனர். மீதமுள்ள, 10 சதவீதத்தினர், 'கிரிமினல்'களாக, அடியாட்களாக, திருடர்களாக, கொள்ளைக்காரர்களாக, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களாக, கஞ்சா விற்பவர்களாக, சந்தனக்கட்டை கடத்துபவர்களாக மாறி விடுகின்றனர்.வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே இந்தப் பிரச்னை இருப்பதாக எண்ண வேண்டாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில் கூட இப்பிரச்னை உள்ளது. குறிப்பாக, நியூயார்க் மாநிலம், 'குயின்ஸ்' மாவட்டத்தில், சிக்னலுக்காக காரில் நிற்கிறீர்கள். சில சிறுவர்கள் கையில் துணியுடன் ஓடிவந்து, உங்கள் கார் கண்ணாடிகளை வேக, வேகமாகத் துடைப்பர். பச்சை வண்ணம் சிக்னலில் விழுந்து, நீங்கள் வண்டியைக் கிளப்பும் முன், அவர்களுக்கு காசு கொடுத்தாக வேண்டும்; இல்லையேல், கூர்மையான ஆணியைக் கையில் வைத்திருப்பர். அதை கொண்டு, 'சர்' என காரில் கோடு கிழித்து விடுவர்.ஒரு டாலருக்கு கஞ்சப்பட்டு, 100 டாலர் செலவு செய்ய வேண்டியதாகி விடும். இது போன்ற பிரச்னை, குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றாத ஏழைப் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஏற்படுகிறது. 'மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போவான்?' என, ஏதோ தத்துவத்தைப் பேசி, குழந்தைகளைப் பெற்று, அவர்களைக் காப்பாற்ற இயலாமல், தெருவில் விட்டு விடுகின்றனர். இவர்கள் பின்னாளில், 'கிரிமினல்'களாகி விடுகின்றனர்.இந்தப் பிரச்னை, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தலை விரித்து ஆடுகிறது. அங்கு, சிறுவர்கள், கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு அலைகின்றனர்; இன்னும் சில சிறுவர்கள், துப்பாக்கி கூட வைத்திருக்கின்றனர்.இவர்கள் சகல விதமான வழிப்பறிகளிலும் ஈடுபடுகின்றனர். வழிப்பறியின் போது, எதிர்ப்பவர்களை கத்தியால் கிழித்து காயப்படுத்தவோ, துப்பாக்கியால் சுட்டோ கொன்று விடுகின்றனர்.பிரேசில் நாட்டு அரசாலும், அந்நாட்டுப் போலீசாராலும் இந்த அராஜகத்தை ஒடுக்க முடியவில்லை. நிலமை இப்படியே போனால் பின்னாளில் தமக்கும், தம் தொழிலுக்கும், நாட்டுக்குமே ஆபத்தாகி விடும் என எண்ணிய பல தொழிலதிபர்கள், கொடூரமான புது முயற்சியில் இறங்கி உள்ளனர்.அது — 'ஸ்டிரீட்-கிட்'சை, 'ஒழித்து'க் கட்டுவது! குண்டர் படையை இரவு நேரத்தில் வேனில் அனுப்பி, தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், பாதை ஓரம் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை, 'கபால்' எனப் பிடித்து வேனில் ஏற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வேனை ஓட்டிச் சென்று, சிறுவனைக் கீழே இறக்கி, நான்கு பேர் சிறுவனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். குண்டர்களில் ஒருவன், 'இதுவரை, 185 சிறுவர்களை நானே கொன்றுள்ளேன். இவர்கள் எம் நாட்டின் சுமைகள், எதிர்கால ரவுடிகள். இதற்கு முன், போலீஸ் வேலையில் தான் நான் இருந்தேன். என் தாய் நாடு உருப்படாமல் போவதை போலீஸ் துறையில் இருந்து கொண்டு தடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போதைய என் முதலாளியின் எண்ண ஓட்டம் எனக்கும் பிடித்திருக்கிறது. அவரது ஆலோசனைப்படி, சிறுவர்களைச் சுட்டுக் கொல்கிறேன். ஒரு சிறுவனைத் தீர்த்துக் கட்டினால், எங்களுக்கு, 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பணமும் கொடுக்கின்றனர்...' என,பேட்டியும் கொடுத்துள்ளான்.***கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:என் உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள் குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.பெரிய பதவியில் இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும் கண்டிப்புடன், 'உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில் விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று கூறி விட்டார்.மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில் விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம் அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, 'குழந்தை வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.என்ன தான் ஆணாதிக்கம் இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள் குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும், குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை இல்லாமல் உள்ளாள்.படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில் முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...— என எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்... எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !