உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேவெளியே லேசாக மழை துாறிக் கொண்டிருந்தது. மதிய வேளை தான் என்றாலும், மழை வந்ததால், குயில்களுக்குக் கொண்டாட்டமாய் ஆகி விட்டது.'கூ... கூ...' என கூவிக் கொண்டிருந்தன. மண் வாசனையும், குயில் கூவும் சத்தமும் மனதை இதமாய் வருடின. கேள்வி - பதில் எழுதும் பணி, வேகமாய் நடந்து கொண்டிருந்தது.அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து நண்பர் ஒருவர் போன் செய்தார். சென்னை, ஐ.ஐ.டி.,யில் விரிவுரையாளராக உள்ளார். மகள், அவ்வூரில் படிக்கிறார் என்பதால், மனைவி சகிதமாய் அங்கு சென்றிருக்கிறார்.'கொரோனா'வால், சர்வதேச விமான சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி இருக்கிறார்.'என்னது... மதிய நேரத்தில் போன் செய்யறாரே... அங்கே, நடுநிசியா இருக்குமே...' என்றபடியே, போனை எடுத்தேன்.'அந்து... 'சேப்' தானே...' என, குசலம் விசாரித்தார்.'நான் நல்லா இருக்கேன்... நீங்கல்லாம் பத்திரமா இருக்கீங்களா... எப்ப சென்னை வர்றீங்க...' எனக் கேட்டது தான் தாமதம், 'படபட'வென கொட்டித் தீர்த்து விட்டார்.'நீங்கல்லாம் குடுத்து வெச்சவங்க பா... இங்கே ரொம்ப, 'டேஞ்ஜர்...' எல்லாரும் வெளியே சுத்தறாங்க... யாருக்கு, 'கொரோனா' இருக்கு, இல்லேன்னு தெரியலே...'ஏன் இப்படி சுத்தறாங்கன்னா, கையில காசு இருந்தா தான், வாயில தோசை! காசு இல்லையா... பட்டினி தான்! சேமிப்பு பழக்கமே கிடையாது... மிகப்பெரிய, ஓட்டல் ஓனர் கூட, தெருவுக்கு வந்துட்டாருன்னா பார்த்துக்குங்க...'நாங்க தங்கி இருக்கிற வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாரு... 'என்னாச்சு... 'மெடிக்கல் ஹெல்ப்' வேணுமா?'ன்னு கேட்டேன்.'இல்லே... பசிக்குது... நான் மிகப்பெரிய உணவகம் நடத்திட்டிருந்தேன். எல்லாரும் வேலைக்குப் போறாங்க. ஆனா, உணவகத்தை நம்பி இருக்கிறதில்லை. வீட்லயே சமையல் செய்து சாப்பிட்டுக்கிறாங்க. ௧௦ நாளா, உணவகம், 'வெறிச்'சுன்னு கிடக்கு. வருமானம் இல்லாம, எனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லே...' என்றார். பரிதாபமாக இருந்தது. என் கையில் இருந்த ரொட்டியையும், வெண்ணெயையும் கொடுத்து அனுப்பினேன்.'இது இப்படீன்னா, நோய்வாய்ப்பட்டா திண்டாடுறாங்க பா... சொல்லி மாளலே... 'கிளினிக்'கெல்லாம் ரொம்ப துாரமா இருக்கு... யாரையும் சேர்க்கறதில்லே... 'மெடிக்கல் ஷாப்'ல எல்லா மருந்தும், யானை விலை, குதிரை விலை...'நம்மூர்ல கிடைக்கிற மாத்திரை, அதே மூலக்கூறோட, இங்கே மூணு மடங்கு விலை கொடுத்தா தான் கிடைக்கும். 'காய்ச்சலா இருக்கு; வரலாமா'ன்னு, 'கிளினிக்'குக்கு போன் செஞ்சா, 'வரவே வராதீங்க... 'கொரோனா'வா இருக்கும்... நீங்க, வெளியவே வரக் கூடாது'ன்னு சொல்லி, அடுத்த வார்த்தை நாம பேசுறதுக்குள்ள, போனை வச்சிடறாங்க...'திடீர் திடீர்ன்னு எல்லாம் செத்துப் போறாங்க... குலை நடுங்குது... வெளியே போகவே பயமா இருக்கு... நம்மூர்ல, வீட்டுக்கு வீடு, 'டெஸ்ட்' எடுக்கிறாங்களாமே... 'கொரோனா பாசிட்டிவ்'னு, 'ரிசல்ட்' வந்தா, ஆஸ்பத்திரிலேர்ந்தே கூப்டுறாங்களாமே... ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டுப் போறாங்களாமே... இங்கே, எல்லாமே தலைகீழ் பா... நரகம்... எப்படாப்பா நம்மூருக்கு வருவோம்ன்னு இருக்கு...'- இப்படிக் கூறி முடித்தார். 'அமெரிக்கா... அமெரிக்கா'ன்னு, துாக்கி வைத்து கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு பாடம்!பஅலுவலக நுாலகத்தை ஆராய்ந்த போது, நெல்லை ஜெயந்தா என்ற ஆண் கவிஞர் ஒருவர் எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுால் கண்ணில் பட்டது. எடுத்து புரட்டினேன். அதிலிருந்து ஒரு பகுதி...சிவாஜியை வச்சுக்கிட்டு, எம்.ஜி.ஆரையோ அல்லது எம்.ஜி.ஆர்., முன்னிலையில் சிவாஜியையோ புகழ்ந்து, பாடியிருக்கீங்களா? என்னுடைய நாணயத்தை நீங்க பரிசோதிச்சு பார்க்குறீங்க. பாடினதெல்லாம் கிடையாது. ஆனா, எம்.ஜி.ஆர்., இருக்கும்போது, அவர் பக்கத்துல உட்கார்ந்து, சிவாஜியை பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கேன். ஒருமுறை, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, மிகப்பெரிய புயல் ஒன்று வந்து, நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். புயல் நிவாரண நிதிக்காக, திரைத்துறை சார்பில் ஒரு நாடகம் போட்டாங்க.நாடகத்தில், அசோகனா நடிச்சார், சிவாஜி. அந்த ஓரங்க நாடகத்தை திருநெல்வேலியில் நடத்தினாங்க. இந்த நாடகத்தை நான், எம்.ஜி.ஆரோடு உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தேன். எம்.ஜி.ஆர்., பக்கத்துல அமைச்சர் காளிமுத்து, ஜி.ஆர்.டைமண்ட் போன்ற பல அமைச்சர்கள் உட்கார்ந்து இருந்தாங்க. நாடகத்துல, சிவாஜி, பிரமாதமா நடிச்சுகிட்டு இருந்தாரு. அதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, எம்.ஜி.ஆர்கிட்ட, 'சிவாஜி மாதிரி ஒரு நடிகனே இல்லை. நீங்க என்ன சொல்றீங்க'ன்னு கேட்டுட்டேன்.இந்த கேள்வியை, அறிவுள்ள யாரும் கேட்க மாட்டாங்க; ஆனா, நான் கேட்டேன். அதற்கு, எம்.ஜி.ஆர்., 'ஆமாம்... நல்லா பண்றார். ஆனா, அவருக்கு இணையான நடிகர் இல்லாவிட்டாலும், அவருக்கு அடுத்த இடத்துல ஒரு நடிகர் இருக்கார்'ன்னு, முத்துராமன் பெயரை சொன்னார்.அதே மாதிரி, ரிக் ஷாகாரன் படத்துல நடிச்சதுக்காக, எம்.ஜி.ஆருக்கு, 'பாரத்' விருது குடுத்தாங்க. அதற்கு, நடிகர் சங்கத்துல ஒரு பாராட்டு விழா நடந்தது. அப்போது, நடிகர் சங்க தலைவரா இருந்தார், சிவாஜி. செகரெட்டரியா இருந்தார், மேஜர் சுந்தர்ராஜன். அந்த நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆரை பற்றி புகழ்ந்து, பாராட்டு உரை படிக்க, உங்ககிட்ட, சிவாஜி எழுதி வாங்கிட்டு வரச்சொன்னாருன்னு வந்தாரு, மேஜர்.இது, ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. எம்.ஜி.ஆர்., பற்றி புகழ்ந்து எழுதணும். அத, சிவாஜி முன்னாடி படிச்சு காட்டணும். இருந்தாலும், நியாயமா, எம்.ஜி.ஆர்., பற்றி நான் என்ன சொல்லணும்ன்னு நினைச்சேனோ, அதை எழுதிக் கொடுத்தேன். சிவாஜியும், அதை, பிரமாதம்ன்னு ஏத்துக்கிட்டார்.இப்படி தான், என்னையும், கண்ணதாசனையும், சுதந்திர கவிஞர்களாக தான் வெச்சிருந்தாங்க, எம்.ஜி.ஆரும், சிவாஜியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !