உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேஅலுவலகத்துக்குள், வேர்க்க விறுவிறுக்க நுழைந்த, 'திண்ணை' நாராயணன், 'மணி... பேனை வேகமாக சுழல விடுப்பா. வர வர பஸ் பயணம் நரகமாகிட்டு வருதுப்பா...' என்றார் அலுத்தபடி.'ஏன், என்னாச்சு...' என்றேன்.'அத ஏன் கேட்கற... அலுவலகம் வர பஸ் ஏறி, காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தேன். என் பக்கத்தில் இருந்தவர், ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.'இரண்டு, 'ஸ்டாப்' கடந்திருக்கும். ஒரு போதை ஆசாமி, பஸ்சில் ஏறி, நேராக நான் அமர்ந்திருக்கும், 'சீட்' அருகில் வந்து நின்றான். ஸ்டெடியாக நிற்க முடியாமல், மேலே விழுந்து விடுவது போல் தள்ளாடிக்கிட்டு இருந்தான். 'வ்வே...' என்று அவனிடமிருந்து குரல் வர, என் மீது வாந்தி எடுத்து விடப் போகிறானே என்று, சட்டென்று எழுந்து இடம் கொடுத்தேன். அவனும், ராஜா மாதிரி அங்கு அமர்ந்து கொண்டான்.'அடுத்து வந்த நிறுத்தத்தில், டிக்கெட் பரிசோதகர் இருவர் ஏறி, பயணியரிடம், டிக்கெட் கேட்க, போதை ஆசாமி, சடாரென்று எழுந்து, பஸ்சிலிருந்து இறங்க போனான். அவனை எட்டிப் பிடித்த பரிசோதகர், டிக்கெட் கேட்க, என்னை சுட்டிக்காட்டி, 'அவரிடம் இருக்கு. எனக்கு அவசரமா போகணும்...' என்று திமிறியபடி, விடுவிடுவென இறங்கி போயிட்டான்.'டிக்கெட் பரிசோதகர் என்னை பார்க்க, என் டிக்கெட்டை எடுத்துக் காட்டி, 'அவர் யாரென்று எனக்கு தெரியாது...' என்றேன். நம்பாமல், 'அவன், உங்களைத் தானே கைக் காட்டி விட்டு சென்றான். நீங்க வேற மாதிரி சொல்றீங்களே...' என்றார்.'அங்கிருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்க, எனக்கு தர்மசங்கடமா போச்சு, மணி. நல்லவேளை, ஜன்னல் ஓரம் இருந்தவர், என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றினார். அவருக்கு பெரிய நன்றி சொல்லிட்டு, தப்பிச்சு ஓடி வந்துட்டேன்...' என்றார், தழுதழுத்த குரலில்.'இதுக்கு போய், 'பீல்' செய்யலாமா? சங்கடம் - தர்மசங்கடம் எல்லாம் நம் வாழ்க்கையுடன் இணைந்து விட்டது. அப்புசாமி - சீதா பாட்டி புகழ், பாக்கியம் ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றில் படித்தது...' என்று, கூற ஆரம்பித்தார், அருகிலிருந்த சீனியர் செய்தியாளர்:வெகு ஆண்டுகளுக்கு முன்பு, 'தர்மசங்கடங்கள் நுாற்றெட்டு' என்ற புத்தகத்தை, மூர்மார்க்கெட்டில் வாங்கினேன். அந்த கால புத்தகமானாலும், நவீன கால விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அதிலிருந்து சில பகுதிகள்...இந்த தர்மசங்கடம் இருக்கிறதே, அது எப்போது எந்த ரூபத்தில் வந்து நம்மை இம்சைப்படுத்தும் என்று, யாராலும் சரியாக கணித்துச் சொல்லிவிட முடியாது.இது, கலி காலமாதலால், பல மனிதர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாவர். உதாரணத்துக்கு சில...* 'அய்யா...' என்று குரல் கொடுத்தான், தோட்டக்காரன். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. தொலைபேசி எண் ஒன்று அதில் எழுதியிருந்தது.அவனுடைய உறவினர் ஒருத்தர், மருத்துவமனையில் என்னவோ வியாதிக்காக, 'அட்மிட்' ஆகியிருக்கிறார் என்று செய்தி வந்ததாம். அந்த விபரத்தை அறிந்து கொள்ள, 'அந்த நம்பருடன் பேச வேண்டும்; கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்...' என்றான், என் அருகிலிருந்த, 'லேண்ட் - லைன்' தொலைபேசியை காட்டி.நம் போனை, மற்றவர் பயன்படுத்த விரும்புவது நமக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே செய்யும். கறார், கண்டிப்பு காட்ட முடிகிறதா, கேட்பவன் தோட்டக்காரன். நாலு செடியை பிடுங்கிப் போட்டாலும் போட்டுவிடக் கூடும் * நம் வீட்டுக்கு விருந்தாளி வருகிறார். ஆனால், அவருக்கு, தான் விருந்தாளி என்ற நினைப்பே இருப்பதில்லை. குளிக்கப் போகுமுன், முள் தாடியை தடவியபடியே, 'உங்கள், 'ஷேவிங் செட்' உள்ளேதானே இருக்கிறது. ஒரு வழி வழித்துக் கொண்டு வந்து விடுகிறேன்...' என்று, குளியலறை கதவைச் சாத்திக் கொண்டு விடுவார். நமக்கோ தர்மசங்கடம்* சில விருந்தாளிகள் சின்ன வயசாக இருந்தாலும், நம் மனைவியை ரொம்ப உரிமையோடு பெயர் சொல்லி குறிப்பிடுவர்.மனைவி, அவனது துாரத்திய உறவில், ஏதோ, 'கஸின் சிஸ்டர்' ஆக இருப்பாள். ஆனாலும், நம் எதிரில் சம்சாரத்தை பெயர் சொல்லி ஒரு சின்ன பயல் அழைக்கும் போது, தர்மசங்கடம் பற்றி எரிகிறது* ஒருத்தருடைய சீப்பை இன்னொருத்தர் பயன்படுத்தலாகாது என்பது போன்ற அடிப்படையே தெரியாமல், டிரஸ்சிங் டேபிளிலிருந்து, நம் சீப்பை பிறர் எடுத்து வாரிக் கொள்வதும் பெரிய தர்மசங்கடம்* இரவல் கேட்பதற்கும் எது எல்லை என்று சிலருக்கு தெரிவதில்லை. 'எக்ஸ்ட்ரா சிலிண்டர் இருக்கா; இல்லாவிட்டால் பரவாயில்லை. ராத்திரிக்கு மட்டும் சமையல் ஆக வேண்டியிருக்கு. உங்க சிலிண்டரை எடுத்து போயிட்டு, கொண்டு வந்துடறேன்...' என்பர். நட்பின் பெயரால், அராஜகமான தர்மசங்கடம் இது* 'உங்க வீட்டு, 'ப்ரிஜ்'லே இது இருக்கட்டும். எங்க வீட்டு மாமாவுக்கு தெரிந்தால் கத்துவார்...' என்று, இரண்டு நாள் பழசான பாயசத்தை நம் வீட்டு, 'ப்ரிஜ்'ஜில் திணிக்க இடம் கோருவது, ஒரு வகை தர்மசங்கடமே* பக்கத்து வீட்டுக்கும், நமக்கும் தனித் தனி துணி உலர்த்தும் கொடிகள், வரையறை செய்து வைக்கப்பட்டிருந்தாலும், 'உங்க வீட்டு கொடியில் உலர்த்திக் கொள்ளலாமில்லையா... நீங்கள் இன்று துணி துவைக்கவில்லையே...' என்று, நம் வீட்டுக் கொடியை உபயோகப்படுத்தும் கொடிய பழக்கம் கூட, தர்மசங்கடம் தான்* முதல் நாள் சாயந்திரமே நம் காரில், மறுநாளைக்காக இடம், 'ரிசர்வேஷன்' செய்து விடுவர், சிலர். 'காலையில் நீங்கள் ஆபீஸ் புறப்படுகிறபோது, நானும் வருகிறேன். என்னை வழியில் இறக்கி விடுங்கள்...' என்ற வேண்டுகோள். 'இல்லையே, நான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் புறப்பட்டு விடுவேன்...' என்று சாக்கு சொன்னால், 'எத்தனை மணிக்கு புறப்படுவீர்கள், சொல்லுங்களேன்...' என்று நம்மை நசுக்குவது, தர்மசங்கடமே* வீட்டு உரிமையாளர் என்றால், குடித்தனக்காரரிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்பது, சிலரது எண்ணம். ஆகவே, 'உங்க வாஷிங் மிஷினில் எங்க வீட்டு துணி நாலு போட்டுக்கலாமா... எல்லாம் வெள்ளை துணி தான்...' என்று கேட்பர்.நம் கண்ணில் தர்மசங்கட ரேகை தெரிந்தால், 'மிஷின்தானே துவைக்கிறது. எங்க துணிக்கென்று தனியாவா சுத்தப் போகிறது. ஏதோ கும்பலோடு கோவிந்தா...' என்று சிரிப்பு வேறு.இப்படியாக ஒரு நாளைக்குள் எத்தனை விதமான தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது!- இப்படி நகைச்சுவையுடன் எழுதியுள்ளார், என்று முடித்தார், சீனியர் செய்தியாளர். 'டென்ஷன்' குறைந்து, நார்மலுக்கு வந்த நாராயணன், 'தாங்க்ஸ்' என்று கூறி, ஆசிரியரை சந்திக்க சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !