அந்துமணி பா.கே.ப.,
பா - கேபேத்தியின், பிறந்தநாள் விழாவுக்கு, நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், குப்பண்ணா.ஹோட்டல் ஒன்றின் மினி ஹாலில் நடந்த விழாவுக்கு, அனைவரும், 'ஆஜர்' ஆனோம்.'லென்ஸ் மாமா அண்ட் கோ'வுக்கு அதே ஹோட்டலில், தனியாக ஒரு அறையை, 'புக்' செய்திருந்தார், குப்பண்ணா.விழா கோலாகலமாக நடைபெற, உ.பா., கோஷ்டியினர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டனர். விருந்து உபசாரத்தில், 'பிசி'யாக இருந்தனர், குப்பண்ணாவும், அவரது மனைவியும்.அச்சமயம் எழுத்தாள நண்பர் ஒருவர் பரபரவென்று உள்ளே வந்து, என் அருகில் அமர்ந்தார். பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன்.சற்று நேரத்தில், 'லென்ஸ் மாமா வரலையா?' என்று கேட்டார், எழுத்தாள நண்பர். அவரது நோக்கம் புரிய, லென்ஸ் மாமா இருந்த அறை பக்கம் கை காட்டினேன். 'நீயும் வாப்பா...' என்றார். நான் மறுத்தும், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.எழுத்தாள நண்பரை பார்த்ததும், ஆரவாரமாக வரவேற்றார், லென்ஸ் மாமா. அவரை கலாய்ப்பதில் மாமாவுக்கு அலாதி பிரியம். நண்பரும் அதை, சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்.கொறிக்க வைத்திருந்த, மசாலா வேர்க்கடலையை என் பக்கம் நகர்த்தி, 'பார்ட்டிக்கு வந்தவர்கள் சாப்பிட்டு செல்லட்டும், நாம் பிறகு சாப்பிடுவோம்...' என்றார், மாமா.பேச்சு எங்கெல்லாமோ சென்று, தமிழகத்தில் அடிக்கடி வருமான வரி துறையினர், 'ரெய்டு' பற்றி திரும்பியது. 'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மீடியா'க்களுக்கு பேட்டி கொடுக்கும் போதெல்லாம், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' - செயற்கை நுண்ணறிவு பற்றி அடிக்கடி குறிப்பிடுறாங்களே... அப்படின்னா என்ன?' என்று கேட்டார், அன்வர் பாய்.'கணினி துறையின் வளர்ச்சியடைந்த நவீன தொழில் நுட்பம் தான் இது. இதன் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தலாமாம். ஒருவர் பற்றிய நதி மூலம் ரிஷி மூலம் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியுமாம்.'சமீபத்தில், சந்திரனுக்கு சென்ற சந்திரயான்-3 விண்கலத்திலும் இந்த தொழில்நுட்பம் தான் பயன்பட்டது...' என்றார், லென்ஸ் மாமா.அப்போது, எங்களை சாப்பிட அழைக்க வந்தார், கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குப்பண்ணாவின் மாப்பிள்ளை.பிறகு சாப்பிடுவதாக கூறியதும், அவர், எங்கள் பேச்சில் கலந்து கொண்டு கூறியது இது:ஒருவரின் படைப்பை இன்னொருத்தர் காப்பி அடிச்சு, வெளியிடறாங்கன்னு வச்சுக்கங்க. அதையும் நவீன தொழில்நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.ஒவ்வொருத்தரும் எழுதற முறை வித்தியாசப்படும். சொற்களை பயன்படுத்தும் விதம், குறிப்பிட்ட சில சொற்களை பலமுறை பயன்படுத்தறது, எழுத்தாளரின் நடை ஆகிய அனைத்தையும், கம்ப்யூட்டர் துல்லியமா ஆராய்ந்து, எழுதியவர் யார்ன்னு கண்டுபிடிச்சுடும்.ரஷ்ய இலக்கியத்தில் தலை சிறந்த நாவல்களுள் ஒன்று, 'சைலன்ட் - டான்!' இந்த நாவலை எழுதியவர் யார் என்பதில் சர்ச்சை எழுந்தது.கடந்த, 1920ல், பாய்தர் குறையுகோ என்பவர் எழுதிய நாவலை, மிகேயில் ஷைலோ கோப் திருடி எழுதி விட்டார் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக இருந்தது.கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகமான பின், இந்த நாவலை எழுதியவர் யார் என்பதை, கம்ப்யூட்டர் மூலமா கண்டுபிடிக்க முயற்சி செய்தார், நார்வே நாட்டு பேராசிரியர், சீர் கெசம்ஸா.அந்த இரண்டு எழுத்தாளர்களின் வெவ்வேறு படைப்புகளில் இருந்து, ஆயிரம், ஆயிரம் வரிகளை எடுத்தார். சர்ச்சைக்குள்ளான இந்த நாவலிலிருந்து ஆயிரம் வரிகளை எடுத்துக்கிட்டார். மூன்றையும் கம்ப்யூட்டரில் பதிவேற்றினார்.எழுத்து நடை, சொற்களை கையாண்ட பாங்கு, சொற்களின் பொருள் என, எட்டு அளவுகோல்களை அடிப்படையாக வைத்து, ஆராய்ந்தார்.முடிவில், ஷைலோ கோப் தான் இதை எழுதினார் என்பதை, சில ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டினார்.இன்னொரு உதாரணம் சொல்லலாம்... எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் எழுதிய, 'கடலும் கிழவனும்' என்ற நாவல், முதன் முதலில் வெளியானது, 1936ம் ஆண்டா அல்லது 1952ம் ஆண்டா என்ற கேள்வி எழுந்தது. இந்த நாவலுக்காக பல பரிசுகளை பெற்றிருந்தார், ஹெமிங்வே.இதை கண்டுபிடிக்க, கம்ப்யூட்டர் உதவியை நாடினாங்க.'கடலும் கிழவனும்' நாவலிலிருந்து, 4,500 வார்த்தைகள் மற்றும் ஹெமிங்வே எழுதிய வேற வேற நாவல்களிலிருந்து, 4,500 வார்த்தைகளை எடுத்து, ஆராய்ச்சி செஞ்சாங்க.'கடலும் கிழவனும்' நாவலுக்கு பிந்தைய காலகட்டத்தில் இவர் எழுதிய, 'உலகின் தலைநகர்' என்ற படைப்பு, 'கடலும் கிழவனும்' நாவலின் சாயலில் இருப்பது தெரிய வந்தது. எனவே, 'கடலும் கிழவனும்' நாவல் தான் முதலில், அதாவது, 1936ல் எழுதியிருப்பார் என்று உறுதியானது.கம்ப ராமாயணத்தில் கூட சில பாடல்கள், கம்பரால் எழுதப்பட்டது இல்லை என்று, நாடக புகழ் டி.கே.சண்முகம் சொல்லியிருந்தார்.இதுபோன்ற விஷயங்களை கூட, துல்லியமா கண்டுபிடிக்கிறதுக்கு, நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர் உதவும்.இவ்வாறு கூறி முடித்தார், குப்பண்ணாவின் மாப்பிள்ளை.'ஓய்... நீர் கூட யார் யாருடைய படைப்புகளையோ காப்பி அடித்து, எழுதி தள்ளுகிறீர். சீக்கிரம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் பார்...' என்று, எழுத்தாள நண்பரை கலாய்த்தார், லென்ஸ் மாமா.அவர், முகத்தில் கலவரம் பரவ, 'வாங்க, சாப்பிட போகலாம்...' என்று அனைவரையும் தள்ளிக்கொண்டு, 'டைனிங் ஹால்' நோக்கி சென்றேன், நான்.ப'குருவே... நமக்கு, தீங்கு இழைத்தவர்களை பழி வாங்குவது சரிதானே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...' என்று கேட்டான், சீடன்.'ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்... ஒருவன், தன் செருப்பை கழற்றி கைகளில் வைத்தபடி வெறியோடு கடித்துக் கொண்டிருந்தான்.'எல்லாரும் அவனிடம், 'என்ன செய்கிறாய்?' என, கேட்டனர். 'இந்த செருப்பு என்னை கடித்து விட்டது. விடுவேனா நான், அதுதான் பதிலுக்கு அதை கடித்துக் கொண்டிக்கிறேன்...' என்றான்.'அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார், குரு.'அவன் ஒரு புத்தி கெட்ட பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்...' என்றான், சீடன்.'பழிக்கு பழி வாங்குபவர்களும் அப்படித்தான்...' என்றார், குரு.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.