உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

ஒரு காலத்தில் நடந்த விஷயம்...அது ஒரு ஞாயிற்றுக்கிழமை —காலையிலேயே போன் செய்தார் டாக்டர் நண்பர் ஒருவர். சென்னையில், 'பிராக்டீஸ்' செய்யும் இவர் ஈரோடுக்காரர்; ஊத்துக்குளி மாப்பிள்ளை.சென்னையில் சொந்த வீடு-தனி வீடு ஒன்று வாங்க நீண்ட நெடுங்காலமாக தேடி வருகிறார்; இதுவரை அமைந்தபாடில்லை.'பெசன்ட் நகரில் ஒண்ணேகால் கிரவுண்டில் வீடு இருக்காம்... கூட வா...' என்றார்.போய் பார்த்தோம்!வழக்கம் போல, நூறு குறை சொன்னார்... 'இந்த வீட்டுக்கு இவ்வளவு விலை அதிகம்!' என்றார். 'இவனால் இந்த வீட்டை இந்த ஜென்மத்தில் விற்க முடியாது!' என்றார்.கடுப்பான நான், 'இந்த ஜென்மத்தில் நீங்க வீடு வாங்கப் போறதில்லே டாக்டர்...' என்றேன்.'எப்படியும் என் மகன் கல்யாணத்துக்குள்ள வாங்கி விடுவேன். கவுண்டர்களில், பொண்ணு குடுக்கறதுக்கு முன்னால, பையனுக்கு சொந்த வீடு இருக்கான்னு பாப்பாங்க...' என்றார்.பையன் கல்யாணத்துக்கு இன்னும், 20 வருடம் கிடக்கிறது!'போகலாமா...' எனக் கேட்டபடியே வண்டியை செலுத்தினேன். வழியில், 'பிளேஷர் பாயின்ட்' என்ற உ.பா., கடையைக் கண்டதும், 'நிறுத்து, நிறுத்து!' என்றார்.'மதியம் கொத்துக்கறி உருண்டைக் குழம்பும், தேங்காய் சாதமும் செய்யச் சொல்லி இருக்கேன்... நீ இதெல்லாம் சாப்பிட மாட்டே... ஜில்லுன்னு ஒரு பீரை சாப்பிட்டு போய், சாப்பாடு சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டா சூப்பரா இருக்கும்...' என்றார்.உ.பா., கடையை நோட்டமிட்டேன். நகைக்கடையை அலங்கரித்திருப்பது போல் சூப்பரா இருந்தது கடை. கிரடிட் கார்டு கூட வாங்கி கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.ஒரு ஆசாமி, ஒரு, 'கிரேட்' பியர் வாங்கி கிரடிட் கார்டு கொடுத்துக் கொண்டிருந்தார் — வீட்டில் பார்ட்டி போலும்.ஜில்லாக ஒரு கிங்பிஷ்ஷர் பீரை சுவைத்தபடியே காரில் டாக்டர் வந்து கொண்டிருந்த போது, மொபைல்-போன் கிணுகிணுத்தது. பேசியவர் சுப்புராஜ். கோயம்புத்தூர் ஆசாமி. சென்னையில் கான்ட்ராக்ட், 'தொழில்' செய்பவர்.'மணி... தி.நகர் ரெசிடென்சி பக்கத்தில் இருக்கும், 'குக்கீஸ்' காபி ஷாப்புக்கு வர்றீயா? இந்த இடங்கள் எல்லாம் பார்த்ததே இல்லைன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கியே...' என்றார்.'ஓ... தாராளமாக வருகிறேன்... என்னுடன் டாக்டரும் இருக்கிறார். அவரையும் அழைத்து வரவா?' என்றேன்.'ஓ... வித் பிளஷர்...' என்றார்.குக்கீஸ் —இந்தியாவில் சென்னையில் தான் இருக்கிறோமா என்று எண்ண வைக்கும் உள்ளரங்க அமைப்பு. பெரிய திரையில், ஸ்போர்ட்ஸ் சேனல் காதை பிளக்கும் ஒலியுடன்...அருகருகே போடப்பட்டிருந்த இருக்கைகளில், 18 முதல், 22 வயதுடைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருவர் இடுப்பை ஒருவர் பிடித்தபடியும், ஒருவர் தோள்களில் மற்றவர் சாய்ந்தபடி மிக சுவாதீனமாக சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்தனர்.மீண்டும் எனக்கு இந்தியாவில் தான் இருக்கிறோமா, ரோமாபுரியில் இருக்கிறோமா என்ற எண்ணம் வந்தது.கவுன்ட்டர் அருகே சென்று, 'காபிலாத்தே மூன்று...' எனக் கூறி, 150 ரூபாய் கொடுத்தார். ஒரு காபியின் விலை, 50 ரூபாய். லாத்தே என்றால், இத்தாலிய மொழியில் பால் என்று பொருள். காபிலாத்தே என்றால், இத்தாலிய பால் காபி என்று பொருள்.மிட்டாய் கடையை பார்த்த பட்டிக்காட்டான் போல் டாக்டரும் மிரண்டு போய் அமர்ந்திருந்தார்; அவருக்கும் இது புது அனுபவம்.கடையை அப்படியே சுற்றிப் பார்த்த போது, நோட்டீஸ் போர்டு போல் ஒன்று இருந்தது. அதன் மீது, 'ஹாட் மெயில் — சூடான கடிதங்கள்' என, எழுதப்பட்டிருந்தது.நோட்டீஸ் போர்டில் ஒரே அளவான பல வண்ண பேப்பர்களில் ஏதோ எழுதப்பட்டு, ஊசியால் குத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.எழுந்து படிப்பதற்காக அருகே சென்றேன். அங்கே காபி சாப்பிட வந்தவர்கள் ஆண், பெண்ணுக்கும், பெண், ஆணுக்கும் நேரடியாக தெரிவிக்க முடியாத விஷயங்களை சங்கேத பாஷையில் (அவர்களுக்கு மட்டுமே புரியும் விதத்தில்) எழுதி வைத்திருந்தனர்.சில பெண்களும், ஆண்களும் தம், ஈ-மெயில் முகவரியை கொடுத்து, 'நீங்கள், ஈ-மெயில் செய்தால், அடுத்த அரை மணி நேரத்தில் உங்களுக்கு பதில் கொடுப்பேன்; நம்புங்கள்!' என எழுதி வைத்திருந்தனர்.'டேட்டிங்' செய்வதற்கு இவையெல்லாம் நவீன யுகத்தில் கையாளப்படும் யுக்திகள் போலும் என நினைத்துக் கொண்டேன். காலம் ரொம்ப தான் கெட்டு போச்சு என நினைக்கும் போதே, 'இன்டர்நெட்' சென்டர்களால் நடக்கும் விபரீதம் குறித்து சேலம் வாசகி ஒருவர் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. கடிதம் இதோ:சமூக அக்கறை உள்ள பத்திரிகையாக உங்கள் பத்திரிகையை நினைப்பதால், உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.அறிவியலின் மிக அருவெறுப்பான வளர்ச்சியான இன்டர்நெட்டால் நானும் பாதிக்கப்பட்டேன். ஒன்றும் அறியாத, சரளமாக பேச கூச்சப்படும், வெட்கப்படும் அமைதியான என் அப்பாவி பெண், சீரழிந்த கதையைத்தான் எழுதுகிறேன்.இங்கு கம்ப்யூட்டர் சென்டர்களெல்லாம் காதல் கூடங்களாகவும், இன்டர்நெட் சென்டர்களெல்லாம் விபசார மையங்களாகவும், சீரழிந்து விட்டன. இங்கு தகுதி பெற்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களே கிடையாது. அவர்களிடம் ஆசிரியர் தொழிலுக்கு உண்டான உயர்ந்த பண்போ, நல்ல பழக்க, வழக்கங்களோ இல்லை. 10, +2 பெயில் ஆன பொறுக்கி பையன்களே அங்கு பயிற்சி தரும் ஆசிரியர்கள்.பாடம் நடத்துகிறோம் என்ற பெயரில், ஒன்றும் தெரியாத, வெளி உலகம் தெரியாத அப்பாவி பெண் குழந்தைகளை காதல் + காம வலையில் சிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையையே அழிக்கின்றனர்.அப்பாவி பெண்களின் அழிவு, இதைப் போன்ற புற்றீசல் போல் உள்ள கம்ப்யூட்டர் மையங்களில் தொடங்குகிறது. பின் அவர்களை இன்டர்நெட் என்னும் போதைக்கு அடிமையாக்கி, கம்ப்யூட்டர் சென்டர் ஆசிரியர்களும், அவர்களுடைய நண்பர்களும், சூறையாடுகின்றனர்.ஒரு தியேட்டரில், 'பிட்' ஒட்டினால் நடவடிக்கை. ஒரு பார்க்கில் ஒரு ஆணும், பெண்ணும் தவறாக நடந்தால் நடவடிக்கை, ஆனால், இன்டர்நெட் மையங்களில் ஜோடி, ஜோடியாக வருகின்றனர்... பிரைவசி என்ற பெயரில் ஒரே அறையில் உட்கார்ந்து, 'செக்ஸ் சைட்' பார்க்கின்றனர்... விபசாரமே நடக்கிறது.இதற்கு என்ன நடவடிக்கை... யார் எடுப்பது? அப்பாவி பெண்களின் கற்பு, பல வகையில், பலரால் சூறையாடப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்டு, மனமும், உடலும் நாசமாகி என் பெண்ணைப் போல் எத்தனையோ பெண்கள் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றனர். நாளை என் பெண்ணின் நிலை உங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படலாம். போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கும் ஏற்படலாம். யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்... நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பாதித்தால், அந்த வேதனை புரியும்.நம்மை சுற்றியும் நல்லவர்கள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான பிரகாஷ்கள், கம்ப்யூட்டர் சென்டர் நடத்திக் கொண்டும், இன்டர்நெட் சென்டர் நடத்திக் கொண்டும் இருக்கின்றனர்.இதற்கு தீர்வுதான் என்ன? நான் தனி மனுஷி... என்னால் எதுவும் செய்ய முடியாது. யாராவது பெரிய மனிதர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு போட்டு தடை செய்ய வேண்டும். இந்த பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன? உங்களை போன்ற பத்திரிகைகள் எழுத வேண்டும்; தடை செய்ய கோர வேண்டும்.இந்த கொடுமையை திரும்ப, திரும்பச் சொல்லி, அப்பாவி பெற்றோரை விழிப்படைய செய்ய வேண்டும். அது, உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களால் முடியும்.— கடிதத்தை படிக்கும் போது அழுகையே வந்துவிட்டது!பெற்றோரே... 'இன்டர்நெட் சென்டர்' செல்லும் வயதுக்கு வந்த உங்கள் பெண் மீது கவனம் வையுங்கள்! சரியான இடத்திற்குத் தான் போகிறாளா, இன்டர்நெட்டால் என்ன பயன் பெறுகிறாள், அவளுடைய தோழிகள் யார், பழக்க, வழக்கத்தில் திடீர் மாற்றம் தெரிகிறதா என்பதில் எல்லாம் கவனம் செலுத்துங்கள்... காலம் கெட்டுக் கிடக்கிறது! ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !