அருட்செல்வர், ஏ.பி. நாகராஜன்! (15)
தில்லானா மோகனாம்பாள் படத்தில், பாடல் எழுதும் போது, புற்று நோயால் அவதிப்பட்டு வந்த, அண்ணாதுரையிடம் நலம் விசாரிப்பது போல, அச்சூழ்நிலைக்கான பாடலை எழுதினாராம், கண்ணதாசன்.'நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலந்தானா...' என்பதே, அப்பாடல்.நாகராஜனின், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மற்றும் திருமால் பெருமை போன்ற படங்கள் மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றன. அந்த படங்கள், ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தின.அதனால், பொறாமை கொண்ட மனிதர்கள், 'இவர் படத்தில் சிவாஜி, சாவித்திரி, பத்மினி, நாகேஷ், பாலய்யா, கே.பி.எஸ்., மற்றும் டி.ஆர்.மகாலிங்கம் போன்ற மிக திறமையான நடிகர்களை தேர்ந்து எடுத்து நடிக்க வைக்கிறார்.'பாடல்களை எழுதுகிறார், கண்ணதாசன். இசையமைக்கிறார், மகாதேவன். அப்படிப்பட்ட திறமையாளர்கள் இருப்பதால் தான், அவர் எடுத்த படங்கள் வெற்றி பெறுகின்றன. அதில் என்ன பெரிய ஆச்சரியம். இதில், இவரது திறமை என்ன இருக்கிறது...' என, ஏளனம் பேசி, கிண்டல் செய்தனர்.வழக்கமாக ஏ.பி.நாகராஜனின் படங்களை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்கள் கூட, 'எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி திரைப்படங்களுடன், உங்கள் படத்தை போட்டியாக வெளியிடுவது போல் தோன்றுகிறது. வேண்டாம் இந்த விஷப் பரிட்சை.'அவர்களது இரு படங்களும், வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின், தங்கள் படத்தை வெளியிட்டால் தான், நாங்கள், உங்கள் திரைப்படத்தை வாங்குவோம்...' என்று நிபந்தனை விதித்தனர். அவர்களிடம், 'நீங்கள் வாங்கா விட்டால் பரவாயில்லை; நான் சொந்தமாக வெளியிட்டுக் கொள்கிறேன்...' என்றார், ஏ.பி.என்., அப்படியே வெளியிட்டார்.ஒரு வாரம் கூட்டம் வரவில்லை. ஆனால், ஒருமுறை பார்த்துச் சென்றவர்கள், படத்தைப் பற்றி சிறப்பாக பேசினர். அதன் பிறகு, படத்தைப் பார்க்க ஆரம்பித்த மக்கள் கூட்டத்தினர், அதை வெள்ளிவிழா வரை அழைத்துச் சென்றனர்.அந்த படம் எது தெரியுமா? வா ராஜா வா படம் தான் அது.இந்த இரண்டு பெரும் ஆழிப்பேரலைக்கு மத்தியில், தன் சிறுதோணி போன்ற, வா ராஜா வா என்ற, எட்டு வயது சிறுவனை வைத்து எடுத்த படத்தை வெற்றிபெறச் செய்து, வெள்ளிவிழாக் காண வைத்தார். அதன் மூலம், தன் திறமை மூலமே படங்களை வெற்றி பெறச் செய்கிறேன் என்பதை, தன்னை கேலி பேசியவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். ஏ.பி.என்., தயாரித்த பிரமாண்டமான படமோ, சிறிய முதலீட்டில் எடுத்த படமோ அவரது திறமையான, கடுமையான உழைப்பு எனும் அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட கோபுரங்கள் என்பது தான் உண்மை.வா ராஜா வா படத்தின் கதை முடிவாகி, மகாபலிபுரம் சென்று படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அதுவரை படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்யப்படவில்லை. ஓரிரு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.படப்பிடிப்பின் போது காட்சிகள் எடுக்கப்பட்டன. கதையின்படி, மகாபலிபுரத்திற்கு சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஊரைச் சுற்றிக் காண்பிக்கும் வேலை செய்பவன், மாஸ்டர் பிரபாகர். அதில், அவன் பெயர், ராஜா.அந்த ஊரிலுள்ள முறுக்கு விற்கும் வயதான கிழவி, ராஜாவை மிகவும் ராசியான பையனாக நினைப்பவள். அவள் தினமும் காலையில் அவனிடம் வந்து, ஒரு முறுக்கை கொடுப்பாள். அத்துடன், 'வாடா ராஜா, உன் கையால முதல் முதல்ல முறுக்கு வாங்கினா, எல்லா முறுக்கும் சீக்கிரம் வித்துடுதுடா...' என்பாள். இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டு விட்டது.அன்று மாலை, ஏ.பி.என்., தன் உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, 'படத்திற்கு என்ன பெயர் வைக்கலாமென்று ஒரு யோசனை சொல்லுங்கள். அப்படி யாராவது சொல்லும் பெயர், எனக்கு பிடித்து விட்டால், அந்தப் பெயரை படத்துக்கு வைப்பதுடன், பெயரைச் சொன்னவருக்கு, 200 ரூபாய் பரிசும் கொடுக்கப்படும்...' என்றார்.அனைவரும் மூளையை கசக்கி, பல பெயர்களை கூறினர். எதுவுமே ஏ.பி.என்.,னுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, ஏ.பி.என்.,னின் உதவியாளரும் அவரை நிழல் போல் நாடக மேடைக் காலத்திலிருந்து, தொடர்பவருமான எஸ்.ஆர். தசரதன், 'படத்துக்கு, வா ராஜா வா என்று பெயர் வைக்கலாம்...' என்றார். ஆனால், 'இது என்ன, வை ராஜா வை என்று, சூதாட்டம் ஆடுபவர்கள் சொல்வது போலுள்ளது...' என்றார், ஒருவர். படத்திற்கு அப்பெயரை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பும் தெரிவித்தனர். இருப்பினும், அந்தப் பெயரை ஏன் வைக்க வேண்டும் என, ஒரு விளக்கமும் கொடுத்தார், தசரதன்.படத்தின் கதாநாயகனான ராஜாவை அந்த முறுக்கு விற்கும் கிழவி ஆசையோடும், மிகவும் ராசியானவன் என்றும் நினைத்துக் கூப்பிடும், அந்த வசனத்தில் வரும், வா (டா) ராஜா வா என்ற வார்த்தையிலுள்ள, 'டா' வை மட்டும் எடுத்து விட்டு, வா ராஜா வா என்றே வைக்கலாம்...' என்றார், தசரதன்.அவரின் விளக்கமும், அந்தப் பெயரும் ஏ.பி.என்.,னுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால், அப்பெயரே படத்துக்கு சூட்டப்பட்டதுடன், 200 ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார், தசரதன்.— தொடரும்.நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.தில்லானா மோகனாம்பாள் படத்தை எடுத்தபின், ஏ.பி.நாகராஜனுக்கு ஜெமினி திரைப்பட நிறுவனத்தின் சார்பில், ஒரு படத்தை இயக்க சந்தர்ப்பமளிக்க வேண்டும் என நினைத்தார், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அதனால், ஆனந்த விகடனில் வெளிவந்த, 'ராவ் பகதுார் சிங்காரம்' என்ற கதையை, திரைப்படமாக்க, ஏ.பி.நாகராஜனுக்கு சந்தர்ப்பம் அளித்தார். விளையாட்டுப் பிள்ளை என்ற பெயரில் அக்கதையை படமாக்கினார். அப்படத்தில் கதாநாயகனாக நடித்தார், சிவாஜி. - கார்த்திகேயன்