உள்ளூர் செய்திகள்

வளைகாப்பு கோவில்!

சஷ்டியப்த பூர்த்தி - 60ம் கல்யாணம், சதாபிஷேகம் - 80ம் கல்யாணம் ஆகியவை நடத்த கோவில்கள் உள்ளன. அதுபோல, பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டி, கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரம், காசி விஸ்வநாதர் கோவில், குங்குமசுந்தரி அம்மன் சன்னிதியில் வளைகாப்பு நடத்துகின்றனர்.படைப்பு கடவுளான, பிரம்மா, கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான, 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார்.சிவபெருமானுக்கும், இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, தன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார், முருகன்.இந்த நிகழ்வு, ஆறுபடை வீடுகளில் ஒன்றான, சுவாமி மலையில் நிகழ்ந்தது. முருகனிடம் உபதேசம் பெற, சிவன் வந்த போது, அம்பிகையும் உடன் வந்தாள். அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லி, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார், சிவன்.உமையவள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், 'உமையாள்புரம்' என, பெயர் பெற்றது. சுவாமிக்கு, காசி விஸ்வநாதர் என, பெயர் சூட்டப்பட்டது.குங்குமசுந்தரி அம்பாள் சன்னிதியில், மகாமேரு - மலை போன்ற மேடு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.முற்காலத்தில், இங்கு வசித்த, கமலா என்ற பக்தையின் கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். அவன் குணமாக வேண்டி, அவள், இத்தல அம்பிகைக்கு, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டாள். அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள், அம்பாள். இதனால், அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது.பெண்கள், தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள், நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இவளது சன்னிதி முன், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்ல வேண்டும். அம்பாள் சன்னிதி எதிரில், ராஜமகா வல்லப கணபதி இருக்கிறார்.இவ்வூர் அருகில் சுவாமிமலை, திருவையாறு, திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடி நாதர் கோவில் மற்றும் திவ்யதேசங்களான, கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இதன் மூலம், ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்க வசதி இருக்கிறது.கும்பகோணம்- - திருவையாறு சாலையில், 10 கி.மீ., துாரத்தில் உமையாள்புரம் உள்ளது.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !