உள்ளூர் செய்திகள்

தவறாக பேசும் தரமற்ற போக்கு!

'யாரை பற்றியும், தவறாகப் பேசாத மனிதர் இவர்...' என்று, ஒரு திருமண விழாவில், ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவரை, நான் ஏதோ வேற்று கிரகவாசி போல் வியந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். 'உண்மையாக இருக்குமா?' என, என் விழிகள், வினா எழுப்பியபடி அவரையே உற்று நோக்கின.நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு ஞாயிறன்று, ஏகமாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சுவாக்கில், பல்வேறு வெளி நபர்களை, வார்த்தைகளால் வம்பிற்கிழுத்தனர்; எவருமே, இவர்களது இலக்கிற்கு தப்பவில்லை. பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியரில் ஆரம்பித்து, நேற்று சந்தித்த நண்பர் மற்றும் இன்றைய பொதுவாழ்வு பிரபலங்கள் என, எல்லா தலைகளையும் உருட்டி எடுத்தனர்.நான்கு நண்பர்களுள் ஒருவர் புறப்பட்டதும், இம்மூவரும், புறப்பட்டு போன நண்பரை பற்றி, தவறாக பேச ஆரம்பித்தனர்.நேரம் ஆகிவிடவே, மூன்றாவது நண்பரும் கிளம்ப, இவரை பற்றி, எஞ்சியிருந்த இருவரும், 'இவ்வளவு பேசுறானே... இவன் ரொம்ப ஒழுங்காக்கும்...' என்று ஆரம்பித்து, அவரது வண்டவாளங்களை, 'கிழிகிழி' என, கிழிக்க ஆரம்பித்து விட்டனர்.இக்கதை தான், இன்று, நம் சமுதாயத்தில், சர்வ சாதாரணமாக நடக்கிறது. பிறரை பற்றி தவறாக பேசுவது, நம் சுபாவங்களுள் ஒன்றாகவே ஆகிப் போனது. ஆம்... வர வர, பிறரை பற்றி தவறாக பேசாதிருக்க, நம்மால் முடிவதே இல்லை.மேலை நாட்டவர்களிடம், இப்பழக்கம் இல்லை என்றே சொல்லலாம். முகத்திற்கு நேரே குறை கூறுவரே தவிர, முதுகிற்கு பின் அல்ல!நமக்கு மட்டும் எப்படி இந்த குணம் அட்டையாய் வந்து ஒட்டி கொண்டது! பிறரை பற்றிய கருத்துகளை, அவர்களது முகத்திற்கு நேரே கூற, நமக்கு துணிவு கிடையாது என்பது தான் தலையாய காரணம்.உண்மையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, மேலை நாட்டவர்கள் சுமத்துவதே இல்லை; ஆனால், நாம் இத்தவறை செய்கிறோம்; உறுதிப்படுத்தாத, தவறான தகவல்களை கூட, நேரில் பார்த்த மாதிரி பேசுகிறோம்.ஒரு உண்மையை, நாமெல்லாம் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்...பிறரை பற்றி தவறாக பேசுவதில், நமக்கு சுவாரசியம் இருக்கிறது; இதில், தனி இன்பம் காண்கிறோம். உரியவர்களின் முகத்தில் குத்திவிட்டதை போன்ற திருப்தி கிடைக்கிறது. இவை யாவும், மனத்தின் மோசமான அரிப்புகளே!சொரிந்து கொள்வது சுகம் தான்; ஆனால், அது புண்ணாகி விடும் வாய்ப்பும் மிக அதிகம்.நாம் தவறாக பேசியவை, உரியவர்களை அடைந்ததும், அவர்களாவது, 'சரி... பேசி விட்டு போகட்டும் விடுங்க...' என்று பெருந்தன்மை காட்டுவார்களா என்றால், இல்லை. பழிவாங்குவர்... சொல்லால் மட்டுமல்ல; செயலாலும் கூட!ஒரு நல்ல பதவியில் இருந்தவருக்கு, திடீரென வேலை போயிற்று. பதவியை பறிக்கும் அதிகாரத்தில் இருந்தவரை பற்றி, இவர் தவறாக பேசியதால் தான், இது நிகழ்ந்தது என்று தெரியவந்தது.ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போயிற்று. வேலை தருபவரது காதுகளுக்கு, செய்தி கொண்டு போய் சேர்ப்பவரிடமே, 'அந்தாளாவது வேலை தருவதாவது... எங்கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறார்; சுத்த பிராடு...' என்று இவர் சொல்லப் போக, ஈரை பேனாக ஆக்கி, பேனை பெருமாளாக்குபவருக்கு கேட்க வேண்டுமா? 'வேலை காலியில்லை' என்று கூறப்பட்டு விட்டது.வங்கி மேலாளரது நேர்மையை, ஒரு வாடிக்கையாளர் தவறாக பேச, 'சாங்ஷன்' ஆகவிருந்த கடன் அம்பேல்!நற்சொல் பேசியும், பாராட்டியும், காரியத்தை சாதித்து கொள்வதை விட்டுவிட்டு, வாயால் கெடலாமா? 'நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்' என்பர். இப்படி, நுணல் கெட்டதோ இல்லையோ, மனிதர்கள் ரொம்பவே கெட்டுப் போகின்றனர்.புறம் பேசுவது, தவறாக பேசுவது மற்றும் குறை காண்பது ஆகியவை, ஒரு வகையில் மன நோய்களே! இந்த பேச்சில் சுகம் இருக்கலாம்; ஆனால், விளைவில் பலன் இல்லை!சிலர், நம்மை பார்த்ததும் முகத்தை திருப்பி கொள்கின்றனர். வேறு சிலர், முகம் கொடுத்து பேச மறுக்கின்றனர். ஏன் இப்படி என, நமக்கு புரிவதில்லை. 'நன்றாகத் தானே பேசி கொண்டிருந்தார் நம்மிடம்; இன்று ஏன் இப்படி மாறிப் போனார்...' என்று மனம் வினா எழுப்பும்.எளிய விடை இதுதான்:நாம் இவர்களை பற்றி பேசியவை, பன் மடங்காக்கப்பட்டு, இவர்களது காதுகளை எட்டி விட்டன என்பது தான் காரணமாக இருக்க முடியும்.ஆரோக்கியக் குறைவான இப்பழக்கத்தை விட்டொழிப்போம்; ஆக்கப்பூர்வமாக இனி பேசுவோம்!பாராட்டி மகிழ்வோம்; மற்றவர் மனதில் அழுத்தமாக பதிவோம்.லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !