உள்ளூர் செய்திகள்

முறிவதா, வளைவதா... முடிவு செய்யுங்கள்!

ஏதோ நினைப்பில், அவசரப்பட்டு, ஒரு முடிவை எடுக்கிறோம்; பாதி வழி வந்த பின் தான், நாம் எடுத்த முடிவு, தவறானது என்பது தெரிகிறது.மற்றவர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இவ்வளவு ஏன்... நம் மனதே, நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும், 'நான் முடிவெடுத்தால் எடுத்தது தான்; பின் வாங்கப் போவது இல்லை...' என்று நமக்குள் சொல்லிக் கொள்கிறோம்.பின் விளைவுகளை யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து, பின் வாங்க கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறதே... அது, ஓர் அருமையான சந்தர்ப்பம். ஆனாலும், சிலர் கவுரவம் பார்த்து, 'நஷ்டங்கள் வந்தாலும் சரி, என்ன நேர்ந்தாலும் சரி, இவ்வளவு தூரம் வந்த பின், எப்படி விடுவது...' என்றே எண்ணுகின்றனர். 'சகதியில் விழுந்து, மண்ணில் புரண்டு, பள்ளத்தாக்கில் உருள்வேன்...' என்றா முடிவெடுப்பது... வேண்டாம்.'வேலையை ராஜினாமா செய்து, சுயமாக தொழில் செய்யப் போறேன்...' என்று புறப்படுகிற குடும்பத் தலைவரின் முடிவு கண்டு, குடும்பமே அலறுகிறது. அவர்களது எதிர்ப்புக்கிடையே, 'யாரும் வாயைத் திறக்க கூடாது; நான் முடிவு எடுத்தால் எடுத்தது தான்...' என்கிற அணுகுமுறை இருக்கிறதே, இது, கொள்கையின் உறுதியல்ல; வறட்டு வாதமே!'நான் வேலையை ராஜினாமா செய்வதாக இருக்கிறேன்; இதை பற்றி, நாம் எல்லாருமாக கலந்து பேசணும்; வாங்க, ஒரு மாலையில் உணவகம் போவோம்; சாப்பிட்டபடியே பேசுவோம்...' என்று அணுகுவதே சரி.'மகளே நீ சொல்லு... நான் எடுத்த முடிவு, சரியா...' என்று ஆரம்பித்து, நன்மை, தீமைகளை அலசி, அக்கு வேறு, ஆணி வேறாக ஆக்கினால், எடுத்த முடிவு ஆட்டம் காணும்; இல்லையெனில், அழுத்தமாக மாறும்.மகன் காதல் வயப்படுகிறான்; 'சொத்துல சல்லி காசு கிடையாது; வெளியே போடா...' என்று கூறி, ஒரு தந்தை தன் கொள்கையில் உறுதியாக இருக்கலாம். ஆனால், இக்காலத்து இளசுகளிடம், மூத்த தலைமுறை, பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்கிற நிலைமையே உருவாகி விட்டது. திருமணம் நடப்பது பெரும்பாலும் உறுதி; பெற்றோரின் சம்மதமின்றி நடக்க போகிறதா, ஆசீர்வாதத்துடன் நடக்க போகிறதா என்பது மட்டுமே கேள்வி!பேரன், பேத்தி பிறந்ததும், தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடிப் போகிற தாத்தா, பாட்டிகளே அதிகம்.பெரிய முடிவுகள் என்றில்லை; சிறு முடிவுகளில் கூட, உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் முன், சாதக - பாதகங்களை மனதளவில் அலசிப் பார்க்க வேண்டும். தெளிவான முடிவிற்கு வர முடியாத பட்சத்தில், நண்பர்களை, நல விரும்பிகளை, கலந்து ஆலோசிக்க வேண்டும்.மனம் கொதி நிலையில் இருக்கும் போது எடுக்கப்படும் முடிவுகள், பெரும்பாலும் தவறாகி விடுகின்றன. காரணம், அங்கே ஆத்திரம் தான், தலை தூக்கி தாண்டவமாடுகிறது; அறிவு ஒளியிழந்து விடுகிறது.கொதி நிலை எனும் மனநிலை மாற, ஒரே வழி, முடிவை சற்றே தள்ளிப் போடுவது தான்.'நான், சற்று குழப்பத்தில் இருக்கிறேன்; முடிவெடுக்க சற்று அவகாசம் தாருங்கள்...' என்று விஷயத்தை ஆற போடலாம். நம்முடைய கலங்கிய குட்டை எனும் மனநிலையில், பிறர் அருமையாக மீன் பிடித்து விடுவர்; நஷ்டம் நமக்கு தான்.வளைந்து கொடுப்பதை, ஏனோ கவுரவ பிரச்னையாகவே கருதுகிறோம்.இது அவசியமில்லை... வளைய வேண்டிய இடத்தில், வளைய வேண்டும்; முடிந்தவரை முறிந்து விடாதிருப்பதே புத்திசாலித்தனம்!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !