கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!
வாழைப்பழ வால்நட் கேக்!தேவையான பொருட்கள்: மைதா மாவு - 150 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணெய், சர்க்கரை - தலா 100 கிராம், முட்டை - 2, வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி, பால் - 4 தேக்கரண்டி, வாழைப்பழம் - 2, வால்நட் -- 50 கிராம்.செய்முறை: மைதா, உப்பை ஒன்றாக கலந்து, சலித்து தனியாக வைக்கவும். வெண்ணெய் மற்றும் முட்டையை நன்கு அடித்து கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்சை சேர்க்கவும். பிறகு மசித்த வாழைப்பழம், வால்நட் இவைகளையும் கலந்து கொள்ளவும்.இந்த கலவையுடன், மைதா மற்றும் பாலை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.இந்த கேக் கலவையை, வெண்ணெய் தடவிய பிளேட்டில் வைத்து, மைக்ரோ வேவ் அவனில், 170 சென்டிகிரேடில், 30 - 40 நிமிடங்கள் வேக விடவும். கேக் வெந்ததும் ஆற வைத்து, 10 நிமிடங்கள் ப்ரிஜ்ஜில் வைத்து துண்டு போடுங்கள். ரிச் ப்ரூட் கேக்!தேவையான பொருட்கள்: மைதா மாவு - 300 கிராம், வெண்ணெய், சர்க்கரை - தலா, 200 கிராம், பிரவுன் சுகர் - 50 கிராம், முட்டை - 4, வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி, பாதாம் எசன்ஸ் - அரை தேக்கரண்டி, பால் - 6 தேக்கரண்டி, உலர் பழங்கள் - 150 கிராம், நட்ஸ் (பாதாம், முந்திரி, வால்நட் சேர்த்து) - 50 கிராம், ஒயின் - அரை கப்.செய்முறை: உலர் பழங்களை இரவு முழுக்க, ஒயினில் ஊற வைக்கவும். மைதா மாவையும், உப்பையும் கலந்து சலித்து கொள்ளவும். வெண்ணெயுடன் இரண்டு வகை சர்க்கரையையும் நன்கு அடித்துக் கலக்கவும்.இத்துடன், முட்டை, வெனிலா மற்றும் பாதாம் எசன்சை கலந்து, பீட்டரால் அடித்துக் கலக்கவும். மேலும், மைதாவையும், பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து கலந்த கலவையில், ஊற வைத்த ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ் இரண்டையும் சேர்க்கவும்.இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய பிளேட்டில் கொட்டி சமன் செய்து, அவனில், 160 சென்டிகிரேடில், ஒரு மணி நேரம் வேக வைக்கவும். வெந்து ஆறிய கேக்கை, ஒரு நாள் முழுக்க ப்ரிஜ்ஜில் வையுங்கள்.