அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - எனக்கு ஆதரவாக பேசிய, எம்.ஜி.ஆர்., (3)
'கண் நோயுடன் இருக்கும், எம்.ஜி.ஆர்., எப்படி திருமணத்துக்கு வருவார்...' எனக் கேட்டவர்களுக்கும், 'நீங்கள் என்ன கட்சிக்காரரா, உங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு அவர் வருவதற்கு?' எனக் கேட்டவர்களுக்கும், விடை தரும்படியாக, மாலை 4:00 மணிக்கு சுவையான ஒரு நிகழ்வு நடந்தது. 'யார் இங்கு லேனா தமிழ்வாணன்...' என்று கேட்டபடி, ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபத்துக்குள் நுழைந்தவர், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன். 'ஏதடா இது! திருமண வீட்டுக்குள் போலீஸா?' எனக்குள் சில திரைப்பட கிளைமாக்ஸ் காட்சிகள் வந்து போனது.'வணக்கம் சார்! முதல்வர், உங்கள் இல்லத் திருமணத்துக்கு வருவதாக, இப்போது தான் தலைமைச் செயலகத்திலிருந்து செய்தி வந்தது. நான் பந்தோபஸ்தைக் கவனிக்கிறேன். உங்களுக்குத் தகவல் தரவே வந்தேன்...' என்றார். இது, பூஸ்டர் எண் இரண்டு. மண்டபத்தில், திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த நான், ரவி தமிழ்வாணனை தேடி, ஓட்டப் பந்தய வீரராக மாறி ஓடினேன். செய்தி பரவியதும், என் உறவினர் பலரும், தங்கள் சொந்தங்களுக்கு, தகவல் சொல்லி வரவழைத்தனர்.'உங்கள் தயவுல வாழ்க்கையில முதல் முறையா எம்.ஜி.ஆரை மிக நெருக்கமாக பார்க்கப் போறோம்...' என்று பூரித்துப் போயினர். 'பரவாயில்லையே... நீ நினைச்சதை முடிச்சுட்டே...' என, என் தாயார் மகிழ, மண்டபமே களைகட்ட ஆரம்பித்தது. பரிவாரங்கள் இன்றி, அமைச்சர்கள் புடைசூழாமல், தனி மனிதராக உள்ளே நுழைந்தவர், நேரே வந்து என் கைகளைப் பற்றினார். அவரது உடல் வலிமையை, அவர் கைகளில் உணர்ந்தேன்.மணமக்களை வாழ்த்தி, நேரே போய் முன் வரிசையில் அமர்ந்தார். ஏ.வி.ரமணனின் மெல்லிசைக் கச்சேரி. அவர் உடனே, 'ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்...' என்று ஆரம்பிக்க, எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டார். தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பாடல்களாகவே ரமணன் பாடி அசத்த, எங்களுக்காகவே அந்த மாலையை ஒதுக்கிவிட்டவர் போல், ஆர்வமாக அமர்ந்திருந்தார், எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்த வந்த, ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பாஸ்கரன், 'பிரதர்! தங்க மெடல் வென்றதற்காக, எம்.ஜி.ஆர்., எனக்கு வீடு தருவதாக அறிவித்தது, அறிவிப்போடு நிற்கிறது. அவரை சந்திக்க எவ்வளவோ முயன்றும், 'அப்பாயின்மென்ட்' கிடைக்கவில்லை. அவருடன் பேச வேண்டும். கொஞ்சம் ஏற்பாடு செய்ய முடியுமா?' என்றார். நேரே முன் வரிசைக்குப் போனேன். 'தொந்தரவு செய்றேன். பொறுத்துக்குங்க. ஒலிம்பிக் பாஸ்கரன் உங்களுடன் பேசணுமாம்...' என்றேன். சிரித்தபடியே, 'வரச் சொல்லுங்க...' என்றார்; அவர் கோரிக்கைகளை நிறைவேற்றியும் வைத்தார். 'உங்களால் கிடைத்த வீடு...' என்று, இன்னமும் சொல்வார், பாஸ்கரன்.'எம்.ஜி.ஆரால் கிடைத்த வீடு என்று சொல்லுங்கள்...' என்று திருத்துவேன், நான். எம்.ஜி.ஆர்., எனக்கும், பத்திரிகையாளர் கோட்டாவில், ஒரு வீடு ஒதுக்க, உடன் இருந்த யாரோ, 'ஐயா! லேனா வசதியானவர். அவருக்கு சொத்துக்கள் இருக்கிறது. ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கு அரசு வீட்டை ஒதுக்கக் கூடாது என, விதி இருக்கிறது...' என்று போட்டுக் கொடுத்தார்.'விதியைத் தளர்த்துங்க. தமிழ்வாணன் குடும்பம் தமிழுக்குச் சேவை செய்து வருகிறது. நான் சொன்னதுல எந்த மாற்றமும் வேண்டாம்...' என்றாராம்.நான் என்னத்தைக் கண்டேன்? உடன் இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வீடு ஒதுக்கீடு நடந்த போது, என்னிடம் இதைச் சொன்னார்.'அப்படியா சொன்னார்? அப்படியா சொன்னார்? எங்கே திரும்பச் சொல்லுங்க...' என்று, சிறு குழந்தை போல் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேன். ஒரு காம்பவுண்டில் நீங்கள் செல்லப் பிள்ளையானால், மறு காம்பவுண்டில் கல்தா தான். அரசியல் காம்பவுண்டைச் சொன்னேன்.இதற்கு நேர்மாறாக, நான், கருணாநிதியின் அன்பைப் பெற்றவனாகவும் இருந்தேன். இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா? சொல்கிறேனே! — தெடரும்- லேனா தமிழ்வாணன்