தீபாவளி ஸ்பெஷல்: காரம்!
மகிழம் பூ முறுக்கு! தேவையானவை: பச்சரிசி மாவு - இரண்டு கப், பயத்தம் மாவு - அரை கப், பொடித்த சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி, நெய் அல்லது வெண்ணெய் - இரண்டு மேஜைக் கரண்டி, தேங்காய்ப் பால் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் அரைத்து சலித்து அரை கப் அளவுக்கு மாவை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பயத்தம் மாவு, பொடித்த சர்க்கரை, உப்பு, நெய் அல்லது வெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணிலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். மாவை மகிழம்பூ அச்சில் சேர்த்து, வாழையிலையில் சிறு சிறு வட்டங்களாகப் பிழிந்து விடவும். அந்த முறுக்கை எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். ஓமப் பொடி! தேவையானவை: கடலை மாவு - இரண்டு கப், அரிசி மாவு - ஒரு கப், ஓமம் - கால் கப், பெருங்காயத்துாள் - அரை தேக்கரண்டி, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப. செய்முறை: ஓமத்தை, 3௦ நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கரைசலாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்துாள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வெண்ணெயும் அரைத்து வைத்திருக்கும் ஓம தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், முறுக்கு நாழியில் ஓமப்பொடி அச்சைப் போட்டு, பிழியவும். ஆறியவுடன் நொறுக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். மெட்ராஸ் மிக்ஸர்! தேவையானவை: ரிப்பன் பகோடா மற்றும் தேன்குழல் - கொஞ்சம், ஓமப்பொடி, காராபூந்தி - தலா ஒரு கப், அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா அரை கப், கறிவேப்பிலை - கால் கப், மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி, பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி, எண்ணெய் - பொரிக்க. செய்முறை: ரிப்பன் பக்கோடா மற்றும் தேன்குழலை நொறுக்கி வைத்து கொள்ளவும். வேர்க்கடலை, பொட்டுக் கடலை, கறிவேப் பிலையை எண்ணெயில் பொரித் தெடுக்கவும். அவலை கடைசியாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வடி கரண்டியில் போட்டு பொரித்துக் கொள்ளவும். அவல் பொரிக்கும் போது எண்ணெய் கலங்கல் ஆகிவிடும். அதனால், அவலை எப்போதும் கடைசியில் தான் பொரிக்க வேண்டும். பொரித்தவற்றிலுள்ள எண்ணெயை வடியவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி, கலந்து மிக்ஸரில் துாவி கலந்து விடவும்.