உள்ளூர் செய்திகள்

வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா?

பணத்தைப் பற்றிய பார்வைகள், மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. 'இருப்பது போதும்...' என்கிறவர்கள் முதலாம் ரகம். 'எவ்வளவு இருந்தாலும் பத்தலை...' என்று புலம்புவோர் இரண்டாம் ரகம். எவ்வளவு இருந்தாலும் தேடிக் கொண்டும், அதன் பின்னே ஓடிக் கொண்டும் இருப்பவர்கள் மூன்றாம் ரகம்.இருப்பது போதும் என்பவர்களைப் பற்றி தான் எனக்கு கூடுதல் அக்கறை. ஆசை தான் துன்பங்களுக்கு காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் வெள்ளியங்கிரி சத்குரு. காலத்திற்கு ஏற்ற குரல்கள் இவை!மனிதர்களின் ஆயுள் நீண்டு விட்டது; ஆனால், அதற்கு நேர்மாறாக ஆரோக்கியம் குறைந்து விட்டது. மருத்துவர்களிடம் சென்றால், 'வயசாயிடுச்சுல்ல... அப்படித் தான் இருக்கும்; கட்டுப்பாடா இருங்க...' என்று குறிப்பிட்ட தொல்லைகளுக்கு உதட்டைப் பிதுக்குகின்றனர்.வாழ வாழச் செலவு தான். ஆம்... மருத்துவ செலவினங்கள் கடுமையாகின்றன. எல்லா விதமான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யச் சொல்லி, 'எல்லாம் நல்லா தான் இருக்கு...' என்கின்றனர், மருத்துவர்கள். ஆனால், வலிகள், வேதனைகள் நின்றபாடில்லை. பில் தொகைகள் மட்டும் உயரங்களிலும், அகலங்களிலும் விரிந்து கொண்டே போகின்றன.மருத்துவ செலவினங்களை பார்க்கிற போது, எவ்வளவு கை இருப்பு இருந்தாலும், பருப்பு வேக மாட்டேன் என்கிறது. பில்களுக்கான பணம் கட்டும்போது, அடுத்த தலைமுறையின் முகத்தில் தான் எவ்வளவு எள்ளும், கொள்ளும் வெடிக்கின்றன!என் நண்பர் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இப்பழக்கம் தொடர்பாக சில தொல்லைகள். பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்; செலவு ஏகமாய் ஆகியது. குணமோ தெரியவில்லை. 'வீட்டில் வைத்து, பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், கொண்டு போங்கள்...' என்றனர். மருத்துவச் செலவு, 13 லட்சம் ரூபாய்! பாவம் நண்பரின் மகன்; வங்கி ஊழியர். சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்த, 15ல் 13 லட்சம் ரூபாய் காலி. பொருளாதாரத்தில் மறுபடி புது இன்னிங்ஸ் ஆரம்பிக்க வேண்டும்.இப்போதெல்லாம் ஆகிற மருத்துவ செலவினங்களை பார்க்கும்போது, கையிருப்பை அதிகம் என்று எண்ண முடியவில்லை. நண்பர் மகளுக்கு ஏதோ காய்ச்சல்; நான்கு தினங்கள் மருத்துவமனை வாசம். பில், 40,000 ரூபாய்!கல்வி செலவினங்களும் ஏகமாய் பெருத்து விட்டன. உல்லாச சுற்றுலாக்கள், புராஜக்ட்கள், ஆண்டு விழாப் பங்கேற்புகள் என்று எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை.வாழ்வின் வேகமான பயணத்தில், பயணிக்கும் வாகனத்தில் சக்கரங்கள் கழன்று உருண்டோடினால் என்ன நிலைமையோ, அப்படிப்பட்ட நிலைமை தான் பலரது பொருளாதார நிலைமை.வாகனச் செலவுகள், அன்பளிப்புகள் இவற்றிலெல்லாம் பெரிதாய் என்ன செலவு வந்து விடப் போகிறது என்று எண்ண முடியவில்லை; பர்சுகள் பிய்ந்து போகின்றன.ஒரு தாத்தா நீண்ட ஆயுள் வாழ்ந்தார். 'நான் வாழுகிற வரை எனக்கு இதுபோதும்...' என்று ஏதோ ஒரு கணக்கு போட்டார். பேத்தி திருமணம் இடையில் வந்தது. அன்பின் மிகுதியில் அள்ளிக் கொடுத்தார்; ஐவேஜ் (இருப்பு) அனைத்தும் காலி! இப்போது, தனக்கு பெருஞ் செலவு வந்தால் என்ன செய்வது என்று கை பிசைந்து நிற்கிறார்.நடுத்தர வயதிற்கு பின், பிள்ளைகளது உதவியை எதிர்பார்த்து வாழும் பெற்றோர் பலர், சொல்ல முடியாத மனவேதனையில் மனம் புழுங்குகின்றனர். 'என் மகன் இளைஞனாக, நடுத்தர வயதினனாக இருந்த போது கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்; இன்று, என் செலவுக்கு எண்ணி எண்ணிக் கொடுக்கிறான்; கணக்கு கேட்கிறான். இது கூட பரவாயில்லை; அந்தச் செலவு உங்களுக்கு அவசியம் தானா என்று கேட்கிறான். இது மட்டுமா? 'மாத்திரைகளை குறைங்கப்பா... நிறைய மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடு...' என்று நல்லவன் போல் அறிவுரை கூறுகிறான். மருந்து சாப்பிடாமல் செத்துத் தொலை என்கிறானோ என்று நினைக்க வேண்டியுள்ளது. இப்படி வாழ்வதை விட, பேசாமல் போய் சேர்ந்து விடலாமா என்றிருக்கு...' என வருத்தப்பட்டுப் பேசினார் நண்பர்.'ரத்த பந்தமாவது, சொந்தமாவது, எல்லாம் பணம் செய்கிற வேலை...' என்று உறவினர் ஒருவர், அர்த்தமுள்ள வாக்குமூலம் ஒன்றை தந்த போது, மனசே கனத்து விட்டது.சம்பாதிக்கிறவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதெல்லாம் சும்மா! இதெல்லாம் வேலைக்கு ஆகாது.பேராசையற்ற பொருளாதார சேமிப்பு ஒன்று தான் நல்வாழ்விற்கான ஒரே உத்தரவாதம். 'நாங்க உங்களை அப்படியெல்லாம் கைவிட்டுடுவோமா...' என்கிற வாக்குமூலங்கள் எல்லாம், காலத்தின் ஓட்டத்தில் நீர்த்துவிட கூடியவை!ஆக, இருப்பது போதாது... இன்னும் தேடிச் சேர்ப்போம்; வாரிக் குவிப்போம்!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !