உள்ளூர் செய்திகள்

ராதை கூடவா?

பிருந்தாவனத்தில் கண்ணன் கோவில் அருகில், ஒரு பாபா (சாது) வசித்து வந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ராதையையும், கண்ணனையும் நினைத்து, தெய்வீக உணர்வில் மூழ்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.'ராதா, கண்ணா... அடியேனுக்கு உங்கள் அருள் என்று கிடைக்கும்?' என, கைகளைக் கூப்பி வணங்கி, அழுதவாறே இருப்பார். இடையில் ஓரிரு வீடுகளில் பிட்சை வாங்கி உண்டு வந்தார். மாலை நேரங்களில் கண்ணன் கோவில் போய் வழிபட்டு திரும்புவார். இவ்வாறே, இரவு - பகலாக அழுதழுதே, 40 -ஆண்டுகளை கழித்தார், பாபா. கூடவே, அவர் பார்வையும் போய் விட்டது. அதைப் பற்றி கவலைப்படவில்லை; அழுது வேண்டுவதையும் நிறுத்தவில்லை. ஒரு நாள், ராதையும், கண்ணனும், பாபாவின் எதிரில் வந்து நின்றனர்.'பாபா, ஏன் அழுகிறீர்கள். உங்களை யாராவது திட்டினரா, அடித்தனரா, உடல் வலிக்கிறதா?' எனக் கேட்டார், கண்ணன். பார்வையற்ற நிலையில் இருந்த, பாபா, பிருந்தாவனத்தில், யாரோ மாடு மேய்ப்பவர் வந்து கேட்பதாக எண்ணி, 'இல்லை இல்லை... யாரும் திட்டவும் இல்லை; அடிக்கவும் இல்லை; என் கஷ்டம் எனக்கு. நீ, போய் உன் வேலையைப் பார்...' என்றார். கண்ணன் விடவில்லை.'குடிக்க கொஞ்சம் மோராவது கொண்டு வரட்டுமா பாபா?' என்றார். 'வேண்டாம் வேண்டாம். அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை. என் தேவையே வேறு. நீ போய், உன் வேலையை பார். என்னை தொந்தரவு செய்யாதே...' என்று மறுத்தார், பாபா.ராதையின் முகத்தை கண்ணன் பார்க்க, குறிப்பு அறிந்து, 'ஏன் பாபா அழுகிறீர்கள்... உங்கள் மனைவி உங்களை விட்டுப் பிரிந்து விட்டாளா அல்லது இறந்து போய் விட்டாளா?' என கேட்டார். 'இல்லையம்மா, எனக்கு மனைவியே கிடையாதே...' என்றார். 'பின், யாரை நினைத்து அழுகிறீர்கள்?' என்றார், ராதை.'வேறு யார், என் ராதையும், கண்ணனும் தான்...' என்றார், பாபா.'அந்த ராதையும், கண்ணனும் இப்போது, உன் எதிரில் வந்து நின்றாலும், நீ எந்த கண்ணால் பார்ப்பாய்? உனக்கு தான் பார்வை இல்லையே...' என்றார், ராதை.'அதனால் என்ன, என் கண்களை, ராதையும், கண்ணனும் தொட்ட மாத்திரத்தில், பார்வை வந்து விடாதா! அப்போது, அவர்களை தரிசிப்பேன். எனக்கு என்ன வருத்தம் என்றால், கண்ணன் வேண்டுமானால் என்னிடம் பாராமுகமாக இருந்து வேடிக்கை பார்க்கலாம். 'ஆனால், எங்கம்மா ராதாதேவி கூட இப்படி என்னை அலட்சியம் செய்து, இரக்கமே இல்லாமல் நடந்து கொள்கிறாரே... அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...' என்றார், பாபா.அதிர்ச்சி அடைந்த, ராதை, பாபாவின் ஒரு கண்ணைத் தொட, அடுத்த கண்ணைத் தொட்டார், கண்ணன். அதே விநாடியில் பாபாவிற்கு இரு கண்களிலும் பார்வை தெரிந்தது. அவர், ராதையையும், கண்ணனையும் கண்ட ஆனந்தத்தில் குதித்தார். அப்பழுக்கற்ற பக்திக்கு, நினைத்தது நிறைவேறும் என்பதை விளக்கும் கதை இது. அந்த ராதா - -கிருஷ்ணர் நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்! பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !