தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (6)
உங்கப்பாவை நீ புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதான்!'இந்தப் பாழும் காத்தாடிக்கும், மாஞ்சாவுக்கு ஆசைப்பட்டது தப்பாப் போச்சே. கிருஷ்ணன் வார்த்தையை நம்பி சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய் வகையா மாட்டிக் கொண்டோமே...' என்று, மனம் மருள ஆரம்பித்தது.இரவு, 11:00 மணிக்கு வீட்டுக்குள் வரச் சொல்லி அம்மாவின் உத்தரவு. மணியோ மாலை, 6:00 தான். இன்னும் ஐந்து மணி நேரம் என்ன செய்வது? மேலும், 11:00 மணிக்குப் போனால், சாப்பாடு கிடைக்குமோ இல்லையோ, உதை உறுதியாகக் கிடைக்கும். கையில் இருக்கிற காசுக்குச் சாப்பிட்டு வைப்போம் என்கிற முடிவிற்கு வந்தேன்.அந்தக் காலத்தில், பாண்டி பஜாரில், 'ஓட்டல் டீலக்ஸ்' மிகப் பிரசித்தம். இங்கு வறுத்த கறி, பரோட்டா சாப்பிட, வெகுநாள் ஆசை. விரும்பியதைச் சாப்பிட இன்றைக்குத்தான் கடைசி வாய்ப்பு. அடி வாங்க உடம்பைத் தயார் செய்து கொள்ள வேண்டியது தான்.விரும்பியபடி சாப்பிட்டு விட்டு, பாண்டி பஜாரில் திறக்கப்படாத ஒரு கடையின் படிக்கட்டில் அமர்ந்தேன். பாணாக் காத்தாடிகளை கடை ஷட்டரில் சாத்தி விட்டு, மாஞ்சா நுால் கண்டை, டிராயர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன்.இரவு மணி, 11:00 என்பதை உறுதி செய்து கொண்டு, நாயர் கடையை நோக்கி நகர்ந்தேன். தம்பி ரவி, அங்கு தான் நின்றிருந்தான்.'அப்பா துாங்கிட்டாங்களா?''இன்னும் இல்லை. வீடே முழிச்சிக்கிட்டிருக்கு...''ஐயோ... நான் என்ன செய்ய இப்ப?''வீட்டுக்கு வா. அம்மா உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க...''நான் மாட்டேன். அப்பாகிட்ட யார் அடி வாங்குறது?''பின் வீட்டு புண்ணியகோடி முதலியார், நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். அவரை அழைச்சிட்டு வந்திருக்காங்க, அம்மா. அப்பாவிடம் அவர் பேசியிருக்கார். 'நீ, 11:00 மணிக்கு வருவே. ஆனாப் பையனை அடிக்கக் கூடாது. இனிமே அவன் தப்பு செய்ய மாட்டான். நான் பொறுப்பு'ன்னு, அப்பாகிட்ட சொல்லி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்...''நான் நம்ப மாட்டேன். நீ பொய் சொல்றே...''இல்ல, உண்மையாத்தான். உன்னை அடிக்காம புண்ணியகோடி முதலியார் பார்த்துக்குவார். சும்மா வா...'ரவி முன்னால் நடக்க, நான் வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்தேன். இதயம் தட தடவென ரயில் தடமாய் மாறியது.ஜகஜோதியாய் இருந்தது, வீடு. ஆம்... வீட்டின் வாசல் விளக்குகள், வீட்டினுள் விளக்குகள் என்று, எல்லா விளக்குகளும் எரிய, புண்ணியகோடி முதலியாரும், அம்மாவும் வாசலில் நின்றிருக்க...புண்ணியகோடி முதலியார் எடுப்பான குரலில், 'இதோ வந்துருச்சே புள்ள...' என்றார்.'என்ன ராஜா... இப்படி பண்ணலாமா... உங்கப்பாவை சமாதானப் படுத்துறதுக்குள்ளே பெரும் பாடாயிடுச்சு. வா, அப்பாகிட்ட வந்து மன்னிப்புக் கேளு. இனிமே இந்தத் தப்பைப் பண்ண மாட்டேன்னு கால்ல விழு...''அடிக்க மாட்டாரே...''நிச்சயம் மாட்டார். நான் நிறையச் சொல்லியிருக்கேன்...'என் தோளைக் கையால் பிடித்து முன்னே தள்ளியபடி, பின்னால் வந்தவர், 'புள்ள வந்திருக்குது...' என்றார். அந்த நேரத்திலும் எழுதிக் கொண்டிருந்த அப்பா, என்னைப் பார்த்தபடி பேனாவை மூடி விட்டுக் கண்ணாடியைக் கழற்றியபடி, 'ஏண்டா, உனக்கு புத்தி இப்படிப் போகுது. நீ திருந்தவே மாட்டியா?''இல்லப்பா...' என, பெருங்குரலில் அழுதபடியே, 'இனிமே சத்தியமா செய்ய மாட்டேம்பா...''ராஜா... கால்ல விழு...' என்றார், புண்ணியகோடி முதலியார்.விழுந்தேன். எழுந்திருக்கச் சொல்லிய புண்ணியகோடி, 'மன்னிச்சிடுங்கப்பான்னு சொல்லு...' என்றார்.'மன்னிச்சிடுங்கப்பா...'அப்பா ஏதும் பேசவில்லை. மவுனமாக இருந்தார். பின் வீட்டிற்குப் புறப்பட ஆரம்பித்த புண்ணியகோடி முதலியாரிடம் கெஞ்சினேன்.'நீங்க போயிடாதீங்க. நீங்க அந்தப் பக்கம் போனதுமே எனக்கு அடி விழும்...''உங்கப்பாவை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதான். சொன்னா, சொன்னதுல நிப்பார். நிச்சயம் உனக்கு அடி கிடையாது. ஆனா ஒண்ணு, அடுத்த முறை இப்படி நீ ஒரு தப்புப் பண்ணிட்டு வந்து நின்னீன்னா, நான், உனக்காக வந்து பேச மாட்டேன்.'அடி பயங்கரமா இருக்கும். நல்ல புள்ளையா நடந்துக்க, ராஜா. திருட்டுப் பசங்க சகவாசத்தால ஏன் இப்படிக் கெட்டுப் போறே... 50 ரூபாய்ங்கிறது கொஞ்ச நஞ்சக் காசா... ஏன் இப்படிப் பண்ணுற... உன்னோட கூடப் பொறந்ததுங்களப் பாரு. ஒண்ணாவது இப்படி ஏதும் தப்புப் பண்ணுதுங்களா?'கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள், துாக்கி வாரிப் போட்டது எனக்கு.'நீ, உன் அப்பாவோட பார்வையில வளர்ந்திருந்தீன்னா, இப்படியெல்லாம் தப்புப் பண்ணியிருப்பியா?'எவ்வளவு கனமான, அர்த்தம் பொதிந்த கேள்வி!தமிழ்வாணனை கவுரவித்த கனடா!தமிழ் வாணனின் தமிழ்ப் பணிகளை நன்கு ஆராய்ந்து, அவருக்கு கவுரவம் செய்யும் வகையில் கனடா நாடு, அவருக்கென ஒரு தபால் தலையை வெளியிட்டது.மிகச் சில உலகத் தமிழர்களே பெறக்கூடிய கவுரவம் இது.— தொடரும்லேனா தமிழ்வாணன்