உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

தயாரிப்பாளருடன் லாரன்ஸ் மோதல்!

காஞ்சனாவைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ்- தமன்னா நடிக்கும், ரெபல் என்ற படத்தை இயக்கி வருகிறார் லாரன்ஸ். இப்படத்துக்கு, 22.5 கோடி என்று முதலில் பட்ஜெட் போட்ட அவர், இப்போது அதை, 40 கோடியாக்கி விட்டார். இதனால், லாரன்ஸ் மீது, அப்படத்தின் தயாரிப்பாளர், ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதை எதிர்த்து, தன்னிடம் தெரிவிக்காமல் படத்தின் டப்பிங் மற்றும் ரீ-மேக் உரிமையை தயாரிப்பாளர் விற்றுவிட்டார் என்று, லாரன்சும் அந்த தயாரிப்பாளர் மீது, புகார் அளித்துள்ளார். — சினிமா பொன்னையா

சென்சார் போர்டை சாடும் பாலுமகேந்திரா!

'சென்சார்போர்டு சான்றிதழ் எல்லாம், படங்களின் தரத்தை தீர்மானித்து விடாது...' என்கிறார் பாலுமகேந்திரா. நான் இயக்கிய, மூன்றாம் பிறை படத்துக்கு, 'ஏ' சான்றிதழ் கொடுத்தனர். ஆனால், மக்கள் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். வெற்றி விழா கொண்டாடிய அப்படம், தேசிய விருது பெற்றது' என்று சொல்லும் அவர், 'தயாரிப்பாளருக்கு லாபம், மக்களுக்கு நல்ல செய்தி - இது தான் ஒரு படத்துக்கான இலக்கணம்' என்கிறார். — சி.பொ.,

அமலாபால் மேற்கொள்ளும் அழகு பராமரிப்பு!

அமெரிக்கா சென்று அழகு சிகிச்சை செய்த பின், அமலாபாலின் அழகு மெருகேறியுள்ளது. இந்த உடல் பளபளப்பை, அப்படியே பாது காக்க வேண்டும் என்பதற்காக, குடிக்கிற தண்ணி முதல், குளிக்கிற தண்ணீர் வரை, ரொம்ப கவனமாக இருக்கிறார். அதோடு, நான் - வெஜ் உணவு களை தவிர்த்து, இயற்கை உணவுகளையே அதிகமாக எடுத்துக் கொள்கிறார். தனக்குத் தனக்கு என்றால், தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்!— எலீசா

விக்ரம் பிரபு பலப்பரீட்சை!

கும்கியைத் தொடர்ந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீ-மேக் படத்தில் கமிட்டாகி விலகிய விக்ரம் பிரபு, இப்போது, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த கதை, ஆர்யாவுக்காக தயார் செய்யப்பட்டது என்பதால், அவருக்கு இணையான நடிப்பை தானும் வெளிப்படுத்தி, தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, 'ரீகர்சல்' எடுத்து நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.— சி.பொ.,

தயாரிப்பை தொடரும் பிரகாஷ்ராஜ்!

என்ன தான் இந்தி சினிமா வரை, மார்க்கெட் பரந்து விரிந்தாலும், படம் தயாரிப்பதை விடவில்லை பிரகாஷ்ராஜ். ராதாமோகன் கூட்டணியில், மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை தயாரித்தவர், தற்போது, கவுரவம் என்ற படத்தையும் தயாரித்து, தானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.— சி.பொ.,

தமிழில்,'டப்'பாகும் காஜல் படங்கள்!

மாற்றான் மற்றும் துப்பாக்கி படங்களில் நடித்ததையடுத்து, காஜல் அகர்வாலின் கோலிவுட் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காஜல் நாயகியாக நடித்த தெலுங்கு படங்களை தமிழுக்கு, 'டப்' செய்து வெளியிடும் வேலைகள் வேக மாக நடக்கின்றன. அதில், முதல் படமாக, மகேஷ்பாபுவுடன் காஜல் அகர்வால் நடித்த, பிஸ்னஸ் மேன் என்ற படம் தமிழில் ரிலீசாகிறது. கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக் கொள்!— எலீசா

மீண்டும் ஆர்யா-நயன்தாரா!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில், நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த ஆர்யா, மீண்டும் ஒரு படத்தில் நயனுடன் நடிக்க, பேச்சு வார்த்தை நடக்கிறது. இப்படமும் முந்தைய படம் போன்றே, காதல் பிளஸ் காமெடி கதை என்பதால், சென்டிமென்டாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று உற்சாகமாக கூறி வருகிறார் ஆர்யா.— எலீசா

டாக்டர் சீனிவாசனுக்கு சிபாரிசு செய்த சந்தானம்!

சந்தானம் ஹீரோவாக நடிக்கும், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்து, அதில் காமெடியனாகவும் நடிக்கிறார், 'பவர்ஸ்டார்' சீனிவாசன். இதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், ஐ படத்திலும் சந்தானத்துடன் இணைந்து காமெடி யனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானத்துடன் நடிக்க, இன்னொரு காமெடி நடிகரை தேடிய போது, டாக்டர் சீனிவாசன் இந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று, சந்தானம் அவருக்கு சிபாரிசு செய்துள்ளார்.— சினிமா பொன்னையா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !