உள்ளூர் செய்திகள்

முதல் தேநீரின் ருசி!

ஒவ்வொரு நாளும் தேநீர் அருந்தும் சமயங்களில் எல்லாம், நான் அருந்திய முதல் தேநீரை பற்றிய நினைவு வந்து, மனம் பல வித்தியாசமான உணர்வுகளில் தத்தளித்து, நினைவுகள் பின்னோக்கி செல்லும். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்; ஏழு வயது வரை, ஆடு, மாடுகளின் பின் அலைந்து, சாணி பொறுக்கியபடியும், காடு கழனிகளில் திரிந்தும், கண்மாய் தண்ணியில் குதியாலம் போட்டபடி இருந்தவனை, படிக்க வைத்ததில், இரண்டு நபர்களுக்கு, பெரும் பங்கு உள்ளது.முதலாமவர், ராவுத்தர் வாத்தியார்; அவர் தான், அரைக்கால் சட்டையுடன், புழுதியில் அலைந்து கொண்டிருந்தவனை, இழுத்துப் போய், பள்ளியில் சேர்த்தார். அன்றைய ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கு, பிள்ளைகளையும், குடும்ப கட்டுப்பாட்டுக்கு, பெரியவர்களையும் பிடித்துப் போவதும் தான், பிரதான பணிகள்.இரண்டாமவர், அப்போது தமிழக முதல்வராயிருந்த, பெருந்தலைவர் காமராஜர்.அவர் மட்டும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து, ஒருநாள் நெல்லுக் கஞ்சியும், அடுத்த நாள் கோதுமை உப்புமாவும் போட ஏற்பாடு செய்திருக்கவில்லையென்றால், நிச்சயமாக, பள்ளிக்கூடம் இருக்கிற திசையில் கூட, தலை வைத்து படுத்திருக்க மாட்டேன்.எங்கள் வகுப்பிலேயே, நான் தான் நன்றாக படிப்பேன் என்பதால், வகுப்பில் லீடராக இருந்ததுடன், ஆசிரியர் சொல்லும் போது மணி அடிப்பதும் என் வேலை தான். இதற்கு மாணவர்களிடையே பெரும் போட்டியே ஏற்படும். அத்துடன், 'ஒண்ணுக்கு, தண்ணிக்கு...' என்று, பள்ளிகளில் வழக்கத்திலிருக்கும், 15 நிமிஷ இடைவேளை பீரியடிலும், ஆசிரியர்களுக்கு, 'மீட்டிங்' நடக்கும் போதும், அவர்களுக்கு, டீ வாங்கித் தருவது போன்ற வேலைகளை, நான் தான் செய்வேன். இதையெல்லாம், மிகவும் சந்தோஷமாகவே செய்தேன்.ஆசிரியர்களுக்கு டீ வாங்கித் தருகிற வேலை என்பது, தலையில் கிரீடம் அணிந்திருப்பதற்கு சமமானது. மற்ற வேலைகளை கூட, அவ்வப்போது விட்டு தந்து விடுவேன்; ஆனால், டீ வாங்கித் தருகிற வேலையை மட்டும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்.ராவுத்தரின் டீயில், இனிப்பு தூக்கலாக இருக்க வேண்டும்; ரத்தினசாமிக்கு இனிப்பே கூடாது; பெருமாள் சாமிக்கு ஸ்ட்ராங் டீ; கந்தசாமி வாத்தியாருக்கு காபி என, யார் யாருக்கு என்ன தேவை என்பது எனக்கு அத்துபடி.மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் எடுக்கும், கமலாம்பாள் ஆசிரியை பிரசவ விடுப்பில் போயிருந்ததால், ஆறு மாதத்திற்கு மட்டும் வெளியூரிலிருந்து தற்காலிகமாக வந்திருந்தார், மாரிமுத்து வாத்தியார்.அவருக்கு, தலைமையாசிரியர், தனி கிளாசில் டீ வாங்கி வரச் சொன்னதிலிருந்து, அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டேன்.எல்லா கண்ணாடி கிளாஸ்களும், ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்பதால், அதை, தனியாக அடையாளப்படுத்துவதற்காக, அந்த கிளாசின் அடிப்பகுதியில், சிவப்பு பெயின்டால், சின்னதாய் அடையாளம் வைக்கப்பட்டிருக்கும்.டீ போடுகிற சண்முகம் மாமா ஒவ்வொரு முறையும், 'எத்தனை டீடா?' என்ற கேள்விக்கு பின், 'மாரிமுத்து வந்துருக்கானாடா?' என்று தான் கேட்பார். மற்ற வாத்தியார்களை எல்லாம், 'சார்வாள்...' என்று விளிப்பவர், மாரிமுத்து வாத்தியாரை மட்டும், 'டா' போட்டு தான் கூப்பிடுவார்.நான் ஆமென்று சொன்னதும், எரவானத்தில் சொருகி இருக்கும், தனி கிளாசை எடுப்பார். சேரியிலிருந்து, எப்போதாவது டீ குடிக்க வருவோருக்கு, அதில் தான் டீ ஊற்றிக் கொடுப்பார். அந்தக் கிளாசை, டீ குடிப்பதற்கு முன்பும், டீ குடித்த பின்பும் அவர்களே தான் கழுவி வைப்பர்.பள்ளியிலும், மற்ற வாத்தியார்கள் எல்லாம் டீ குடித்ததும், கிளாசை அப்படியே கொடுக்க, மாரிமுத்து வாத்தியார் மட்டும், கிளாசை கழுவி கொடுப்பார்.ஒவ்வொரு முறை டீ கேரியரை என்னிடம் தரும் போதும்,'கிளாசை மாத்திக் குடுத்துடாதடா...' என்பார், சண்முகம்.ஒருநாள், மாரிமுத்து சார் குடிக்கும் டீ கிளாசில், மற்ற வாத்தியார்கள் குடித்தால், அப்படி என்ன தான் ஆகிவிடுமென்று நினைத்து, அவரின் கிளாசை கணேசமூர்த்தி வாத்தியாருக்கு கொடுத்து விட்டேன். அப்போது, மீட்டிங் நடந்து கொண்டிருந்ததால், அவரும் கிளாசை கவனிக்காமல், குடிக்கத் துவங்கி விட்டார். பாதி குடித்ததும், கிளாசில் இருந்த சிவப்பு புள்ளியைப் பார்த்து, பதறி, வாயிலிருந்த டீயை துப்பி, என்னை அடித்து, துவைத்து விட்டார்; தலைமையாசிரியரும் சேர்ந்து அடித்தார்.ஆசிரியர்கள் சிலர், மாரிமுத்து வாத்தியாரை திட்டத் துவங்கினர். 'நான் நெஜமாவே கவனிக்கல சார்...' என்று, தான் செய்யாத குற்றத்திற்கு, அவர் மன்னிப்பு கேட்பதைப் பார்க்க, பாவமாக இருந்தது.'ஏந்தான் மாற்றிக் கொடுத்தேனோ...' என்று, என்னை நானே கடிந்து கொண்டேன். ராவுத்தர் வாத்தியார் தான், 'சரி விடுங்க மூர்த்தி... டீயை குடிச்சதுனால செத்து போயிட மாட்டீங்க...' என்று, அவரை சமாதானப்படுத்தினார்.மாரிமுத்து குடித்த டீ கிளாசை உடைத்து, அதற்கான பணத்தை என்னை கொடுக்கும்படி சொன்னார், கணேசமூர்த்தி. என்னிடம் ஏது அவ்வளவு பணம்... நான் அழுத போது, கணேசமூர்த்தி உடைத்த கிளாசிற்கான பணத்தை மாரிமுத்தே கொடுத்தார்.டீக்கடைக்காரருக்கு இது தெரிய வந்ததும், அவரும் என்னை திட்டினார். அத்துடன், அக்கிளாசின் வெளி விளிம்பில், 'பளிச்'சென்று தெரிவது போல், பெரிய புள்ளியை வைத்து, 'இனிமேல், கிளாஸ் மாறிப் போக, வாய்ப்பே இல்லை...' என்று திருப்தி பட்டுக் கொண்டார்.ஆனால், 'இனிமேல் தனக்கு டீ வேண்டாம்...' என்று சொல்லி விட்டார் மாரிமுத்து. அதற்கு பின், அப்பள்ளியிலிருந்து பணி முடிந்து, வெளியே போகும் வரை, அவர் டீயே குடிக்கவில்லை.ஒருமுறை, தலைமை ஆசிரியர் கூட, 'பரவாயில்ல குடிப்பா... அன்னைக்கு ஏதோ நாராசமா நடந்து போச்சு; அதையே, ஏன் நினைச்சுட்டு இருக்குற...' என்று, சமாதானப்படுத்திய போதும், அவர், டீ குடிக்க சம்மதிக்கவில்லை.இந்நிலையில் தான், எனக்கும் ஒருநாள், டீயை ருசி பார்க்க, ஆசை வந்தது. எங்கள் குடும்பமும், அன்றாடங்காய்ச்சி தான்; பால் கலந்த டீ என்பதெல்லாம், கனவில் மட்டுமே காண கிடைக்கும்.எப்போதாவது, அம்மாவிற்கு தலை வலித்தால், கருப்பட்டியும், சுக்கும் தட்டிப் போட்டு, வரக்காபியாகக் குடிப்பாள்; அதிலும், எனக்கு துளி கூட கொடுக்க மாட்டாள்.'இது கெட்ட பழக்கம்டா... ஒருமுறை குடிச்சு பழக்கமாயிட்டா, தினமும் குடிக்கச் சொல்லும். பித்தம்; அதோட, நம்மளால எல்லாம், தெனந்தெனம் வேலையத்துப் போயி, இதப் போட்டுக்கிட்டு இருக்க முடியுமா...' என்று சொல்லி விடுவாள்.அப்போது, டீயின் விலை, 15 பைசாவோ, 20 பைசாவோ தான். ஆனால், அதுவே, எனக்கு மிகப் பெரிய தொகை; அம்மாவிடம் பள்ளிக்குப் போகும் போது, எப்போதாவது அடம் பிடித்தால், அதிகபட்சமாக, மூன்று பைசா கொடுப்பாள்.அதற்கு, சேமியா ஐஸ்சோ, ஆரஞ்சு மிட்டாயோ அல்லது கல்கோனோவோ தான் கிடைக்கும். அப்படியிருக்கையில் எப்படி டீ வாங்கிக் குடிக்க முடியும்... அதனால், ஒருநாள் வாத்தியார்கள் எல்லாரும், டீ குடித்த பின், அவர்கள் குடித்த கிளாசில் மிச்சமிருக்கும் டீத்துளிகளை, ராவுத்தரின் கிளாசில் சேகரித்து, ஆசையுடன் குடிக்க போன போது, எங்கிருந்தோ அதை பார்த்து விட்டார், ராவுத்தர் வாத்தியார்.கோபமாய் அழைத்தார். 'அடி பின்னப் போகிறார்...' என்று, நடுங்கியபடி அருகில் போனேன். அவரோ, வாஞ்சையாய் தலையை தடவி, 'அப்படியெல்லாம் குடிக்க கூடாதுப்பா...' என்று, அன்பாய் சொல்லி, அடிக்காமலேயே அனுப்பினார். அவரின் அந்தச் செயல், டீ குடிக்கும் ஆசையை மட்டுப்படுத்தியது.மறுநாள், நான் டீ வாங்க கிளம்பிய போது, கூடுதலாக ஒரு டீ வாங்கி வரச் சொல்லி, அதை, எனக்கு கொடுத்தார், ராவுத்தர் வாத்தியார். நான் சங்கோஜப்பட்டு மறுத்த போது, அவர் வற்புறுத்தி கொடுத்தார். அதை வாங்கி, வகுப்பறையிலிருந்து வெளியே வந்தேன். ராவுத்தர் வாத்தியாரின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை கூப்பிட்டு, டீயை கொடுத்தேன். 'வாப்பா வாங்கி குடுத்தாராண்ணே...' என்று கேட்டவர்களிடம், 'அவர் குடுக்கல; அப்பாட்ட சொல்லாதீய; குடிங்க...' என்றேன். அவர்கள் 'மடக்மடக்'கென்று குடித்து, சிட்டாக பறந்து விட்டனர். எங்களூரில், எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பிற்கு, பக்கத்தில் உள்ள, பாலவத்ததிற்கோ அல்லது குல்லூர்சந்தை என்ற ஊருக்கோ தான் போக வேண்டும். இதனால், என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலோர், பள்ளிக்கு போவதை நிறுத்தினர்.சைக்கிள் வைத்திருப்போரும், பஸ்சில் செல்லக் கூடிய பொருளாதார வசதி உள்ள சிலர் மட்டும், பாலவத்தம் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால், குல்லூர் சந்தையில் உள்ள பள்ளிக்கு, பஸ் வசதி கிடையாது. முள் மரங்களுக்குள் ஒற்றையடிப் பாதையில் தான் நடக்க வேண்டும். சைக்கிளில் போனால், பாதி வழியில் டயர் பஞ்சராகி விடும். மேலும், பெருமழை பெய்தால், ஆற்றில் வெள்ளம் வந்து, பள்ளிக்குப் போக முடியாது; பள்ளியிலிருந்தால், வீட்டிற்கு திரும்ப முடியாது.என் படிப்பை நிறுத்தி விடத் தான் விரும்பினாள், அம்மா. ஆனால், 'பிள்ளை நன்றாகப் படிக்கிறான்...' என்று, அம்மாவிடம் எடுத்துக் கூறி, என் படிப்பை தொடர, அனுமதி வாங்கி தந்தார், ராவுத்தர் வாத்தியார்.ஆனால், அம்மா, 'தன்னால், தினமும் பஸ்சுக்கு பணம் தர முடியாது...' என்று சொல்லி, குல்லூர்சந்தையில் போய் படிக்கச் சொன்னாள்; நானும் அப்படியே போய் சேர்ந்தேன்.முதல் நாள், பள்ளியில் சேர்ந்து, சாயங்காலம் வீட்டிற்கு திரும்ப நடந்து வந்த போது, பாதையில், அங்கிருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்திருந்தார், மாரிமுத்து வாத்தியார். அதுதான் அவரது சொந்த ஊர். அவரைப் பார்த்ததும், மலர்ந்து, 'சார் எப்படி இருக்கீங்க, நல்லாயிருக்கீங்களா...' என்று கேட்கவும், ஒரு நிமிஷம், என்னை அடையாளம் தெரியாமல் குழம்பியவருக்கு, நான் சொன்னதும், அடையாளம் கண்டு, சந்தோஷமானார்.நான், எவ்வளவோ மறுத்தும், வற்புறுத்தி, அவருடைய வீட்டிற்கு அழைத்துப் போனார்.வீட்டில், அவருடைய அம்மா மட்டும் இருந்தார். வீட்டையும், அவரின் அம்மாவின் கோலத்தையும் பார்த்ததில், வசதியானவர்கள் இல்லை என்று தெரிந்தது.'டீ குடிக்கிறியாப்பா?' என்று, மாரிமுத்து வாத்தியார் கேட்கவும், 'வேண்டாம் சார்...' என்றேன். உடனே, அவர், 'அதுவும் சரி தான்... நீ எப்படி, எங்க வீட்ல டீ குடிப்ப; வேணுமின்னா, பக்கத்து கடையிலிருந்து வாங்கியாரட்டுமா...' என்று கேட்கவும், நான் பதறி, 'அதெல்லாம் இல்ல சார்... உங்க வீட்டுலயே போட்டு குடுங்க குடிக்கிறேன்...' என்று சொல்லவும், அவருடைய அம்மாவும், சந்தோஷமாக டீ போடப் போனார்.திண்ணையில் உட்கார்ந்து, ஊரைப் பற்றியும், பள்ளியைப் பற்றியும் ஆவலாக விசாரித்தார். அவருடைய அம்மா அலுமினியக் கிளாசில் இருவருக்கும், டீ போட்டு எடுத்து வந்தார். இஞ்சி, ஏலக்காய் மணக்க, டீ சுவையாக இருந்தது.அன்று, மாரிமுத்து வாத்தியார் வீட்டில் நான் குடித்த தேநீரின் ருசியை, எனக்கு வசதி வந்து, பெரிய நட்சத்திர ஓட்டல்களில் குடிக்க நேர்ந்த போதும் கூட அனுபவித்ததில்லை; தேநீரின் ருசி என்பது, தேநீரில் மட்டுமா இருக்கிறது! சோ.சுப்புராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !