உள்ளூர் செய்திகள்

கடலைத் தேடாத மீன்கள்!

எதிர்பார்த்த அளவிற்கு இன்று வியாபாரம் இல்லை என்பதால், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள் மாலதி. 'இந்த மாத வியாபாரம், கடை வாடகை, கரண்ட் பில் கட்ட கூட தேறாது போலிருக்கே...' என்று நினைத்த போதே, அவள் மனதிற்குள், கவலைகள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டன. ஆனால், எந்த கவலையும் இல்லாமல், மீன்கள், கண்ணாடிப் பெட்டிக்குள், அழகாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளும், ஒவ்வொரு விதமான மீன்கள். 'டிவி' ஷோரூம்களில் எப்படி, நிறைய, 'டிவி'யை, ஓட விட்டு கலர்புல்லாக வைத்திருப்பார்களோ, அது போன்று, மாலதியின் வண்ண மீன் நிலையம், வண்ணக் கலவையாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. கடைக்குள் வந்து விட்டால், ஏதோ ஆழ் கடலுக்குள், ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டிக் கொண்டு, முத்தெடுக்க வந்து விட்டது போன்ற பிரமை வந்து விடும்.எப்போதும் விழித்திருக்கும் மீன்களின் விழிகளும், 'சர் சர்' என்று, அது பாய்ந்து செல்லும் வேகமும், மாலதியை எப்போதுமே ஆச்சர்யப்பட வைக்கும். 'இந்த மீன்கள் நீந்துவதைப் போல்,கவலையே இல்லாமல், நானும் வாழ்க்கையில் சந்தோஷமாய் நீந்த வேண்டும்...' என்று, அடிக்கடி, தன் தோழி லாவண்யாவிடம் சொல்லிக் கொண்டிருப்பாள் மாலதி. உண்மையில், லாவண்யா வீட்டில், மீன்கள் வளர்ப்பதை பார்த்த பின் தான், மாலதிக்கும் வண்ண மீன்கள் வளர்க்கிற எண்ணமே வந்தது.ஒரு பெரிய தொட்டியில், அழகாக, ரோஸ் ஜெல்லியை வைத்திருந்தாள். அதிலிருந்து வெளிச்சம் பட்டு, அந்த அறையே, 'பிங்க்' கலருக்கு மாறியிருந்தது.'ஏய் மாலதி, இந்த வெரைட்டிய பார்க்குறியா... இது ஒயிட் மோலி. எங்க அண்ணா, கோவா போயிருந்தப்ப வாங்கி வந்தது. அண்ணா இதை, 'வாஸ்து மீன்'ன்னு சொல்லிக் கொடுத்தான். இந்த ஒயிட் மோலி தான் என்னோட செல்ல பெட். பயங்கர க்யூட் தெரியுமா...' லாவண்யா கண்களை சிமிட்டியபடி, இன்னொரு கண்ணாடிப் பெட்டியை பார்த்து சொன்னாள். அன்று பிடித்தது மாலதிக்கு மீன் பைத்தியம்.மீன்களை தேட தேட, அது, ஒரு பெரிய உலகமாக விரிந்து கொண்டே போனது. மில்லி மீட்டர் அளவில் இருக்கக் கூடிய மைக்ரோ ஷால்க் முதல், அஞ்சு கிலோ எடை உள்ளே ரெட் குப்பீஸ் வரை, ஆயிரக்கணக்கான மீன் வகைகளை பார்த்து, அதிசயித்து போனாள்.ஆரம்பத்தில், பொழுது போக்காகத் தான் ஆரம்பித்தாள். ஒரு சிறிய கண்ணாடி குடுவைக்குள், மரியானா டிவைடரில் துவங்கியது, மாலதியின் மீன் ஹாபி.காலையில் எழுந்தவுடனே, மீன் முகத்தில் தான் விழிப்பாள். நீச்சலடித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மீனும், எத்தனை மில்லி மீட்டர் வளர்ந்திருக்கிறது என்பதை, கண்களாலேயே அளந்து விடுவாள்.'என்னங்க, இங்கே வாங்களேன்... இந்த மரியானா டிவைடர் குஞ்சு பொரிச்சுருக்கு...' என்று, ஒரு நாள், ஊரே கேட்கற மாதிரி கத்தினாள்.'உன்னோட அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா...' என்று, செல்லமாய் திட்டிக் கொண்டே, அவள் சந்தோஷத்தில், பங்கெடுத்துக் கொண்டான் அஜய்.'மாலதி, நான் உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லட்டுமா?''நீங்க என்ன சொன்னாலும், எனக்கு அது சந்தோஷம் தான். அதனால, சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல!''நம்ம நியூபேர்லேண்ட் ஏரியாவுல, கிரவுண்ட் ப்ளோர்ல, இருபதுக்கு இருபது, ஒரு கடை வாடகைக்கு வருது. அந்த கடைக்கு, 'அட்வான்ஸ்' கொடுக்கட்டுமா... அங்க, ஒரு வண்ண மீன் நிலையம் வெச்சு பார்த்துக்க. உனக்கு பிடிச்ச வேலை, நல்லா பொழுது போகும்...' என்றான்.இப்படித்தான், பல சமயங்களில், மனைவியை அசத்தி விடுவான் அஜய்.அப்படியே, அவனை கட்டிக் கொண்டாள் மாலதி.'தேங்க்யூ மை ஸ்வீட் பாய்...' மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள் மாலதி.ஒரு வாரம், ஆபீசுக்கு லீவ் போட்டு, எங்கெங்கோ தேடித் திரிந்து, வண்ண வண்ண மீன்களை வாங்கி வந்தான் அஜய்.ஆரம்பத்தில், நன்றாக இருந்த பிசினஸ், போகப் போக டல்லடிக்க ஆரம்பித்தது. மீன்களுக்கு உணவு வாங்கி போடுவதற்கே, நிறைய செலவாகியது. நான்கைந்து மாதங்களாக, அஜய் தான், கரன்ட் பில், வாடகை, மெயின்டனன்ஸ் என்று, அத்தனை செலவுகளையும் பார்த்து கொள்கிறான். ஆரம்பித்த புதிதில், இருபதாயிரம் ரூபாய் வரை கல்லா கட்டிக் கொண்டிருந்தாள். போக போக குறைந்து கொண்டே வந்து, இந்த மாதம் ஆயிரம் ரூபாயை கூட தாண்டவில்லை. 'இந்த வாரத்திற்குள், ஒரு இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்கு, வியாபாரம் நடந்தால் கூட, சமாளித்து விடலாம். ஆனால், ஐயாயிரம் ரூபாய்க்கு கூட, வியாபாரம் ஆகாது போலிருக்கே...' என்று நினைத்த போது, மாலதிக்கு அழுகையே வந்து விட்டது. இத்தனைக்கும், ஒரு முறை கூட, 'கடையை மூடி விடு...' என்று, அஜய் சொன்னதில்லை. ஒரு மாதமாவது,'இந்தக் கடையில், இந்த மாதம் இவ்வளவு லாபம்' என்று சொல்லி, அவனை சந்தோஷப்படுத்தி ரசிக்க வேண்டும் என்று நினைப்பாள். அது, ஒவ்வொரு மாதமும் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த மாதமும் அது நிறைவேற வழியில்லையே என மனம் வருந்திக் கொண்டிருக்கையில், வாசலில் ஒரு வெள்ளை நிற, ஸ்கார்பியோ கார் வந்து நின்றது.இரண்டு பேர் இறங்கி வந்தனர்.'எங்கேயோ பார்த்திருக்கிறோமே...' என்று, உள்ளுக்குள் ஒரு பொறி தட்டியது.''ஓ... டைரக்டர் தருண்! சார்... வாங்க வாங்க, வாவ் ...நான் எதிர்பார்க்கவே இல்லை சார்.''''உங்ககிட்ட தான் இண்டர்நேஷனல் லெவல்ல மீன் வகைகள் கிடைக்கும்ன்னு என் அசிஸ்டென்ட் டைரக்டர் ராகேஷ் சொன்னார்.''டைரக்டர் தருண், பல வெற்றிப்படங்களை தந்தவர். தத்ரூபமாக இவர் வடிவமைக்கும் காட்சிகளுக்காக, நேஷனல் அவார்டு வாங்கியவர். 'இவர் நம்ம கடைக்கு வந்திருக்கிறாரா...' சந்தோஷ அதிர்ச்சியுடன், டைரக்டரையே பார்த்துக் கொண்டு நின்றாள் மாலதி.''மேடம், ஷூட்டிங்கிற்கு நல்ல கலர்புல்லா, காஸ்ட்லியான, ஒரு மீன் வேணும். நல்ல ஆக்டிவா, எமோஷன் காட்டற மாதிரி இருந்தா நல்லது. நீங்களே, 'செலக்ட்' செய்து கொடுங்களேன்,'' ஆக் ஷன் செய்தபடியே மாலதியிடம் கேட்டார் டைரக்டர் தருண்.''அதோ அந்தக் கார்னர்ல பாருங்க சார், ஜெர்மன் பைட்டர். பயங்கர ஆக்டிவ்; படு ஸ்பீடா இருக்கும். நீங்களே கொஞ்ச நேரம், 'அப்சர்வ்' பண்ணிப் பாருங்க சார் தெரியும்.''கொஞ்ச நேரம், அந்த ஜெர்மன் பைட்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் டைரக்டர்.''யெஸ் மேடம், இது நல்லாருக்கே. ராகேஷ் இங்க பாருப்பா, நான் என்ன எதிர்பார்த்து வந்தேனோ, அதே பீலிங்ல ஒரு மீன். நல்ல ஆக்டிவா இருக்கு,” என்று ரசனையுடன் சொன்னார் டைரக்டர் தருண்.மாலதிக்கு பயங்கர சந்தோஷம். அந்த மீன் அக்வாரியம், பேக்கேஜோடு சேர்த்தால், ஐம்பாதியிரம். டைரக்டர் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிடுவார்.''மேடம், என்ன ரேட்ன்னு சொல்லலியே?''''ஐம்பதாயிரம் ரூபாய். டோர் டெலிவரி உண்டு சார். நீங்க சொல்ற அட்ரசுக்கு வந்துடும்.''''நோ ப்ராப்ளம் மேடம். காலைல ஆர்.பி.எம்., ஸ்டுடியோல தான், ஷூட்டிங். ஸ்பாட்ல டெலிவரி செய்துடுறீங்களா?''''ஓ ஷ்யூர் சார்.''மகிழ்ச்சியில், பறந்து கொண்டிருந்தாள் மாலதி.அந்த மீனின் அழகையே ரசித்துக் கொண்டிருந்த டைரக்டர்,''ராகேஷ், இந்த மீன் வர்ற சீனைச் சொல்றேன் கேட்டுக்க. ஹீரோ, ரொம்ப ஆசையா பார்க்ல, காதலிக்காக வெயிட் பண்ணிட்டுருக்கான். ஆனா, காதலி நேரா வந்து, ஹீரோ கிட்ட, 'சாரி பிரபு, உன்னை, எனக்கு பிடிக்கல, என்னை மறந்திடு'ன்னு சொல்லி, திரும்பிப் போயிடறா. 'கட்' பண்ணி, கேமராவை திருப்புனோம்னா, இந்த மீன் இருக்குற அக்வாரியம் பாக்ஸ், கீழே விழுந்து நொறுங்குது. அவனோட இதயம் துடிக்கிற மாதிரி, இந்த மீன் துடிதுடிக்குது. தண்ணியில்லாம, கொஞ்சம் கொஞ்சமா, அதோட துடிப்பு அடங்கிடுது.'' கட் பண்ணி, கேமராவை, திருப்புனோம்னா, ஹீரோ, பார்க்ல சுருண்டு கிடக்குறான். ஹீரோ துடிதுடிச்சு, அடங்கற அந்த சீன்ல, இந்த மீனை சிம்பாலிக்கா காட்டறோம். எப்படியிருக்கும்?'''' க்ளாஸா இருக்கும்.''''நோ...'' கத்தியே விட்டாள் மாலதி. ''சாரி சார். நான், உங்களுக்கு மீன் விற்க மாட்டேன். இது, வெறும் மீன் மட்டுமில்ல சார். என்னோட உயிர்; என்னோட ஆத்மா. அதோட ஒவ்வொரு அசைவும், என் குழந்தை அசையற மாதிரி அத்தனை அழகு. ஒவ்வொரு மீனும், என்னோட குழந்தைங்க சார். அழகா வச்சு பராமரிக்க முடியும்ன்னு சொல்றவங்களுக்கு தான் கொடுப்பேன். தொட்டியை உடைச்சு, துடிதுடிச்சு சாகறதுக்குன்னா... நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. ப்ளீஸ் சார்... மீன் இல்லை போயிடுங்க,'' அவள், கண்ணீர் மல்க கத்தினாள்.''என்னப்பா... இந்த லேடி பிழைக்க தெரியாதவங்களா இருக்காங்க. ஐம்பதாயிரம் ரூபாய் பிசினசை அசால்ட்டா வேணாம்ன்னு சொல்லுது,'' கிண்டலாய் சிரித்தபடி, படிகளில் இறங்கி சென்றனர் டைரக்டரும், அசிஸ்டென்ட் டைரக்டரும்.கண்ணாடித் தொட்டிக்குள் இருந்த, ஜெர்மன் பைட்டரை பார்த்தாள் மாலதி. அது, முன்பை விட, இன்னும் சந்தோஷமாக, 'சர் சர்' என ரவுண்ட் அடித்தது. ஓடிச் சென்று, கண்ணாடித் தொட்டியோடு, மீனைக் கட்டிக் கொண்டாள்.ஆதலையூர் சூரியகுமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !