உள்ளூர் செய்திகள்

ஊர் கூடித் தேர்... (6)

குவைத்தில் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் தமிழர்கள் இருந்தும், குழந்தைகள் தமிழ் கற்க, அங்கு பள்ளிகளில் வழி இல்லை. அந்த குறையை, 'தமிழ் கற்போர் குழுமம்' இலவசமாக தீர்த்து வைத்திருக்கிறது. இதன் நிறுவனர் விஜயபிரியா ரமணன், சமூக சேவகர், பேச்சாளர் மற்றும் குவைத்தில் உள்ள தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பன்முக திறமை கொண்ட பண்பாளர். தமிழ்சார் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்.கடந்த, 10 ஆண்டுகளாக சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான, சாந்தி பள்ளியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றாலும் கூட, தமிழில் மிகுந்த புலமை கொண்டவர், விஜயபிரியா. 'தமிழ் கற்போர் குழுமம்' துவங்கப்பட்டத்தில் இருந்து பலவாறாக விஸ்தரிக்கப்பட்டு விவாதங்கள், திருக்குறள் பாராயணம், திருப்பாவை பாராயணம் மற்றும் சுதந்திரத் தியாகிகள், விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அத்துடன், 'கொரோனா' நிவாரணம் போல ஏதேனும் உதவி தேவை ஏற்படும் போதெல்லாம், இப்பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மனமுவந்து பங்களிக்கின்றனர்.தமிழ் கற்போர் குழுமத்தின் உன்னத சேவை, வளர்ந்து வரும் இளம் குழந்தைகளின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை தந்தித்திருப்பது நிஜம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விடாமல் துரத்தியது இனிமையான அனுபவம்.குவைத், 'இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' விழாவிற்கு கலாமை அழைத்தோம். அப்போது வரமுடியாத சூழலை, அதை உடனே கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஓய்வு பெற்ற பின், மீண்டும் அவரை சந்திக்க, சென்னை துார்தர்ஷனின் முன்னாள் இயக்குனர், மறைந்த ஏ.நடராஜனுடன் டில்லி சென்றேன்.கலாமின் பங்களாவில் ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லை. அவரை போலவே செயற்கைப் பூச்சில்லா அமைதி. வீட்டைவிட பெரிதாய் முன்புறம் பெஞ்சுகளுடன் புல்வெளி. நுழைந்ததும், ஹாலில் சொகுசு காட்டாத இருக்கைகள்.தாமதிக்காமல் கலாம் வந்து அன்போடு எங்களை வரவேற்று, 'குவைத்துல பணம் சேகரிச்சு இங்கே நம்மூரில் பல கோடி ரூபாய் உதவி பண்ணியிருக்கீங்க, நல்லது. அங்கே அரபு நாடுகள்ல சரியான தங்கும் வசதி கூட இல்லாம அறைக்கு எட்டு பேர்ன்னு இருப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவி பண்ணலாமே...' என்றார்.'அதுவும் நிறைய செய்யறோம் சார். இதுக்காகவே எங்கள் அமைப்பில், 'வாலன்டியர்ஸ்' வைத்திருக்கிறோம். இந்திய துாதரகத்துடன் சேர்ந்து, பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு, பணம், பொருள், தங்குமிடம், உணவு கொடுத்து, பத்திரமாய் அவர்களை ஊருக்கும் அனுப்பி வைக்கிறோம்...' என்று, கையோடு எடுத்து போயிருந்த செய்தி பத்திரிகைகளை பெருமையுடன் காட்டினேன்.'எல்லாம் சரி, இவ்ளோ செலவு பண்ணி எதுக்கு இங்கே வந்தீங்க... நான் என்ன செய்யணும்?' என்றார்.'நீங்க குவைத்துக்கு வரணும். அங்குள்ள, 18 இந்திய பள்ளி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உற்சாகம் தரணும்...' என்று சொல்லி, அழைப்புக் கடிதத்தை நீட்டினேன். வாங்கி ஆவலாய் படித்து, செயலரை தன்னிடம் அழைக்காமல், இவரே போய் கடிதத்தையும், மற்ற விவரங்களையும் கொடுத்து, பயணத்திற்கு பரிசீலிக்கச் சொல்லிட்டு, 'கட்டாயம் வரேன்...' என்றார். என் புத்தகங்களை அங்கேயே புரட்டி பார்த்து, 'ஏற்கனவே நான் சிலதை கவனிச்சிருக்கேன். நிறைய எழுதுங்க...' என்று, வாழ்த்தினார்.அதற்குள் அவரிடம் எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற தெம்பு வந்திருக்க, சந்தடி சாக்கில், 'நானும் உங்க கல்லுாரி தான் சார்...' என்றேன்.'அப்படியா... எந்த ஹாஸ்டல்?' என்று வெகுளியாய் கேட்டு, 'நான் படிக்கும்போது நியூ ஹாஸ்டல்ன்னு பேர் வெச்சாங்க... இன்னும் அதேதானா?' என்று சிரித்தார்.ரொம்ப சகஜமாய் பேசிக் கொண்டிருந்தவர், எதிர்பாராமல் சட்டென எழுந்து, அடுத்து வெளியே காத்திருப்பவரின் நேரம் என்பதை உணர்ந்து, 'சரி பார்போம்...' என்று கும்பிட்டு வழியனுப்பினார்.அடுத்து, 'அன்புப்பாலம் 60ம் ஆண்டு விழா'வில், அவர் கையால் சிறந்த சேவையாளர் விருது பெற்றது, இன்னொரு பாக்கியம். அந்த விழாவுக்காக வந்திருந்த, கலாம், கவர்னர் மாளிகையில் தங்கியிருக்க, அவரை மரியாதை நிமித்தம் போய் பார்க்க வேண்டும். ஆனால், விடுவரோ என்னவோ தெரியவில்லை என்று, பாலம் ஐயா கல்யாணசுந்தரம் தயங்கினார்.'வாங்க நானிருக்கேன்...' என்று, அவரது குழுமத்தையும் சேர்த்து அழைத்துப் போனேன். அன்று இரவு, 11:00 மணி வரை கலாம் அவர்களுடன்... இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. கலாம் சாரின் குவைத் வருகை எப்படியிருந்தது?— தொடரும்என். சி. மோகன்தாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !