பாரதி அன்பர்களே புறப்படுங்க!
டிச., 11 பாரதியார் பிறந்தநாள்'காணி நிலம் வேண்டும் பராŒக்தி காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதியார், எந்த தேவியிடம் வேண்டினார் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டம், கடையம் வில்வவனநாதர் கோவிலில் உள்ள நித்யகல்யாணி அம்மனிடம்.தேவர்களுக்கும், கம்பாசுரனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக தசரதர் சென்று, அசுரர்களை கொன்றார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடினார். அந்த நதிக்கரையில், சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை வணங்கினார். அவரது அருளால், நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார். அயோத்தியில் ராமராஜ்யம் நடந்த போது, அகால மரணமே யாருக்கும் ஏற்படவில்லை. இதைக் கண்டு பொறாமைப்பட்ட சம்புகன் என்ற கொடியவன், அங்கே, அகால மரணம் ஏற்பட வேண்டும் என, இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை, ராமபிரான் கொன்று விட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக, அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணியையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பின், தத்துவசாரா நதிக்கு, 'ராம நதி' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நதி, தற்போது கடையம் பகுதியில் ஓடுகிறது. நதியை ஒட்டி கோவில் உள்ளது.பாரதியார், கடையம் கிராமத்தின் மருமகன். இங்கு வசித்த செல்லம்மாளை திருமணம் செய்த இவர், சில வருடங்கள் தங்கியிருந்தார். அப்போது வில்வவனநாதர் மற்றும் நித்யகல்யாணி அம்பாள் மீது, பல பாடல்களை பாடினார். அவர் எழுதிய நவராத்திரி பாடலில், 'உஜ்ஜெயினீ நித்ய கல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி' என்று பாடினார். சங்கரன்தேவி, சரஸ்வதி மாதா, மகேஸ்வரன் தோழி, மகாலட்சுமி, உத்தமதேவி என்று, அவர் நித்யகல்யாணி அம்மனை வர்ணித்துள்ளார். கோவில் முன்புள்ள தட்டப்பாறையில் அமர்ந்து, 'காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.'கல்யாண்' என்றால் மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு, வளம், கருணை, நன்மை தரவல்லது, ஆசிர்வாதம், பரிசுத்தமானது, வணங்கத்தக்கது, சொர்க்கம் என்ற பொருட்கள் உண்டு. அதிலும், இத்தலத்து அம்மன், நித்யகல்யாணி என்பதால் எந்நாளும், எந்நேரமும் வரம் அருளுபவளாகக் கருதப்படுகிறாள்.இவள் உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கி இருந்தாள். பூஜை செய்யும்போது, சிறு தவறு ஏற்பட்டாலும், அர்ச்சகர்கள் இறந்து விடுவர். இதனால், கோவில் பக்கமே செல்ல அஞ்சினர். பிற்காலத்தில், அம்பாளின், 16 தியான கலைகளில், 15 கலைகள், ஒரு பீடத்தில் ஆவாகனம் செய்யப்பட்டது. இதை தரணி பீடம் என்கின்றனர். மீதியிருந்த ஒரே ஒரு கலையுடன் சாந்ததேவியாக அம்பாளுக்கு பூஜைகள் துவங்கின. அதன் பின், பிரச்னை ஏற்படவில்லை. தரணி பீடத்தில் நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர்.இந்தக் கோவிலில், தற்போது திருப்பணி நடக்கிறது. ஜனவரி 23ல் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. பக்தர்களும், பாரதி அன்பர்களும் இந்தக் கோவிலுக்கு சென்று வரலாம். பாரதி பாடல் எழுதிய தட்டப்பாறையில் அமர்ந்து, அவரைப்பற்றிய நினைவுகளில் மூழ்கலாம். அவர் வணங்கிய நித்யகல்யாணி அம்பாளின் திருப்பணியிலும் பங்கேற்கலாம்.திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., அல்லது தென்காசியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் கடையம் உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து மூன்று கி.மீ. தூரத்தில் கோவில். போன்: 94430 03562. ***தி. செல்லப்பா